பு.கஜிந்தன்
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது 27ம் திகதி புதன்கிழமையன்று நடைபெற்றது.
இதன்போது இரண்டு ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்புக்காக சென்ற நிலையில் ஒரு ஊடகவியலாளருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் பு.கஜிந்தனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதன்போது சபையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், காணி ஒன்றில் கட்டடம் அமைத்தமை தொடர்பாக செய்தி வெளியிட்ட நிலையிலேயே அவருக்கான அனுமதி மறுக்கப்பட்டதாக தவிசாளரால் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு சபையில் இருந்த மூவரை தவிர ஏனையோர் ஊடகவியலாளர் உள்ளே வந்து செய்தி சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தனர். அத்துடன் பல உறுப்பினர்கள் தவிசாளருடன் கடுமையாக வாதிட்டனர். இதனால் சபையானது தவிசாளரின் கட்டுப்பாடு இழந்து, அமைதியின்மை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளை சேர்ந்த 11 உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சபைக்கு சமூகமளித்திருந்த மூன்று உறுப்பினர்கள் தமது விடுமுறையை கூறிவிட்டு ஏற்கனவே சபையில் இருந்து வெளியேறினர்.
இறுதியாக சபை அமர்வானது தவிசாளர், உப தவிசாளர் மற்றும் 9 உறுப்பினர்களுடனேயே இடம்பெற்றது. இதில் ஒரு சில உறுப்பினர்களை தவிர இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணி உறுப்பினர்கள் குறித்த ஊடகவியலாளர் உள்ளே வரவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே சபையில் காரசாரமாக கருத்து தெரிவித்தனர். தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுவது தவறு என்றும் சுட்டிக்காட்டினர்.
அடுத்த சபை அமர்வில் குறித்த செய்தி தொடர்பாக ஆராய்ந்த பின்னர் அந்த ஊடகவியலாளருக்கு அனுமதி கொடுப்பதாக தவிசாளர் சபையில் தெரிவித்ததாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மானிப்பாய் பகுதியில் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டடத்தின் அத்திவாரமானது தமது காணிக்குள் வெட்டப்பட்டதாகவும், பிரதேச சபையினர் தம்மை அச்சுறுத்தி, தமது காணியில் நின்ற மரங்களை வெட்ட வைத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் கருத்து தெரிவித்தார். அத்துடன் மானிப்பாய் பிரதேச சபை மீது கடுமையான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில் அதனை குரல் பதிவாக பெற்று குறித்த ஊடகவியலாளர் அதனை செய்தியாக பிரசுரித்துள்ளார். அதன் அடிப்படையிலேயே அந்த ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.