மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாட்களில் உதவித்தொகை வழங்கப்படுமென அமைச்சர் வன்னி அரசு உறுதியளித்துள்ளார். அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் என்பவர் இந்த கல்வி உதவித்தொகை இழுத்தடிக்கப்படுவதாக கண்ணீர் மல்க சமூக வலைத்தளத்தில் ‘காணொளி பதிவு வெளியிட்டு இருந்தார். மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் தனது இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் பாரதிதாசன், ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள், பொருட்கள் மற்றும் புத்தகங்களை வாங்குவதற்கான நிதிக்காக தொடர்ந்து விண்ணப்பித்து வருவதாக தெரிவித்துள்ளார். தனது ஆராய்ச்சி தொடர்பான ஆவணங்கள், எதிக்ஸ் கோடு உள்ளிட்ட விவரங்களை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறி இருந்தார். இருப்பினும், நிதி கிடைக்காததால் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வரும் மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற உள்ள ஆய்வு தொடர்பான பிரசன்டேஷனில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தனது குடும்பம் மற்றும் கிராமத்தில் இருந்து மருத்துவ ஆராய்ச்சித் துறைக்கு வந்த முதல் தலைமுறை நபர் தான்தான் எனக் குறிப்பிட்ட அவர், தன்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்த சமூக நீதித்துறை, அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயிலும் மாணவர் பாரதிதாசனின் காணொலி தகவலுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தது.
இதையடுத்து, மாணவர் பாரதிதாசன் வெளியிட்ட புதிய காணொலி மீண்டும் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வன்னி அரசு, பாரதிதாசனின் கல்வி தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். தம்பி பாரதிதாசனை படிக்க வைப்போம். அவருக்கான நிதித் தொகை இரண்டு நாட்களுக்குள் விடுவிக்கப்படும். அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் அதிகளவில் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், பாரதிதாசனைப் போன்ற மாணவர்கள் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை தொடர வேண்டும் என்பதற்காகவே சமூகநீதித் துறை செயல்பட்டு வருகிறது. பாரதிதாசன் மட்டுமின்றி அனைத்து மாணவர்களின் கல்விக்கும் தமிழக வெற்றி கழக அரசு உதவும் என்று அவர் தெரிவித்தார்.