இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை கூட்டமானது 23ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் நழைடபெற்ற போது அங்கு கலந்து கொண்டு விசமத்தனமான கருத்துக்களை முன்வைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீது பாய்ந்த உறுப்பினர்கள் – அவரைத் தாக்க முற்பட்டதால் கூட’டம் இடையில் நிறுத்தப்பட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கட்சியை விட்டு விலகிய காரணத்தால் அந்த பதவிகளை மீள் நிரப்புவதற்கான நிர்வாக தெரிவு இடம்பெற்றது. காரைநகர் பிரதேச சபையும் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளைக்குள் உள்ளடங்குவதால் அங்கு இருப்பவர்களுக்கும் முக்கிய பதவி ஒன்று வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அந்தவகையில் உப தலைவராக இருந்த ச.ஜயந்தன் தலைவராகவும், காரைநகரை சேர்ந்த ஆனைமுகன் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். இந்நிலையில் உபதலைவர் பதவி வறிதாக காணப்படுவதாகவும் அதற்கு ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என்ற நிலையில் முரண்பாடு ஆரம்பித்தது. இருப்பினும் அத்துமீறி பரணி உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இதன்போது கட்சியின் நீண்டகால உறுப்பினர்களுக்கும் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையே கடுமையான கருத்து மோதல் இடம்பெற்றது.
அந்தவகையில் கட்சியின் உறுப்பினர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
கட்சியின் மத்தியகுழு தலைவர் தெரிவு இடம்பெற்ற நிலையில் அந்த தெரிவு இடம்பெற்ற முறை பிழையானது என கூறி நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய குழுவில் பதில் தலைவர், பதில் செயலாளர் பதவியே நடைமுறையில் காணப்படுகிறது.
மத்தியகுழுவில் இவ்வாறு இருக்கும்போது தொகுதிக் கிளையில் வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்றால் பதில் தலைவர், பதில் செயலாளரை தெரிவு செய்யலாம். ஆனால் தலைவர், செயலாளர் பதவியே தெரிவு செய்யப்பட்டது. உப தலைவரின் வெற்றிடத்தை நிரப்புவது என்றால் ஒட்டுமொத்தமாக உறுப்பினர்களையும் தெரிவு செய்யலாமே. ஏன் தலைவர், செயலாளர், உபதலைவர் தெரிவுகள் மாத்திரம் இடம்பெற வேண்டும்.
கட்சியின் உறுப்பினர்கள் அல்லாதோரும் வாக்களித்ததாக கூறித்தான் தலைவர் தெரிவு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் கட்சியின் உறுப்பினர்களோ என்றுகூட தெரியவில்லை. இரண்டு வருடங்களுக்கு மேலாக கட்சியின் உறுப்பினர்களாக இருப்பவர்களே நிர்வாகத்துக்குள் வரமுடியும். அந்தவகையில் இன்றைய கூட்டத்தின் தெரிவுகள் யாப்பிற்கு முரணாக இருக்கிறது.
தமக்கு சாதகமானவர்களை அழைத்தே இந்த நிர்வாக தெரிவு இடம்பெற்றது. காரணம் என்னவென்றால், தமக்கு ஆதரவானவர்களை தெரிவு செய்தால் அடுத்தகட்ட மத்திய குழுவுக்கான தலைவர், செயலாளர் உள்ளிட்ட முக்கிய தெரிவுகள் இடம்பெறும்போது அவர்களை வைத்து தாங்கள் அந்த முக்கிய பதவிகளுக்குள் வரமுடியும் என்பதே நோக்கமாகும்.
பதில் தலைவர், பதில் செயலாளர் பதவிகளை வைத்துக்கொண்டு தொகுதிக் கிளையை நடாத்த முடியாது என்று சுமந்திரன் கூறினார். பதில் தலைவர், பதில் செயலாளர் பதவிகளை வைத்துக்கொண்டு தொகுதிக் கிளையையே நடாத்த முடியாது என்றால் அந்த பதவிகளை வைத்துக்கொண்டு எவ்வாறு ஒரு மத்திய குழுவை நியமிக்க முடியும்?
சுமந்திரனை விட கட்சிக்குள் மூத்தவர்கள் இருக்கின்றோம். நாங்கள் கட்சியை வளர்ப்பதற்காக ஒவ்வொரு வீட்டு படலைகளையும் திறந்து வாக்கு சேகரித்தோம். சுமந்திரன் எத்தனை படலைகளை திறந்து வாக்கு சேகரித்தார்? பதவிகளுக்கு தெரிவு செய்யப்படும் அவருக்கு சார்பானவர்கள் எத்தனை படலைகளை திறந்து வாக்கு சேகரித்தனர்?
தாங்களே ஒன்றை சொல்லி, தாங்களே ஒன்றினை தீர்மானித்துவிட்டு அதன்படி நடக்க வேண்டும் என்று கூறுகின்றனர். தேர்தலுக்கு பிரசாரம் செய்து வீடு வீடாக சென்று வாக்கு கேட்பதற்கு நாங்கள் தேவை, ஆனால் எஙாகளது கருத்துகளை கணக்கில் எடுப்பதில்லை. எந்த தேர்தல் வந்தாலும் ஏற்கனவே போட்டியிட்டவர்களுக்கே சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. கட்சிக்காக உழைப்பவர்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்றனர்.
அன்றைய கூட்டத்தில் சட்டத்தரணி சுமந்திரனை பார்த்து உறுப்பினர்கள் சிலர் ஒருமையில் விழித்து கடுமையாக சாடினர். நிலையை சமாளிக்க முடியாத நிலையில், நன்றியுரையும் இடம்பெறாமல் சுமந்திரன் கூட்டத்தை இடைநிறுத்திவிட்டு வெளியேறினார்.