யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘மூத்தோர் ஒன்றுகூடல்’ மூத்தவர்களும் ஜென்ஸிகளும்

Share

யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைந்துள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது.மூத்தோர் ஒன்றுகூடல் என்று அழைக்கப்பட்ட அந்தச் சந்திப்பானது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட “எங்கட புத்தகங்கள்” என்ற அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டது. கடந்த ஆண்டும் இதே மண்டபத்தில் முதலாவது ஒன்றுகூடல் இடம்பெற்றது.இது இரண்டாவது. இந்த இரண்டாவது ஒன்றுகூடலில் கிட்டத்தட்ட 50க்கும் குறையாதவர்கள் வந்திருந்தார்கள்.

“அனுபவத்தால் மூத்தவர்கள்,அறிவால் மூத்தவர்கள், ஆற்றலால் மூத்தவர்கள்” என்று பல்வேறு வகையிலும் மூத்தவர்களை ஒன்றுகூட்டி, உணவருந்தி சமூகத்திற்குப் பயன்தரும் விடையங்களை உரையாடுவது இந்த சந்திப்புகளின் நோக்கமாகும். அழைப்பிதழில் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இக் கேள்விகளின் மீது கலந்துரையாடல் இடம்பெறும் என்று கூறப்பட்டது. “நமது இளைஞர்களை ஒழுக்கமானவர்களாகவும் அறநெறி எண்ணம் கொண்டவர்களாகவும் நாம் வளர்கிறோமா?” என்பது முதலாவது கேள்வி. “அவர்களை சரியான பாதையில் வழிநடத்த நாம் எடுக்கவேண்டிய நடைமுறை நடவடிக்கைகள் எவை ?” என்பது இரண்டாவது கேள்வி.

வந்திருந்த மூத்தோர் 6பேர்களைக் கொண்ட குழுக்களாக மேசைகளில் ஒழுங்கமைக்கப்பட்டார்கள். நான் இருந்த மேசையில் மூன்று பெண்களும் மூன்று ஆண்களும் இருந்தார்கள். பால் அசமத்துவம் இல்லாத ஒரு குழு. அதில் மருத்துவர்,கலாச்சார உத்தியோகத்தர்,ஆவணச் செயற்பாட்டாளர், சமூகச் செயற்பாட்டாளர், இளம் இசையமைப்பாளர்…… என்றிவ்வாறாக வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த ஆறு பேர் இருந்தோம். வயதால் இளைய ஒருவரும் எங்கள் குழுவில் இருந்தது தனிச்சிறப்பு.

உரையாடலின் போக்கில் பின்வரும் விடயங்களை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.இது பின்னர் குழுக்களைப் பிரதிநிதித்துவ படுத்தியவர்கள் உரையாற்றும் போதும் தொகுத்து அவதானிக்கப்பட்டது. முதலாவதாக சுட்டிக்காட்டப்பட்ட விடயம்,இளையோர் மட்டுமல்ல மூத்தோரும் அதாவது இளையோருக்கு வழிகாட்ட வேண்டிய வயதில் உள்ளவர்களும், பொறுப்பில் உள்ளவர்களும் அதற்குவேண்டிய மூப்போடும் தகைமையோடும் முதிர்ச்சியோடும் இருக்கிறார்களா ? என்று கேள்வி.

எமது குழுவில் அமர்ந்திருந்த பெரும்பான்மையானவர்கள் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டினார்கள். சமூகத்தில் இளையோர் மட்டுமல்ல முதியோர் குறிப்பாக நடுத்தர வயதுடையவர்களின் குடும்பங்கள் பலவற்றில் உறவுகள் சுமூகமாக இல்லை என்று. அதாவது கணவன் மனைவி இருவரும் இணைந்து முடிவெடுக்க முடியாத அளவுக்கு குடும்பங்களுக்குள் முரண்பாடு அதிகரித்து வருகிறது என்று. பெற்றோர் பிள்ளைகளுக்கு வழிகாட்ட முடியாத அளவுக்கு பிரிந்தும் முரண்பட்டும் காணப்படுகிறார்கள் என்றும் கூறப்பட்டது. மிகக்குறிப்பாக பெற்றோர் பிள்ளைகளோடு செலவழிக்கும் நேரம் போதாது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. கைபேசிப் பாவனை,கேபிள் தொலைக்காட்சி போன்றவைகள் காரணமாக பெற்றோர் குறைந்த அளவு நேரத்தைத்தான் பிள்ளைகளோடு செலவழிக்கிறார்கள் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் பாடசாலைகளில் பிள்ளைகள் போதிய அளவுக்கு செதுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. பிள்ளைகளின் பெரும்பாலான நேரம் தனியார் கல்வி நிறுவனங்களில் கழிகிறது என்றும் கூறப்பட்டது.முன்னம் ஒரு காலம் “மொக்கு பிள்ளைகளுக்குத்தான் டியூஷன் தேவை.ஆனால் இப்பொழுது டியூஷன் எல்லாருக்கும் அத்தியாவசியமானதாக மாறிவிட்டது” என்று ஒரு மூத்த இலக்கியச் செயற்பாட்டாளராகிய ஜேசுராசா தெரிவித்தார்.பிள்ளைகள் விளையாட்டுக்களில் ஈடுபடுவது குறைவு என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

வரலாற்றில் எல்லா மூத்த தலைமுறையும் இளைய தலைமுறை மீது முறைப்பாடுகளை கூறுவது வழமை. அதுபோல இளைய தலைமுறையும் மூத்த தலைமுறையால் தன்னை விளங்கிக்கொள்ள முடியவில்லை என்று முறைப்பாட்டை வைப்பதுண்டு.எனினும் தகவல் புரட்சிக்குப் பின் இரண்டு தலைமுறைகளுக்கும் இடையிலான இடைவெளியானது ஒரு விதத்தில் தொழில்நுட்ப இடைவெளியாகவும் வளர்ந்து விட்டது. தனது திறண் பேசியில் தனக்குத் தோன்றும் எல்லாப் பிரச்சினைகளையும் ஒரு தாத்தா தன் பேரப் பிள்ளையிடம்தான் கேட்டுத் தீர்த்துக் கொள்வார். தொழில்நுட்ப ரீதியாக தனக்குள்ள அந்த மேலாண்மையை பேரப்பிள்ளை ஏனைய விடயங்களிலும் பிரயோகிக்க முற்படலாம். இந்தத் தொழில்நுட்பப் பிளவு ஆனது ஏனைய பல விடயங்களிலும் தாத்தா சொல்வதை பிள்ளை கேட்காமல் போவதற்குக் காரணமாக அமைகிறதா? அதைவிட முக்கியமாக, பிள்ளை சொல்வதை தாத்தாக்களும் அப்பா அம்மாக்களும் கேட்கிறார்கள் என்பதைத்தான் தமிழ் நாட்டில் விஜய்க்கு கிடைத்த வெற்றி உணர்த்துகின்றதா?

எனவே மூத்த தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் இடையிலான இடைவெளி எனப்படுவது தகவல் புரட்சிக்கு பின் புதிய பரிமாணத்தை அடைந்திருக்கிறது. பிளாட்டோ கூறியது போல “கதை சொல்லிகள் சமூகத்தை ஆளுகிறார்கள்”.ஆனால் இன்றைக்கு தாத்தா,பாட்டி போன்றவர்கள் பேரப்பிள்ளைகளுக்கு கதை சொல்வது குறைவு. கதை சொல்லிகளின் இடத்தை யூரியூப்பர்கள் பிடித்து விட்டார்கள். அவர்கள் சொல்லும் கதைகள் இளைய தலைமுறையை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும் ?

ராஜேஸ்வரி மண்டபத்தில் நடந்த சந்திப்பில் மதிய இடைவெளிக்குப் பின் உரையாற்றும் பொழுது இலக்கியச் செயற்பாட்டாளர் ஆகிய சத்தியதேவன் ஒரு முக்கிய விடயத்தைச் சுட்டிக்காட்டினார். இளைய தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதனை ஒரு மூத்த தலைமுறை மட்டும் தீர்மானிப்பது சரியா? அதுதொடர்பாக இளைய தலைமுறை என்ன கருதுகிறது என்பதை நாங்கள் அவர்களிடம் கேட்க வேண்டாமா? அவர்கள் எங்களைப் பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதை நாங்கள் அறிய வேண்டாமா? என்று.

அது மிக முக்கியமான கேள்வி. முழுக்க முழுக்க மூத்த தலைமுறையின் நோக்கு நிலையில் இருந்து இளைய தலைமுறையைச் செதுக்க முடியாது. கலீல் ஜிப்ரான் கூறியது போல “எங்களுடைய குழந்தைகள் எங்களுடையவை அல்ல.எங்களுக்கு ஊடாக வந்தவைதான்”.அவர்கள் தங்களுடைய வாழ்க்கையைத்தான் வாழப் போகிறார்கள்.எனவே அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதையும் கேட்க வேண்டும். ஆனால் அன்றைய சந்திப்பில் அவ்வாறு இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அநேகமாக இருக்கவில்லை.

மேலும்,ஒழுக்கம் அறம் என்பவையெல்லாம் மாறிலிகள் அல்ல. மாறக்கூடியவை. காலத்துக்குக் காலம் தொழில்நுட்ப வளர்ச்சியோடும் ஏனைய வளர்ச்சிகளோடும் மாறக்கூடியவை.ஒரு தலைமுறை தனது காலத்தின் ஒழுக்கங்களை அடுத்த தலைமுறைமீது திணிக்க முடியாது.எனவே எது ஒழுக்கம்? எது அறம்? என்பது தொடர்பாகவும் ஆழமாகப் பார்க்கப்பட வேண்டும்.

எங்களுடைய குழுவில் இளையவர் ஒருவர் இருந்தார்.இளம் இசை மற்றும் திரைக் கலைஞரான பூவன் மதீசன். எமது குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவரைத்தான் பேச விட்டோம்.அருமையாகப் பேசினார். அங்கிருந்தவர்களில் வயதால் இளையவராகிய அவர், குழு நிலைக் கலந்துரையாடலின்போது ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டார். சமூக ஊடக வலைத்தளச் சூழலானது டொலர்களைச் சம்பாதிப்பதற்காக அனேகமாக பிரச்சனைகளின்மீதும் விவகாரங்களின்மீதும் விபரீதமான விடயங்களின்மீதும் கவனத்தை அதிகமாகக் குவிக்கின்றது. இதனால் பொசிட்டிவ் விடையங்களின் மீது கவனத்தைக் குவிப்பதை விடவும் நெகட்டிவ் விடயங்களின் மீதுதான் அதிக கவனம் குவிக்கப்படுகிறது. இதனால் ஒப்பீட்டளவில் நெகட்டிவானா புள்ளி விபரங்கள்தான் அதிகம் வைரல் ஆகின்றன. விபரீதமான,விவகாரமான விடயங்கள்தான் அதிகம் வைரல் ஆகின்றன. அதை வைத்துக்கொண்டு உலகம் கெட்டுப் போய்விட்டது என்று முடிவெடுக்கலாமா ? என்று அவர் கேட்டார்.

அரசு அதிகாரியான எனது நண்பர் ஒருவர் கூறுவார், ஒரு மனநல மருத்துவரிடம் போனால் அவர் கூறுவார், சமூகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் தொகை அதிகரித்து வருகிறது என்று. ஆனால் அவர் கூறும் புள்ளி விபரங்களை சமூகத்தின் மொத்த ஜனத்தொகைக்குள் வைத்து கணிக்கும் போதுதான் சரியான புள்ளி விபரம் கிடைக்கும். அதைப்போலவே முதியோர் நலன்பேணும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் கேட்டால் கூறுவார்கள், முதியோர் கைவிடப்படுகிறார்கள் என்று. அங்கேயும் அதை முழுச் சமூகத்துக்குமான 100 விகிதமாக எடுத்துக் கொள்ள முடியாது.சமூகத்தின் மொத்த சனத் தொகைக்குள் வைத்து அதைக் கணிக்க வேண்டும்.

குடும்பங்கள் மத்தியில் முரண்பாடுகள் அதிகரிப்பதாகவும், பிள்ளைகளுக்கு வழிகாட்ட முடியாத நிலையில் ஒரு பகுதி பெற்றோர்கள் காணப்படுகிறார்கள் என்பது தொடர்பாகவும் சரியான புள்ளி விபரங்கள் வேண்டும். ஒரு மையத்திலிருந்து தொகுக்கப்பட்ட புள்ளி விபரங்களை, மொத்த சனத் தொகைக்குள் வைத்துக் கணிக்க வேண்டும். இதற்கு ஒரு மையமான செயற்பாடு தேவை. குறைந்தபட்சம் மாகாண மட்டத்திலாவது அதைக் கணிக்கலாம். அங்கிருந்து சரியான கணித பூர்வமான புள்ளி விபரங்கள் கிடைத்தபின், அவற்றை வைத்துக் கொண்டுதான் இதுதொடர்பாக தொகுக்கப்பட்ட பார்வையை முன்வைக்கலாம். அதுவரை கேட்கப்படுகின்றவை, எழுதப்படுகின்றவை எல்லாமும் அபிப்பிராயங்களே.

இளைய தலைமுறை தொடர்பாக முதிய தலைமுறை நம்பும் பல விடயங்களும் அபிப்பிராயங்கள்தான். மூத்தவர்கள் தொடர்பாக இளம் தலைமுறையிடம் உள்ளவைகளும் அபிப்பிராயங்கள்தான். இந்த அபிப்பிராயங்களில் எத்தனை உண்மை?

யாரை மூத்தவர்கள் குறை சொல்கிறார்களோ, அல்லது யாரைத் திருத்த வேண்டும் என்று ஒன்று கூடிச் சிந்திக்கிறார்களோ, அவர்களை இணைத்துக் கொள்ளாமல் மூத்தோர் மட்டும் தனியே முடிவெடுப்பது சரியா? அவர்கள் தங்களைப்பற்றி என்ன கருதுகிறார்கள்? மூத்தோரைப்பற்றி என்ன கருதுகிறார்கள்? நடப்பு அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலவரங்கள் தொடர்பாக என்ன கருதுகிறார்கள்? போன்றவற்றைச் செவிமடுக்க எத்தனை மூத்தவர்கள் தயாராக இருக்கிறார்கள்?

தமிழகத்தில் விஜய் வெற்றிபெற்ற பின், திமுக இளம் வயதினரை கவர்வதற்கான புதிய உபாயங்களைப்பற்றிச் சிந்தித்துச் செயல்பட்டு வருகிறது. ஆனால் அதற்காக அவர்கள் ஒருங்கிணைக்கும் சந்திப்புகளில் இளம் தலைமுறையின் மொழிநடையில் அவர்களுடைய அலைவரிசையில் சென்று அவர்களோடு உரையாடுவதற்குப் பதிலாக, மூத்த தலைமுறை தங்களுடைய அலை வரிசையில் நின்றுகொண்டு அவர்களை அணுகுகின்றது என்ற குற்றச்சாட்டு அதிகமாக உண்டு.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜேஸ்வரி மண்டபத்தில் நடந்த மூத்தோர் சந்திப்பிலும் இது உணரப்பட்டது.இரண்டு தலைமுறையும் அதனதன் அலைவரிசையில் நின்று கொண்டு,அதை நியாயப்படுத்திக் கொண்டு உரையாடலாமா? ” ஒவ்வொரு தலைமுறையும் தனக்கு முந்திய தலைமுறையை விடத் தானே அதிகம் புத்திசாலி என்றும் தனக்குப் பின்வரும் தலைமுறையைவிடத் தானே ஞானமானது என்றும் தனக்குள்தானே கற்பனை செய்துகொள்கிறது” என்று ஆங்கில எழுத்தாளரான ஜோர்ச் ஓவல் கூறியது சரியா?

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>