யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
செம்மணியில் எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தாங்களாக நீதிமன்றம் போகப்போவதில்லை. அவற்றை தமிழ் மக்கள்தான் நீதிமன்றத்திற்கு கொண்டு போக வேண்டும். குறிப்பாக ஐநா அதனைச் செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் அண்மையில் நாட்டுக்கு வருகை தந்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தனது வருகையின் முடிவில் கொழும்பில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்த உத்தியோகபூர்வமான கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு உற்சாகமூட்டுபவைகளாக இல்லை. உள்நாட்டு விசாரணை பொறிமுறையை வெளிநாட்டு உதவிகளோடு மேம்படுத்துவது தொடர்பாகத் தான் அவர் அங்கு பேசியிருந்தார்…”முடிவாக இது நாட்டின் (இலங்கையின்) பொறுப்பாகும்,மேலும் இந்த செயல்முறை தேசிய அளவில் சொந்தமானது என்பது முக்கியம். அதோடு,இது சர்வதேச வழிமுறைகளால் பூர்த்தி செய்யப்பட்டு ஆதரிக்கப்படலாம்.”என்று அவர் கூறினார்.
அதுபோலவே அவருடைய வருகையின் பின்னணியில் கொழும்பில் உள்ள ஐநா வதிவிடப் பிரதிநிதி “அததிரண” காணொளி ஊடகத்துக்கு தெரிவித்த கருத்துக்களும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவைகளாக இல்லை. எனவே இந்த விடயத்தில் ஐநா தலையிட்டு தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத் தரும் என்று தமிழ்மக்கள் காத்திருக்க முடியாது. அதற்காக ஐநாவை விரோதிக்கவும் தேவையில்லை. நீதிக்கான போராட்டத்தில் ஐநாவை தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நோக்கி உந்தித்தள்ளும் விதத்தில் தமிழ் மக்கள் ஐநாவை நோக்கியும், ஐநாவில் முடிவெடுக்கும் அதிகாரத்தோடு உள்ள நாடுகளை நோக்கியும் மேலும் கடுமையாக உழைக்க வேண்டியிருப்பதைத்தான் ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய இலங்கை வருகை தமிழ் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது.
இந்த விளக்கத்தின் பின்னணியில், செம்மணியைப் பார்க்கலாம்.மனிதப் புதைகுழிகளை மட்டும் அல்ல தமிழ் மக்கள் மத்தியில் கொல்லப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், சித்திரவதைக்கு உள்ளானவர்கள், தமது சொத்துக்களை இழந்தவர்கள்…. போன்ற எல்லாத் தரப்புகளுக்கும் நீதி கிடைக்கத்த விதத்தில் அவர்கள் தொடர்பான தேவையான தரவுகளைத் திரட்ட வேண்டிய பொறுப்பு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் உண்டு.
உதாரணமாக,செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பான விவரங்களைத் திரட்ட வேண்டும். இது முதலாவது கட்டம்.அடுத்த கட்டம் செம்மணியில் கண்டெடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் மரபணு மாதிரிக்கும் முறைப்பாடு செய்யும் உறவினர்களின் மரபணு மாதிரிகளுக்கும் இடையிலான தொடர்பைப் பரிசோதிப்பது.அதற்குரிய தொழில்நுட்பம் இலங்கையில் இல்லை என்று கூறப்படுகிறது. அவ்வாறாயின் அந்த தொழில்நுட்பத்தை வெளியில் இருந்து பெறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வது. இந்த விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகமாக உழைக்க முடியும்.
இந்த இரண்டு நடவடிக்கைகளின் முடிவில் எலும்புக் கூடுகளுக்கும் அவற்றின் உறவினர்கள் என்று சந்தேகப்படுகின்றவர்களுக்கும் இடையிலான உறவுகள் நிரூபிக்கப்படுமாக இருந்தால், அங்கே குற்றச் செயல்களை நிரூபிக்கப்படக்கூடிய நிலைமைகள் அதிகரிக்கும்.
கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ரெப்ரெப்னிக்காவில் அவ்வாறு மரபணுச் சோதனைகள் மூலமாகத்தான் புதைக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டார்கள்.
எனவே புதை குழிகளுக்கு நீதி கேட்பது என்று சொன்னால் அதற்கென்று விஞ்ஞானபூர்வமான வழிமுறைகள் உண்டு.இந்த விடயத்தில் புதை குழிகளை வைத்து அரசியல் செய்யும் தமிழ்க் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் மேற்சொன்ன அறிவுபூர்வமான அடுத்தடுத்த கட்டங்களை நோக்கிப் போக வேண்டும்.
புதை குழிகளை வைத்து அரசியல் செய்ய வேண்டும். அது தவிர்க்க முடியாதது. ஏனென்றால் நீதிக்காக போராடும் ஒரு மக்கள் கூட்டத்தை பொறுத்தவரை புதைகுழிகள் உணர்ச்சிகரமானவை. அவை புதைக்கப்பட்ட உண்மைகளை வெளியே கொண்டுவரக் கூடியவை. உண்மை வெளியே வந்தால்தான் அந்த உண்மையின் அடிப்படையில் விசாரணைகளைச் செய்யலாம். நீதியை நிலை நாட்டலாம்.
இப்போதுள்ள இலங்கை அரசாங்கம் அவ்வாறு நீதியை நிலைநாட்டும் என்று எதிர்பார்ப்போடு இக்கட்டுரை எழுதப்படவில்லை. ஏனென்றால் அரசுத் தலைவர் அனுர அவர் அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னரே அசோசியேடட் பிரஸ் நியூஸ் என்ற பன்னாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்தவிடயம் தொடர்பாகப் பேசியுள்ளார். அவர் கூறுகிறார், பாதிக்கப்பட்ட மக்கள் உண்மையைத்தான் அறிய விரும்புகிறார்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை அல்ல என்று.
இது விவாதத்துக்குரிய கருத்து. உண்மையை ஏன் கண்டுபிடிக்க வேண்டும்? குற்றவாளிகள் யார்? குற்றத்தின் பின்னணி என்ன? போன்ற விவரங்களைத் திரட்டுவதற்குத்தானே? அந்த விவரங்கள் ஏன் வேணும்? இறந்தவர்களின் கல்லறை மீது எழுதி வைப்பதற்கா? இல்லை.அந்த விவரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்படுகிறவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத்தானே?
எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இந்த விடயத்தில் உண்மையை கண்டுபிடிப்பதற்குமப்பால் நீதியை வழங்கத் தயாரில்லை என்று தெரிகிறது. நீதியை வழங்கத் தயாரில்லை என்பதனை மறுவளமாகச் சொன்னால் உண்மையைக் கண்டுபிடிக்க போகிறோம் என்று சொல்வது ஒரு விசுவாசமான நடவடிக்கையாக இருக்காது என்று பொருள்.அது ஒரு கண் துடைப்பாகத்தான் இருக்க முடியும்.
எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது செம்மணியும் உட்பட ஏனைய எல்லாப் புதை குழிகள் மற்றும் போர்க்களத்தில் புரியப்பட்ட குற்றங்கள் தொடர்பாக உண்மையைக் கண்டுபிடிக்குமா என்பது சந்தேகம்தான். இந்த விடயத்தில் ஐநா அரசாங்கத்தின் மீது நிர்பந்தங்களை பிரயோகிக்கும் என்று தமிழர்கள் காத்திருக்க முடியாது. காத்திருக்கக் கூடாது என்பதைத்தான் அண்மையில் இலங்கைக்கு வந்து போன ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய உத்தியோகப்பூர்வ உரையாடல்கள் தமிழ் மக்களுக்கு உணர்த்தியுள்ளன. எனவே இப்பொழுது தமிழ் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? அல்லது என்ன செய்ய வேண்டும்?
நீதிக்காகப் போராடுவது என்றால் என்ன? குற்றம் நடந்திருப்பதை நிரூபிப்பதில் இருந்துதான் அது தொடங்குகிறது. குற்றம் நடந்திருப்பதை எப்படி நிரூபிப்பது? குற்றம் தொடர்பான சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பது. அவ்வாறு சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்க வேண்டும் என்பது ஏற்கனவே ஐநா தீர்மானம் நாற்பத்தியாறின் கீழ் ஒன்றின் பிரகாரம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்குரிய அலுவலகம் ஒன்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அலுவலகத்துக்குள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் நடைமுறைக்கு இப்பொழுது ஓர் அனைத்துலகப் பரிமாணம் உண்டு.
ஆனால் ஐநாவின் அரசியலைப் பொறுத்தவரை அந்த நடைமுறையானது இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நோக்கிலானதே தவிர உண்மையை விசுவாசமாகக் கண்டுபிடிக்கும் நோக்க முடையது அல்ல என்று தமிழ் மக்கள் சந்தேகிக்கத்தக்க விதத்தில்தான் அண்மையில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்த கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.
இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். கடந்த சுமார் 13 ஆண்டு கால ஐநா மைய அரசியலில் நிறைவேற்றப்பட்ட பெரும்பாலான ஐநா தீர்மானங்கள் கொழும்பின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று விரும்பும் மேற்கு நாடுகளின் ராஜதந்திர இலக்குகளைப் பூர்த்தி செய்யும் நோக்கமுடையவைதான்.
மேற்கு நாடுகள் ஏன் அவ்வாறு விரும்புகின்றன? ஈழத் தமிழர்கள் மீதுள்ள இரக்கத்தினாலா? அல்லது மேற்கு நாடுகளில் வசிக்கும் சக்தி மிக்க புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தின் அழுத்தம் காரணமாகவா? அல்லது சீனாவின் செல்வாக்குப் பொறிக்குள் விழக்கூடிய இலங்கை அரசாங்கம் சீனாவை நோக்கி போகக்கூடிய வாய்ப்புகளை குறைக்கும் ராஜதந்திர உள்நோக்கத்தைக் கொண்டவையா ?
மேற்கண்ட கேள்விகளுக்கு சரியான விடைகளைப் பகுத்து ஆய்ந்து அறிந்து கொள்ளவில்லை என்றால் ஈழத் தமிழர்கள் நீதிக்கான போராட்டத்தில் வேகமாக முன்னேற முடியாது. அது மட்டுமல்ல, மேற்படி கேள்விகளுக்கான விடைகளைத் தேடாமல் ஐநாவை நோக்கி உழைப்பது, அல்லது மேற்கத்திய தலைநகரங்களை நோக்கி உழைப்பது போன்ற எல்லா அரசியல் நடவடிக்கைகளும் ஒரு கட்டத்துக்கு மேல் ஈழத் தமிழர்கள் எதிர்பார்க்கும் விளைவுகளை, எதிர்பார்க்கும் வேகத்தில் தரப்போவதில்லை.கடந்த 16 ஆண்டுகளும் அதைத்தான் நிரூபித்திருக்கின்றன.
ஈழத் தமிழர்களின் மேற்கு மைய அரசியலானது பெருமளவுக்கு காத்திருப்பு அரசியலாகவே காணப்படுகிறது. அதற்கு காரணம் என்ன? விடை மிக எளிமையானது;தெளிவானது.ஈழத் தமிழர்களின் விவகாரத்தை ஒரு மையத்திலிருந்து முடிவெடுத்து கட்டமைப்புகளுக்கு ஊடாக தொடர்ச்சியறாமல் முன்னெடுக்க வேண்டியது யார்? தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள்;அரசியல் செயற்பாட்டாளர்கள்;குடிமக்கள் சமூகங்கள் போன்றவைதான். கடந்த 16 ஆண்டுகளாக மேற்கண்ட தரப்புகள் தங்களுக்கு இடையே ஐக்கியப்பட்டு அது தொடர்பாக ஒரு மையத்தில் இருந்து ஓர் அரசைப் போல முடிவெடுக்கும் ஒரு நிலைமை தோன்றியுள்ளதா? இல்லை.
ஈழத் தமிழர்கள் கடந்த 16 ஆண்டுகளாக சிதறிப் போய் காணப்படுகிறார்கள். தாயகத்திலும் அப்படித்தான்.புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் அப்படித்தான். ஒரு மையத்திலிருந்து முடிவெடுக்க முடியாத அரசியல்.
இதன் ஆகப்பிந்திய வெளிப்பாடுதான் கடந்த வாரம் கஜேந்திரக்குமார் நடத்திய ஊடகச் சந்திப்பும் ஆகும்.அதில் அவர் தெளிவாக சில விடயங்களைப் பேசுகிறார். பொறுப்புக் கூறலை ஐநா மனித உரிமைகள் சபைக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்று கடந்த சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருபவர் அவர்தான். ஆனால் அவ்வாறு பொறுப்புக் கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போவதற்குத் தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை யார் செய்வது?
தமிழ்த் தரப்புத்தான் செய்ய வேண்டும். அதை எப்படிச் செய்வது? தமிழ் மக்கள் அனைத்துலக சமூகத்தை தமக்கு ஆதரவாகத் திரட்ட வேண்டும். அவ்வாறு திரட்டுவது என்றால் முதலில் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே திரட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் இங்கு ஏற்கனவே கூறப்பட்டதுபோல தமிழ் மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக தங்களை தாங்களே திரட்டிகொள்ள முடியாத ஒரு மக்கள் கூட்டமாகக் காணப்படுகிறார்கள்.
கஜேந்திரக்குமார் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டிலும் அது தெரிகிறது. அவர் தமிழரசு கட்சியை,குறிப்பாக சுமந்திரனை குற்றம் சாட்டுகிறார். சுமந்திரன் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் விசுவாசமாக ஈடுபடவில்லை என்று அவர் குற்றம் சாட்டுகிறார். இது புதிய குற்றச்சாட்டு அல்ல.கடந்த 15 ஆண்டுகளாக அவர்கள் கூறிவரும் ஒரு குற்றச்சாட்டு.
சுதந்திரன் ஐநா மைய அரசியலில் தனது மக்களுக்கு விசுவாசமாக இல்லை என்று சொன்னால், அதை அறிவுபூர்வமாக விளங்கி வைத்திருக்கின்ற, அதை விசுவாசமாக முன்னெடுக்க வேண்டும் என்று கூறுகின்ற, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது அதை முன்னெடுக்கலாம்.அப்படி முன்னெடுப்பதற்குத் தேவையான மக்கள் ஆணையைப் பெறும் விதத்தில் அக்கட்சி தன்னை பலப்படுத்த வேண்டும்.கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலை நோக்கி அக்கட்சியானது தன்னை ஓரளவுக்குப் பலப்படுத்திக் கொண்டுள்ளது. ஆனால் அது போதாது. இப்பொழுதும் தமிழரசுக் கட்சிதான் இருப்பவற்றில் பெரிய கட்சியாகவும், முதன்மைக் கட்சியாகவும் காணப்படுகிறது. எனவே இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதை நோக்கி உழைக்க வேண்டும். தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தை தலைமை தாங்கி முன்னெடுக்கும் ஒரு கட்சியாக அது தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் இப்போது இருப்பதை விடவும் தீவிரமாகவும் தீர்க்கதரிசனமாவும் செயல்பட வேண்டியுள்ளது என்பதனைத்தான் ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய இலங்கை விஜயம் தமிழ் மக்களுக்கு உணர்த்துகின்றது.