மாகாண சபை விவகாரத்தில் இந்தியாவை மீண்டும் இழுத்து விடுவது சரியல்ல என்கிறார் மனோ கணேசன் எம்.பி

Share

ந.லோகதயாளன்.

மாகாண சபை தேர்தல் அல்லது இலங்கை தேசிய இன பிரச்சினை விவகாரங்களில் இந்தியாவை மீண்டும் இழுத்து உள்ளே விடுவது, எமக்கும் சரி, இந்தியாவுக்கும் சரி, நன்மை பயக்காது நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

வட-கிழக்கை இணைத்து, இந்தியாவால் தர முடிந்த மாகாண சபையை, முதல் கட்ட தீர்வாக பெற்று, தம்மை திட படுத்தி கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் வரலாறு தந்த வாய்ப்பை, தமிழ் தேசிய கட்சிகள், தவற விட்டு விட்டன. ஆகவே இன்று மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வரலாறு நம்மை கொண்டு வந்து விட்டுள்ளது.

இந்திய அரசு, இனி மேல் இலங்கை தமிழர் தரப்பின் பங்காளியாக, இலங்கை தேசிய இன பிரச்சினையில் தலையிடாது, செயல் படாது, என்பது எனக்கு நன்கு விளங்குகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை இன பிரச்சினை விவகாரத்தில் இந்திய அரசுக்கு ஒரு தார்மீக பொறுப்பு உள்ளது உண்மை தான். அந்தப் பொறுப்பு உருவாக காரணம், இலங்கையில் தமிழர் ஆயுத போராட்டத்தை செயலிழக்க செய்வதில் இந்தியாவின் இராஜதந்திர முயற்சிகளும், இராணுவ தலையீடும் தீர்மானகரமான பங்கை வகித்ததுதான்.

அந்த செயல்முறையில் இந்தியா சுமார் இரண்டாயிரம் வீரர்களை இழந்தது. இதற்கு முன்னோடியாக, தமிழ் ஆயுத இயக்கங்கள் இந்தியாவில் பயிற்சி பெற்ற காலகட்டமும் இருந்தது. அதன் விளைவாக, இந்திய தொடர்பு இலங்கையின் சிங்களவர், தமிழர், இரு தரப்புக்கும் உணர்வுபூர்வமான ஒரு விடயமாக மாறியது.

இன்று மாறி விட்ட புதிய உலக ஒழுங்கு சூழ்நிலையில், இந்தியாவை மீண்டும் இழுத்துவரக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தான் நான் இருக்கிறேன். இந்திய கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடும் இதுதான் என நான் நம்புகிறேன்.

அண்மை காலங்களில், தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) சார்பில் இந்தியப் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் சமீபத்தில் உப ஜனாதிபதி, உள்ளிட்ட இந்திய உயர்மட்ட தலைவர்களை நாம் சந்தித்த போதெல்லாம், 13வது திருத்தம் அல்லது மாகாண சபைகள் தொடர்பான விடயங்கள் எமது நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை.

13வது திருத்தச்சட்டம் இலங்கையின் அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். எனவே, அதனைத் தக்க வைத்து கொள்வதா, மேம்படுத்துவதா, முழுமையாக நடைமுறை படுத்துவதா, சீர்திருத்துவதா அல்லது முற்றிலும் நீக்குவதா என்பதை தீர்மானிப்பது இலங்கையர்களின் பொறுப்பாகும்.

இந்த விவகாரத்திலிருந்து இந்தியாவை தூரத்தில் வைத்திருப்பது இந்தியாவிற்கும் நன்மை பயக்கும். குறிப்பாக, புதிய உலக ஒழுங்கு சூழலில், இந்தியா ஒரு தமிழர் ஆதரவு நாடாக அல்லாது, இலங்கையை முழுமையாக ஆதரிக்கும் ஒரு நாடாகவே பார்க்கப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவுடனான தங்களது உறவை சரியான முறையிலும், சரியான நேரத்திலும் பயன்படுத்த தவறிவிட்டன. இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா கொண்டிருந்த செல்வாக்கை பயன்படுத்தி, இணக்கமான அரசியல் தீர்வை முன்னெடுக்க அவர்கள் போதுமான முயற்சி எடுக்கவில்லை. அதேபோல், மாகாண சபை அமைப்பை பயன்படுத்தி தங்களை நிலையை முதலில் வலுப்படுத்தி கொண்டு, பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி நகரவும், இந்தியாவினது நம்பிக்கையை பெறவும், அவர்கள் திறம்பட செயல்படவில்லை.

மாகாண சபையை நிர்வாக அரசியல் அதிகார பகிர்வு தளமாக பயன் படுத்தாமல், கட்சி அரசியல் தளமாக பயன்படுத்தி, அடிபட்டு மோதி, அது ஒரு பயனற்ற அமைப்பு என்ற கருத்து ஏற்பட காரணமாகி விட்டார்கள். அதன் விளைவாக, மாகாண சபை விவகாரத்தில், நாம் மீண்டும் தொடக்க நிலைக்கே திரும்பி விட்டோம்.

ஆகவே, இந்த விவகாரத்தில் இந்தியாவை மீண்டும் இழுத்து வர முடியாது. தீர்வு இலங்கைக்குள், இலங்கையர்களால் கண்டு பிடிக்கப்பட்டு, இலங்கையர்களாலேயே இறுதி செய்யப்பட வேண்டும். இந்தியா உடன் பரஸ்பர நன்மை தரும் பொருளாதார இணைப்புகளை தான், நாம் மேலும் ஆழப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>