ஜனாதிபதி மொழி உரிமை முக்கியமானது, அதி முக்கியமானது, ஒவ்வொருவரும் தங்கள் மொழியில் பேசும் உரிமை இருக்கின்றது எனத் திரும்பத் திரும்ப கூறுகின்றார். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை இதற்கு மணலாறு (வெலிஓயா) உதாரணம். இவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாகவுள்ளது. மிக முக்கியமான மொழி உரிமை என சொல்லிக்கொண்டு அந்த மொழி உரிமை மறுக்கப்படுகின்றது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தற்காலிகச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வெலி ஓயா எனப்படும் பிரதேச செயலாளர் பிரிவின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 3 ஆம் திகதி இடம்பெற்றபோது வழமைக்கு மாறாக தனிச் சிங்களத்தில் இடம்பெற்றமை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடாக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மணலாறு பகுதிக்குரிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 3 ஆம் திகதி இடம்பெற்றது. மணலாறு தற்போது வெலிஓயா என பெயர் மாற்றி வைத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். இந்த கூட்டத்திற்கு வவுனியா வடக்கு மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச சபை என்பவற்றின் தவிசாளர்கள் கலந்துகொள்வது வழமையானது. இக் கூட்டத்திற்கு வவுனியா வடக்கு தவிசாளர் கிருஸ்ணவேனி வழமையாகவே சமூகமளிப்பவர். இக் கூட்டத்தில் பங்குகொள்பவர்களில் அதிகமானோர் தமிழ் மக்கள். உத்தியோகத்தர்களும் அவ்வாறுதான் உள்ளனர்.
இக் கூட்டமானது இதுவரை காலமும் மொழி பெயர்ப்புடனேயே இடம்பெறுவது வழமை. இக் கூட்டம் இடம்பெற்றதற்கு முதல் நாள் கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டது அனைவருக்கும் தெரியும் அடுத்த நாள் இந்தக் கூட்டம் இடம்பெறுகின்றபோது வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளருக்கு வழமையாக ஆசனம் ஒதுக்கும் இடத்தில் இருக்கை ஒதுக்கப்படவில்லை. அதாவது ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருடன் அமர முடியாது கீழே அமருமாறு கூறப்பட்டது.
வழமைக்கு மாறாக மாற்றமுடியாது எனத் தெரிவித்த தவிசாளர் மேடையிலேயே அமர்ந்தார். அதன் பின்பு கூட்டமானது முழுமையாக தனிச் சிங்களத்தில் மட்டுமே இடம்பெற்றது மொழி பெயர்ப்பு கேட்டபோதும் கொடுக்கப்படவில்லை. ஆகையினால் தவிசாளர் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் சபை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நாம் இனவாதிகள் அல்ல நாங்கள் இனவாதச் செயல்பாட்டில் ஈடுபடுவது கிடையாது, நீங்கள் நடாத்திய போராட்டம் இனவாதமான போராட்டம் என்று கூறியுள்ளனர்.
இந்தப் பின்னணியில் வவுனியா வடக்கு தவிசாளரையும் அங்குள்ள மக்களையும் புறக்கணித்து மொழி பெயர்ப்பு இல்லாமல் தனிச் சிங்களத்தில் நடத்தியதை நாம் எப்படி வர்ணிப்பது என்பதே எமது கேள்வி. இதை இனவாதம் என்பதா அல்லது வேறு எவ்வாறு கூறுவது?.
தேர்தல் காலத்தில் யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி மொழி உரிமை முக்கியமானது, முக்கியமானது, ஒவ்வொருவரும் தங்கள் மொழியில் பேசும் உரிமை இருக்கின்றது எனத் திரும்பத் திரும்ப கூறுகின்றார். சொல்லில் சரியாகவுள்ளது ஆனால் நடைமுறையில் எப்படி உள்ளது என்று நான் அவரிடம் கேட்கின்றேன். அதனால் நாம் இதனை தேசிய மட்டத்தில் நாட்டில் உள்ள மக்களிற்கும. தெரிய வேண்டும் இவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாகவுள்ளது. மிக முக்கியமான மொழி உரிமை என சொல்லிக்கொண்டு அந்த மொழி உரிமை மறுக்கப்படுகின்றது என்றார் சுமந்திரன்.