மத்திய கிழக்கிற்கு மேலும் ஒரு போர்க்கப்பலை அனுப்ப டிரம்ப் முடிவு

Share

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள், போர் விமானங்களை மத்திய கிழக்கில் நிலைநிறுத்தி உள்ளது. போரில் ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் டிரோன், ஏவுகணைகளை வீசி வருகிறது. இந்த நிலையில் மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்கா மேலும் ஒரு மிகப்பெரிய போர்க்கப்பலை அனுப்ப உள்ளது. ஏற்கனவே ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல்களான யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன், யு.எஸ்.எஸ். ஜெரால்ட் ஆர். போர்டு ஆகியவை ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது 3-வது விமானம் தாங்கிக் கப்பலான யு.எஸ்.எஸ். ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் மத்திய கிழக்கு நோக்கி செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அக்கப்பல் ஈரானை நோக்கி விரைகிறது. இதன் மூலம் வரும் நாட்களில் ஈரான் மீதான தாக்குதலை மேலும் அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈரான் மீது இஸ்ரேல் புதிய பரந்த அளவிலான வான்வழித் தாக்குதல்களை அறிவித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: “ஈரான் ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தது போல் தற்போது இல்லை. ஒரு வாரத்திற்கு முன்பு அவர்கள் சக்திவாய்ந்தவர்களாக இருந்தனர். இப்போது அவர்கள் உண்மையில் பலவீனப்படுத்தப்பட்டுள்ளனர். ஈரானில் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் நன்றாக நடத்தும் புதிய தலைமை வர வேண்டும். ஈரானில் ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது நேரடியானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.இந்த செயல்முறையில் நான் ஒரு பங்கை வகிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வெனிசுலாவில் தலைமை மாற்றத்தில் நாங்கள் செய்தது போல் ஈரானிலும் அதை செய்ய வேண்டும். மதத் தலைவர்களைப் பற்றி எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் நிறைய மதத் தலைவர்களுடன் பழகுகிறேன். அவர்கள் அற்புதமானவர்கள். ஈரானில் நியாயமாக இருக்கும் ஒரு தலைவர் இருக்க வேண்டும் என்று நான் கூறி வருகிறேன்.”இவ்வாறு டிரம்ப் கூறினார்.

இதற்கிடையே அமெரிக்க மந்திரி ஸ்காட் பெசென்ட் கூறும்போது, “ஈரானின் ஏவுகணை உள்கட்டமைப்பை குறிவைத்து மிகப்பெரிய தாக்குதலை நடத்த அமெரிக்கா ஒரு திட்டத்தை தயாரித்து வருகிறது. ஈரானிய ஏவுகணைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளுக்கு நாங்கள் அதிக சேதத்தை ஏற்படுத்துவோம்” என்றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>