யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் வரலாறு படைத்த மருத்துவப் பீட மாணவி நற்குணம் அபிராமி!

Share

அவர் ஒரு தலைமுறைக்கான முன்மாதிரி


ஈழத் தேசத்தில் வாழும் தமிழர்கள், இளம் தலைமுறையினர், உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்கள் பெருமையுடன் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு சிறப்பான செய்தி.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா 19.02.2026தொடக்கம் 22.02.2026 வரை சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஒரு பொற்கால நிகழ்வாக, ஒரு வரலாற்றுச் சாதனையை உலகிற்கு அறிவித்த தருணமாகவும் மாறியுள்ளது.

19.02.2026 அன்று நடைபெற்ற மருத்துவப் பீட மாணவர்களுக்கான பட்டம் வழங்கிய நிகழ்வில் மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரினால் பல தடைவைகள் ஒரு மாணவியின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்பட்டது, அழைக்கப்பட்டது. “நற்குணம் அபிராமி” என்று அழைத்து பட்டம் கொடுத்த பின் பிறகும் “நற்குணம் அபிராமி” என அழைக்கிறார் இப்படி எட்சு தடவையாக மீள மீள நற்குணம் அபிராமி எனும் பெயர் மண்டபத்தில் ஒலிக்க எல்லோர் விழிகளும் அவளை நோக்கியே குவிந்தது.

ஆம்
“நற்குணம் அபிராமி” எனும் மருத்துவ பீட மாணவி தனது மருத்துவ படிப்பின் பல்வேறு துறைகளிலும், அதீத திறமையை வெளிப்படுத்தி மருத்துவ பட்டத்தோடு மட்டுமல்லாமல் ஒரே தடவையில் எட்டு (08) தங்கப்பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டார்.

ஒவ்வொரு முறையும் அந்த பெயர் உச்சரிக்கப்படும் போது, அரங்கில் இருந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பட்டம் பெற வந்திருந்த மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் படப்பிடிப்பாளர்கள் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்து MBBS பட்டம் பெற்றதோடு மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளில் அவர் பெற்ற சாதனைகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.

● மருத்துவப்படிப்பின் அனைத்து கட்டங்களிலும் (Final MBBS)முதலிடம்
● மகப்பேற்றியல் (Obstetrics and Gynaecology)
● சத்திர சிகிச்சை துறை (Surgery)
● குழந்தை நல மருத்துவத் துறை(Paediatrics) போன்ற முக்கிய துறைகளில் விசேட சித்தி.
● மற்றும் மருத்துவ பீடத்திற்கான சிறந்த மாணவருக்கான விருது என பல சிறப்பு துறைகளுக்கான விருது, பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதுவே யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் மருத்துவப் பீட வரலாற்றில், இது வரை நிகழாத ஒரு தனித்துவமான நிகழ்வாகும். பல்வேறு துறைகளில் எட்டு தங்கப் பதக்கங்கள் என்பது ஒரு வரலாற்றுச் சாதனை. ஒரே மாணவரால் அதிக எண்ணிக்கையில் பெறப்பட்ட பதக்கங்களாக இது பதிவாகியுள்ளது.

சாதாரண நடுத்தர குடும்பப் பின்னணியில் இருந்து கல்வியை நோக்கமாகக் கொண்டு முன்னேறிய இவர், தன்னுடைய ஊரான நயினாதீவிற்கும், கல்வி கற்ற பாடசாலைக்கும், பல்கலைக்கழகத்திற்கும் மட்டுமல்லாது முழு இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரது சாதனையைப் பார்த்து துணைவேந்தர் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்ததுடன், வேந்தரும் தமது ஆச்சரியத்தையும் பாராட்டையும் பதிவு செய்தனர். அத்தோடு நின்று விடாமல் முழு அரங்கமே கைதட்டி தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்

அதாவது, மருத்துவப் படிப்பிற்குள் நுழைவதே பலருடைய பெரிய கனவு. அதனை வெற்றிகரமாக முடிப்பதே மிகப்பெரிய சாதனை. ஆனால், அதற்குப் பின் ஒவ்வொரு துறையிலும் உச்ச சாதனையைத் தொட்டு,தனித்துறைகளுக்கான சிறப்பு தங்கப் பதக்கங்களைப் பெறுவது அரிதான நிகழ்வு.

சத்திர சிகிச்சை, மகப்பேற்றியல், குழந்தை நல மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்கி, எட்டு பதக்கங்கள் மேடையில் வழங்கப்பட்ட தருணம் அந்த அரங்கில் இருந்த அனைவருக்கும் மறக்க முடியாத நினைவாக மாறியுள்ளது. இன்று இலங்கை முழுவதும், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு, பாரட்டப்படும் இந்தச் செய்தி,சாதாரண வெற்றிக் கதை அல்ல இது உழைப்பின், ஒழுக்கத்தின், கல்விப் பற்றின் வெற்றி ஆகும்.

புனிதமான மருத்துவத் துறையைத் தேர்வு செய்து, அதில் வரலாறு படைத்து, “கல்வியால் சமூகம் எவ்வளவு உயரத்திற்கு செல்ல முடியும்”என்பதற்கு அபிராமியின் இச் சாதனை ஒரு சிறந்த உதாரணம் ஆகும். வடக்கு மாகாணத்தில் பெண் கல்வியின் எழுச்சியையும், தொழில்சார் துறைகளில் அவர்கள் காட்டும் ஆளுமைகளையும் இவை பறைசாற்றுகிறது.

மருத்துவப் படிப்பு என்பது சாதாரண கல்வித் தேர்வு அல்ல. குறிப்பாக இலங்கையில்,உயர்தர (A/L) பரீட்சையில் மிக உயர்ந்த பெறுபேறுகளைப் பெற்று, கடுமையான போட்டித் தன்மையைத் தாண்டி மட்டுமே இத் துறைக்குள் நுழைய முடியும். கோட்டா அடிப்படையில் வாய்ப்பு கிடைத்தல் அதன் பின் கற்றறிந்த்ய் வெஇயேறுதல் என்பது முழுமையான உழைப்பும் திறமையும் தான்.

நற்குணம் அபிராமி அவர்கள் முதலில் உயர்தரத்தில் சிறப்பாகப் பயின்று மருத்துவப் பீடத்திற்குள் நுழைந்தார். ஆனால், அதுவே இறுதி சாதனை அல்ல. மருத்துவப் படிப்புக்குள் நுழைந்த பின்பும் கடுமையான பாடத் தொகுதிகள், தொடர்ச்சியான மதிப்பீடுகள், தீவிரமான போட்டி இவை அனைத்தையும் வென்று முன்னேறியிருக்கிறார்.அத்தனை துறைகளிலும் ஒன்று தவறாமல் பதக்கங்கள் பெற்றிருக்கிறார்.

சமீப காலங்களில் நாம் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி வெற்றி பெறுகின்ற எம் இளம் திறமையாளர்களை ஆரவாரம் செய்து கௌரவிக்கிறோம். ஆகவே, கல்வியில், மருத்துவப் பீட வரலாற்றில் புதிய சாதனை படைத்த மாணவிக்காக தனி பாராட்டு விழா நடத்தப்பட வேண்டாமா? மருத்துவப் பீடம் சார்பில்? பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில்?அவருடைய சொந்த ஊர் மக்களால்? யாழ்ப்பாண சமூக அமைப்புகளால்? மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வழங்கப்படும் பிராந்திய விருதுகளிலும் குறிப்பாக,யாழ்ப்பாணத்தில் வழங்கப்படும் உயரிய கௌரவ விருதுகளான” யாழ் விருதி” இவரது பெயர் இடம்பெற வேண்டியது காலத்தின் கோரிக்கை.

ஒரு தலைமுறைக்கே எடுத்துக்காட்டாக நிற்கும் சாதனையை அபிராமி அவர்கள் பதிவு செய்துள்ளார். இத்தகைய சாதனைகளை நாமே பாராட்டி இளம் தலைமுறையினருக்கு எடுத்துக் காட்டாக பகிரப்பட வேண்டும்.

இந்த சாதனையை நிகழ்த்திய மாணவியைப் போலவே, எந்த பாகுபாடும் இன்றி திறமைக்கு உரிய அங்கீகாரம் வழங்கிய மருத்துவப் பீடத்திற்கும், ஒவ்வொரு துறையிலும் மதிப்பீடு செய்து பதக்கம் வழங்கிய துறைகளுக்கும்,விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மனமார்ந்த பாராட்டுகள் தெரிவிக்கப்பட வேண்டும்.

இது ஒரு மாணவியின் வெற்றியே அல்ல. இது கல்வியின் வெற்றி. இது ஒழுக்கத்தின் வெற்றி. இது இளம் தலைமுறையின் திறமைக்கான சான்று. மருத்துவம், தொழில்நுட்பம், இயந்திரவியல், ஆராய்ச்சி, விமான பொறியியல் போன்ற பல்வேறு துறைகளிலும் கண்டுபிடிப்புகள் செய்து என் இளம் தலைமுறையினர் உலகிற்கு உதாரணமாக நிற்க வேண்டும்.

இந்த மாணவியின் சாதனைகள் சாதாரண சாதனைகள் அல்ல, பலருக்கும் மருத்துவம் கனவு மட்டுமே. இந்நிலையில் நற்குணம் அபிராமி, பல துறைகளிலும் சாதனை படைத்து, ஒரு முன்மாதிரியாக வெளிப்பட்டு இருக்கிறார்.

இவ்வாறு நம் சமூதாயத்தில் நல்ல தரமான மாணவர்களை உருவாக்கி, அவர்களை முன்னெடுக்க நாங்கள் முயற்சி செய்ய வேண்டும். அவர்களை பாராட்டும் விதத்தில் நாம் அவர்களின் சாதனைகளை வெளிப்படுத்த வேண்டும்.

பாடசாலைகளில் மாணவர்களிடம் உள்ள அனைத்து திறமைகளையும் வெளிக் கொணரல் வேண்டும். இசை, நடனம், பாடல்,விளையாட்டு போன்ற பல துறைகளிலும் இளம் தலைமுறையினரை வழிக்காட்டப்பட வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள் இதற்கு ஒரு உந்து சக்தியாக செயற்படல் வேண்டும்.

பாடசாலைகளில், கல்லூரிகளில்,நல்வழிகாட்டும் சொற்பொழிவுகள்(motivational speech) தினமும் மாணவர்களுக்கு வழங்கப்படல் வேண்டும். குறைந்தது ஒவ்வொரு தவணைகளும் ஆரம்பிக்கும் போது Motivation speech கள் செய்யப்பட வேண்டும்.

இந்திய கல்லூரிகளில் பள்ளிகளில் இவை சிறப்பாக நடைபெறுகின்றன.

இப்படி சாதனை புரிந்த மாணவர்கள் மற்றும் வேறு துறையில் சாதித்தோர் அழைக்கப்பட்டு ஊக்கப்படுத்தும் நெறிப்படுத்தும் பேச்சுக்கள் இடம்பெற வேண்டும். அப்போது தான் மாணவர்கள் நேர்வழியில் செல்ல ஊக்கப்படுத்துவதோடு சாத்திக்கும் வெறியையும் தூண்டிவிடும்.

இன்று சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுவது தேவையற்ற, பயனற்ற , சமூகத்தின் பிரள்வான நிகழ்வுகளையே அதிகம் பகிருகிறோம்.போதைப்பொருள் கடத்தல், வன்முறை, தற்கொலை,வாள் வெட்டு, கொலை,கொள்ளை, குற்றச் செயல்கள் போன்ற விடயங்களை அதிகம் பகிர்வதற்குப் பதிலாக, நல்ல உதாரணமான சாதனைகளை அதிகம் பகிரல் வேண்டும்.

அதுவே சமூக ஊடகங்களில் சீரழிந்து செல்லும் இளம் தலைமுறைக்கு புதிய திசை காட்டும். இவ்வாறான சாதனைகளை சமூக ஊடகங்களில் முன்மாதிரியாக்கி, மருத்துவப் பீடத்தில் மட்டுமல்ல பிற துறைகளிலும் இதே மாதிரி முன்மாதிரி மாணவர்களை வெளிப்படுத்த வேண்டும்.
இதன் மூலம், பிள்ளைகள் தவறான பாதைக்கு செல்லாமல் நல்ல வழியில் சென்று பெரும் சாதனை பெற முடியும். யாழ்ப்பாணம் மற்றும் ஈழத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

நற்குணம் அபிராமி போன்ற திறமைமிக்க மருத்துவர்கள் இன்னும் மருத்துவத்தில் சாதனை படைத்து மண்ணுக்கும் பெருமை சேர்ப்பார்கள் என்பதில் ஐயமில்லை.இந்த மகத்தான வெற்றியைப் பாராட்டுவதோடு, அவரது எதிர்கால மருத்துவ சேவை மேலும் சிறந்து விளங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எம் ஈழத்து இளம் தலைமுறை பல துறைகளினூடாக சாதித்து வருவது கண்கூடு. அவர்களை முன்மாதிரியாக ரோல் மொடலாக வெளிக்காட்டுவதன் மூலம் மற்றைய இளையோரையும் சாதனை புரியவ்தூண்டலாம் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

கு.மதுசுதன்
B.Sc(Hons),M.Sc

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>