மும்பை – மகாராஷ்டிராவில் வரலாறு காணாத கனமழையால் அடுத்தடுத்து 13 பேர் உயிரிழந்தனர்

Share

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பை, பால்கர், ராய்காட் மற்றும் தானே ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 முதல் 4 நாட்களாக வரலாறு காணாத அளவிற்கு மிக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த கடுமையான மழைப்பொழிவு மற்றும் அது சார்ந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். மழையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பை, தானே மற்றும் ராய்காட் ஆகிய மாவட்டங்களுக்கு அதீத கனமழை மற்றும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரித்து ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுத்துள்ளது. தொடர் மழையின் காரணமாக மும்பை மற்றும் புனே இடையேயான ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. கர்ஜத்-லோனாவாலா மலைப்பாதையில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு, பாறைகள் தண்டவாளத்தில் உருண்டு விழுந்ததால், மும்பை – புனே இடையேயான தூரப்பயண ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், மும்பை-கோவா நெடுஞ்சாலையில் சிப்லுன் அருகே ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக இ ருபுறமும் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை-புனே விரைவுச்சாலையிலும் பாட்டல்கங்கா நதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் காரணமாக நாக்பூரிலிருந்து மும்பையில் நடைபெறும் பருவக்கால சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க வரவிருந்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மகாராஷ்டிர சட்டமன்றம் ஒரு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாதிப்புகளைத் தவிர்க்க, மும்பையில் உள்ள தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் அவசர அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அத்தியாவசியமற்ற அரசு மற்றும் பகுதி-அரசு அலுவலகங்கள் அரை நாள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பிற்காக மும்பை, புனே, தானே மற்றும் பால்கர் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, மும்பை பல்கலைக்கழகத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மும்பையின் மான்குர்த் பகுதியில் உள்ள ஜனதா நகர் சாவ்லில் 3 அடுக்கு குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தானே மற்றும் மும்பையின் பிற பகுதிகளில் மரம் மற்றும் விளம்பரப் பலகைகள் சரிந்து விழுந்த விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர். புனேயின் மாவல் தாலுகாவில் உள்ள பாதன் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு முழுமையாக மண்ணில் புதைந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார், மேலும் இருவரை மீட்க தேசிய பேரிடர் மீட்புப்படை தீவிரமாகப் போராடி வருகிறது. இதற்கிடையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். மதியம் மற்றும் மாலை வேளைகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என முதல்வர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>