யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு ஈரநில பிரதேசத்தில் உலக ஈர நில தினம் அனுஷ்டிப்பு!

Share

ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் சூழலியல் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் சர்வதேச உலக ஈர நில தினம் 2ம் திகதி திங்கட்கிழமை அன்றைய தினம் (02.02.2026) கடைப்பிடிக்கப்பட்டது.

அந்தவகையில் யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில், உலக ஈர நில தினம் யாழ் மாவட்டத்தின் நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அரியாலை கிழக்கு ஈரநில பிரதேசத்தில் அன்றைய தினம் காலை 9.00 மணிக்கு அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் திரு. லோ.கி ஆனந் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் கலந்து சிறப்பித்தார்.

இங்கு மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில், உலக ஈரநில தினத்தின் தேசிய விழா இன்று பத்தரமுல்லை ‘அபே கம’ வளாகத்தில் பிரதமர் கெளரவ ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது எனவும், அதற்கு இணையாக யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு யாழ்ப்பாண. மாவட்ட மத்திய சிற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் இங்கு நடைபெறுகின்றது எனவும் தெரிவித்தார்.

மேலும், ஈர நிலங்கள் நீர் வளங்களைப் பாதுகாப்பதிலும், வெள்ள கட்டுப்பாட்டிலும், உயிரியல் பல்துறை பாதுகாப்பிலும் முக்கிய பங்காற்றுகின்றன எனவும், இவற்றை நாம் பாதுகாக்க வேண்டிய அவசியத்தினையும் எடுத்துக் கூறினார். மேலும், இவ்வாறான பிரதேசங்களைப் பாதுகாத்து இயற்கைச் சமநிலையை பேணுவது முக்கியமானதாகும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

“ஈரநிலங்கள் மற்றும் பாரம்பரிய அறிவு – கலாசார பாரம்பரிய தந்தைக்காக கொண்டாடுதல் “எனும் தொனிப்பொருளில் இன்றைய தினம் உலகளாவிய ரீதியாக கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வு விழிப்புணர்வு நடைபவனியுடன் ஆரம்பமாகி கண்டல் தாவர மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டதுடன், விழிப்புணர்வு உரைகளுடன் ஈர நில தினம் தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட வழிகாட்டல் கையேடுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சுற்றாடல் பிரிவு பொலிஸார், யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள், தெல்லிப்பளை யூனியன் கல்லூரி சுற்றாடல் முன்னோடி சனாதிபதி பதக்கதாரி மாணவர்கள், பாடசாலை சுற்றாடல் கழக முன்னோடி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>