யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அரச பொது நிர்வாகத்தில் அதிக ஆளணி காணப்படுகின்றது

Share

அரசின் நிதி எவ்வாறு விரயமாகின்றது என்பதற்கு நல்ல உதாரணம் !

ந.லோகதயாளன்.

இலங்கையில் உள்ள மாவட்டச் செயலகங்கள், மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி அலுவலகங்களில் அளவிற்கு அதிகமான பணியாளர்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் உறுதி செய்கின்றது.

முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசதுறை பதவியணி பற்றிய தகவலிலேயே இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய வடக்கு மாகாணத்தின் 2 மாவட்டங்களில் முகாமைத்துவ சேவை பணியாளர்கள் அதிகளவில் மேலதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2,133 பேர் இருக்க வேண்டியபோதும் 2,659 பேர் பணியில் உள்ளதனால் 526 உத்தியோகத்தர்கள் மேலதிகமாக உள்ளனர். இருந்தபோதும் நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை ஆகிய 3 பிரதேச செயலகங்களிலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட மிக குறைவான உத்தியோகத்தர்களும், மாவட்டச் செயலகம் உள்பட ஏனைய 12 பிரதேச செயலகங்களிலும் மிக அதிக ஆளணியினரும. காணப்படுகின்றனர்.

மாவட்டச் செயலகத்தில் 178 பேருக்கு பதிலாக 226 பேரும், காரைநகரில் 78 உத்தியோகத்தர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 92 பேரும், யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் 141 உத்தியோகத்தர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 193 பேரும், நல்லூரில் 158 உத்தியோகத்தர்கள் அனுமதிக்கப்பட்டபோதும் 221 உத்தியோகத்தர்கள் பணியில் உள்ளனர் , சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 131 உத்தியோகத்தர்களிற்காக 175 உத்தியோகத்தர்களும், உடுவிலில் 132 பேர் அனுமதிக்கப்பட்டபோதும் 210 பேரும் தெல்லிப்பளையில் 167 உத்தியோகத்தர்களிற்கான அனுமதி உள்ளபோதும் 200 உத்தியோகத்தர்கள் பணியாற்றுகின்றனர்.

இதேபோன்று சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் 208 உத்தியோகத்தர்களிற்கே ஆளணி அங்கீகாரம் உள்ளபோதிலும் இங்கே 261 உத்தியோகத்தர்கள் பணியில் உள்ளனர் , பருத்தித்துறையில் 150 உத்தியோகத்தர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 190 உத்தியோகத்தர்களும் , கரவெட்டி பிரதேச செயலகத்தில் 143 பேரிற்கு அனுமதிக்கப்பட்டபோதிலும் 229 உத்தியோகத்தர்கள் பணியில் உள்ளதாக முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இவ்வாறே கோப்பாய் பிரதேச செயலகத்திற்கான ஆளணி அங்கீகாரம் 143 உத்தியோகத்தர்களிற்கு இருக்கும்போது அங்கே 203 உத்தியோகத்தர்கள் பணியில் உள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்த மட்டில் 556 உத்தியோகத்தர்கள் தேவையானபோதும் 633 உத்தியோகத்தர்கள் பணியில் உள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 586 பேரிற்காக 501உத்தியோகத்தர்களும், முல்லைத்தீவில் 733 பேரிற்காக 533 பேரும், மன்னாரில் 685 பேருக்காக 567 பேரும் பணியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>