யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கையில் இனப்பரம்பல் பற்றிய அதிர்ச்சியூட்டும் தரவுகள்

Share

சுய இனவழிப்பு செய்கின்றதா எமது ஈழ தமிழ் இனம்?

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள், அல்லது வடக்கிலிருந்து உலகம் முழுவதும் பரவி வாழும் அனைவரும் முக்கியத்துவம் கொடுத்து கவனிக்க வேண்டிய விடயத்தினை நாம் இக்கட்டுரையில் ஆராய போகின்றோம்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்பது தமிழரின் கல்வி அடையாளமாகவும், கலாச்சார அடையாளமாகவும், இன அடையாளமாகவும் சிறந்து விளங்குகிறது. ஆரம்ப காலத்திலிருந்து இன்றுவரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வெளியேறியவர்களுக்கு சமூகத்தில் ஒரு நல்ல பெயர் இருந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

இந்நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள “பொன் விழா மலர் 2024” என்ற அறிக்கையூடாக தற்போது பேராசிரியர்கள், கல்வி சமூகம் சார்ந்தவர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள் மத்தியில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மலரில் இடம்பெற்றுள்ள புள்ளிவிபரங்கள் மற்றும் மாணவர் ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் இந்த விடயம் பேசப்படுகிறது.

இந்த பதிவு இனவாதப் பதிவு அல்ல. பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்திலேயே உணரப்பட்ட சில உண்மைகளை அடிப்படையாகக் கொண்டும், பொன்விழா மலரினை அடிப்பட்ஃபையாகக் கொண்டும் சிந்தனை மற்றும் புத்திவாத நோக்கில் இந்த விடயம் ஆராயப்படுகிறது. இனத்தின் மீது பற்று கொண்டவர்கள், இனப்பரம்பல் மீது கவனம் செலுத்துவோர், தமிழ் மீது பற்று கொண்டவர்கள் அனைவரும் இந்த விடயத்தை கவனமாக பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

2023–2024 கல்வியாண்டுக்கான விஞ்ஞான பீட (Science Faculty) மாணவர் புள்ளிவிபரங்கள்
பொன் விழா மலர் 2024-ல் வெளியிடப்பட்ட தகவல்களின் படி, விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் இனப்பரம்பல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

●முஸ்லிம்கள் – 11%
●தமிழர்கள் – 34%
● சிங்களவர்கள் – 55%

இங்கு குறிப்பிடப்படும் விஞ்ஞான பீடம் (Science Faculty) என்பது இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), தாவர அறிவியல்( Botany), மிருக அறிவியல் (Zoology), மீன் வள அறிவியல் (Fisheries), கணினி அறிவியல் (Computer Science), கணிதம் மற்றும் புள்ளிவிவரம் (Mathematics and Statistics) உள்ளிட்ட அனைத்து விஞ்ஞான கற்கைகளையும் உள்ளடக்கிய விஞ்ஞான பீடம் (Science Faculty) ஆகும். பொதுவான விஞ்ஞானப் பட்டம் – Bachelor of Science(General), முதன்மைப்படுத்தப்பட்ட விஞ்ஞானப் பட்டம் – Bachelor of Science(Honours), பயன்பாட்டு விஞ்ஞானப் பட்டம் – Bachelor of Science(Applied Science), கணினி அறிவியல் பட்டம் – Bachelor of Science in Computer Science ஆகிய பட்டங்களை வழங்கும் பிரதான பீடமாக இது செயல்படுகிறது.

உள்நாட்டு போர் காலங்களில், பல வெளிமாவட்ட‌ மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க வர முடியாத சூழ்நிலை நிலவியது. குறிப்பாக முஸ்லிம்ம மாணவர்கள், சிங்கள மாணவர்கள் வர முடியாத நிலைக்கில் இருந்தனர். அக்காலத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி. வவுனியா போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக யாழ்ப்பாண சமூகத்துக்குள் இருந்தவர்களே அதிகமாக கல்வி கற்றனர். ஆனால் தற்போதைய நிலைமை ஒரு பெரிய மாற்றத்தை காட்டுகிறது.

இந்த மாற்றம் இயல்பானதா அல்லது திட்டமிட்ட செயற்பாடுகளின் விளைவா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதனை “நாங்களே எங்களுக்கு வைத்த சொந்த சூனியம்” என சிலர் வர்ணிக்கின்றனர். இந்த ஆய்வில் தற்போது விஞ்ஞான பீடம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கலைப்பீடம், மருத்துவ பீடம், விவசாய பீடம் உள்ளிட்ட பிற பீடங்களையும் தனித்தனியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் 2023–2024 கல்வியாண்டுக்கான புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தபோது, சிங்கள மாணவர்கள் 55 வீதமாக, அதாவது 50 வீதத்தைத் தாண்டி இருப்பதாகக் காணப்படுகிறது. இந்த தகவல் இனவாதக் கருத்தாக அல்ல; சிந்தனைவாதம் மற்றும் புத்திவாத அடிப்படையிலான விவாதத்திற்காக முன்வைக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த பதிவை கவனமாகப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

மாகாண அடிப்படையிலான மாணவர் வருகை (Provoncial-wise Student Population):

●வடமாகாணம் (முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம்) – 26%
●கிழக்கு மாகாணம் – 8%
●வடமேற்கு மாகாணம் – 15%
●வடமத்திய மாகாணம் – 14%
●ஊவா மாகாணம் – 9%
● சப்ரகமுவா மாகாணம் – 6%
● மேற்கு மாகாணம் – 7%
●மத்திய மாகாணம் – 14%
●தென் மாகாணம் – 1%

(தென் மாகாணத்தில் பல பல்கலைக்கழகங்கள் உள்ளதால் அங்குள்ள மாணவர்கள் அப்பகுதியில் கல்வி கற்கின்றனர்.) ஆக 1% என்றவாறு தற்போது காணப்படுகிறது.

விஞ்ஞான பீடத்தில் சிங்கள மாணவர்கள் 55 வீதமாக உள்ளனர். ஆகவே, இந்த மாணவர்களே எதிர்காலத்தில் இளநிலை (Junior President) அதன் பின்னர் பல்கலைக்கழக தலைவர் (University President) போன்ற பொறுப்புகளுக்கு வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, “இது அரச இயந்திரத்தின் பிழையா?, “அரசு திட்டமிட்டு மாணவர்களை இங்கே அனுப்புகிறதா?” போன்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அந்த வகையான சிந்தனை இனவாதச் சிந்தனைக்குள் செல்வதாகவும் கருதப்பட்டுவிடும். ஆகவே இந்த விடயத்தை தெளிவாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது.

கல்வி குறித்த சமூக மனநிலை பற்றியும் இங்கு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. “படித்தால் வைத்தியர் ஆகவேண்டும், பொறியாளர் ஆக வேண்டும்” என்ற எண்ணம் தான் யாழ்பாண மையவாத மக்களிடம் ஆண்று தொட்ட்டு இன்றுவரை அதாவது 1978ஆம் ஆண்டில் A/L எடுத்தவர்களிடமும் இருந்தது; அதன்பின்னர் புலமைப் பரீட்சை (Scholarship) தேர்வுகளை கடந்தவர்களிடமும் அதே சிந்தனையே தொடர்ந்தது. ஆனால் 2025ஆம் ஆண்டில் உலகம் இணைய யுகத்தைத் தாண்டி, Artificial Intelligence(AI) யுகத்துக்குள் சென்றுவிட்ட நிலையில், இன்னும் அதே வரையறுக்கப்பட்ட குறுக்கிப்போபன எகல்லைக்குள் இருந்தே வடமாகண தமிழ் மாணவர்கள் கல்வியைப் பார்க்கிறார்கள். என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

இன்றைய உலகில் எண்ணற்ற துறைகள், பதவிகள் மற்றும் வாய்ப்புகள் இருக்கும்போது, ‘நான் வைத்தியர் ஆவேன்’, ‘நான் பொறியாளர் ஆவேன்’ என்பதே தொடர்ந்தும் முதன்மை கனவாகக் கூறப்படுவது ஒரு சமூகப் இன்றைய பல் வேறு துறைகள் மிகுந்த உலகில் குறைபாடான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பொறியியல் என்றாலே ஒரே பாதை என்ற புரிதல் இன்னும் நிலவி வருகிறது.

இது யாரையும் நகைச்சுவைக்கு உட்படுத்தும் பதிவு அல்ல. ஆனால் யாழ்ப்பாண சமூகமும், வடக்கு சமூகமும், பெற்றோர்களும் குழந்தைகளை மிக அதிக எதிர்பார்ப்புகளுடன் வளர்த்து, அவர்களை ஒரு குறிப்பிட்ட கனவுக்குள் மட்டும் கட்டுப்படுத்தி விடுகிறார்களா? என்ற கேள்வி இங்கு முன்வைக்கப்படுகிறது. அந்தக் குழந்தைகள் ‘ஏதோ பிரபஞ்சத்தை ஆளப் போகிறோம்’ என்ற அளவுக்கு அழுத்தத்துடன் வளர்க்கப்படுகிறார்களா? என்பதும் சிந்திக்க வேண்டியதாக வைக்கப்படுகிறது.

கல்வி என்பது பிள்ளைகளை ‘ஏற்றி இறக்கி’ கட்டாயப்படுத்துவதால் உருவாகும் ஒன்று அல்ல; அது மனநிலை, ஆர்வம் மற்றும் விடாமுயற்சியிலிருந்து உருவாகும் ஒன்று என்பதைக் காட்டுவதற்காக தாமஸ் அல்வா எடிசன் தொடர்பான ஒரு எடுத்துக்காட்டு. பள்ளிக்கூட ஆசிரியரினால் எடிசன்8இன் அம்மாவிற்கு எழுதப்பட்ட‌ கடிதத்தில், ‘உங்கள் மகன் மனவளர்ச்சி குன்றியவராக இருகிறார் போலும் இந்த மாணவனால்(எடிசன்) இப்பள்ளியில் கல்வி கற்க இயலாது’ என குறிப்பிடப்பட்ட கடிதத்தினை தாயார் மறைத்து வைத்து மகனை வீட்டிலேயே வளர்த்து கல்வி கற்பித்ததாகக் கூறப்படுகிறது. எடிசன் எந்தப் பள்ளியிலும், கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் அல்லது PHD போன்ற பட்டங்களிலும் பயின்றவர் அல்ல. இருந்தபோதும், உலகம் இருளிலிருந்து வெளிச்சத்துக்குள் வர காரணமான மின்குமிழ் கண்டுபிடிப்பை அவர் உருவாக்கினார்.

அவர் நூற்றுக்கணக்கான உலோகங்களைப் பரிசோதித்து, தோல்வியடைந்தாலும் முயற்சியை கைவிடவில்லை. ஒவ்வொரு தோல்வியையும் கற்றலாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டார். அந்த முயற்சியின் இறுதியில் மின்குமிழ் வெற்றிகரமாக ஒளிர்ந்தது. இதன் மூலம் சொல்லப்படுவது, தோல்வி என்பது முடிவு அல்ல; முயற்சியின் ஒரு கட்டமே. ‘நான் நூறு முறை தோல்வியடைந்தேன் என்பதற்காக அல்ல, நூறு வழிகள் வேலை செய்யாது என்பதைக் கண்டறிந்ததால்தான் வெற்றி கிடைத்தது’ என்ற எடிசனின் கருத்தும் இங்கு நினைவூட்டப்படுகிறது.

இந்த எடுத்துக்காட்டின் மூலம், இன்றைய சமூகத்தில் ‘வைத்தியர் ஆக வேண்டும், பொறியாளர் ஆக வேண்டும்’ என்ற ஒரே பாதையில் குழந்தைகளை கட்டாயப்படுத்தும் மனநிலையை மீள சிந்திக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்படுகிறது. உலகம் இணைய யுகத்தையும் AI யுகத்தையும் எட்டியுள்ள நிலையில், கல்வி மற்றும் திறமை குறித்து விரிவான பார்வை தேவை என்பதே இந்த எடுத்துக்காட்டின் மைய கருத்தாகும்.

இன்றைய சமூகத்தில் ‘படித்தால் மருத்துவம் (Medicine), பொறியியல் (Engineering), நிர்வாகம் மற்றும் வணிகம் (Management Studies Commerce) ஆகிய துறைகளில் மட்டுமே’ என்ற குறுகிய கல்வி மனநிலையின் விளைவுகள் யாழ் மாவட்டத்திலும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும், வடமாகாணத்தின் இனப்பரம்பல் மாற்றத்திலும் பிரதிபலிப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதனை திட்டமிட்ட இன அழிப்பாக புரிந்து கொள்ள வேண்டாம். முன்னர் இருந்த கல்விக் கொள்கைகள், கோட்டா முறைகள் மூலம் நடந்த இன பரம்பல் மாற்றங்கள் வேறு விடயம்; தற்போதைய நிலைமை அதிலிருந்து வேறுபட்டதாகக் காணப்படுகிறது.

மருத்துவம் (Medicine) அல்லது பொறியியல் (Engineering) கிடைக்காவிட்டால் வேறு துறைகளில் படிக்க மாட்டோம் என்ற மனநிலை ஒரு சில வட பகுதியிலுள்ள மாணவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அதை விட விஞ்ஞான பீடம் கிடைதால் கூட செல்லாமல் குடும்ப ஆதரவுடன் ,புலம்பெயர் சொந்தங்களின் நிதி ஆதரவுடன் தனியார் கல்லூரிகளில் படிப்பது, கொழும்பு போன்ற நகரங்களுக்கு சென்று அதிக செலவில் கல்வி கற்பது, அல்லது வெளிநாடுகளுக்குச் செல்வது போன்ற தேர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் உள்ளூர் பல்கலைக்கழகங்களில், குறிப்பாக விஞ்ஞான பீடங்களில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் குறைந்துள்ளதாக காணப்படுகிறது .

இதன் காரணமாக, யாழ்ப்பாண மானவ சமூகத்தில் (எல்லோருமல்ல) விஞ்ஞான பீடம் ஒரு ‘தொடக் கூடாத’ துறையாக பார்க்கப்படும் மனநிலை உருவாகியுள்ளது. சித்த மருத்துவம் அல்லது விஞ்ஞான பீடம் கிடைத்தால் செல்ல மாட்டோம்; ஆனால் வேறு நகரங்களில் அல்லது வெளிநாடுகளில் வேறு பாடநெறிகள் படிப்போம் என்ற அணுகுமுறையே மேலோங்கி வருகிறது.

இந்தச் சூழ்நிலையின் விளைவாக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் இனப்பரம்பல் மாற்றம் ஏற்பட்டுள்ளமை தெளிவாகிறது. தற்போதைய நிலவரப்படி முஸ்லிம்கள் 11 வீதம், தமிழர்கள் 34 வீதம், சிங்கள மாணவர்கள் 55 வீதம் என மாணவர் விகிதம் காணப்படுகிறது. கல்வி வாய்ப்புகள் குறைந்த நிலையிலும் சிங்கள மாணவர்கள் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் தொடர்ந்து முயன்று கல்வியை கைப்பற்றியுள்ளனர்; இதற்காக அவர்களையும், அவர்களை ஊக்குவித்த பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும்.

இதற்கு மாறாக, கல்வி ஒடுக்குமுறை என்ற பெயரில் ஆயுதம் எடுத்த ஒரு தலைமுறையின் பின், இன்றைய தமிழர் சமூகம் பெட்டிப் படிக்கைகளுடன் வெளிமாவட்டங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லும் நிலை அதிகரித்துள்ளதாகவும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இதன் மூலம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை யாரும் திட்டமிட்டு இனப்பரம்பலை மாற்றவில்லை மாறாக வடக்கு சமூக மனநிலையும் கல்வி தேர்வுகளுமே இந்நிலைக்கு காரணமாக அமைந்துள்ளன.

இன்றைய காலத்தில் மிகுந்த கவலைக்குரிய ஒரு சமூக நிலைமை குறித்து பேச வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். தாதியர் (Nursing) கல்வி தொடர்பான தமிழ் சமூகத்தின் பார்வை மற்றும் அதனால் உருவான விளைவுகள் தற்போது வெளிப்படையாகத் தெரிகின்றன.

தாதியர் (Nursing) என்ற தொழில், பல ஆண்டுகளாக ‘தீண்டத் தகாதது’, ‘கீழ்த்தரமான வேலை’ என்ற தவறான மனப்பாங்கில் பார்க்கப்பட்டு வந்தது. (எல்லோராலும் அல்ல) அவமதிக்கும் அளவிற்கு தாதியர் தொழிலை இழிவுபடுத்தியதன் விளைவு தான், இன்றைக்கு படித்த சமூகமே தாதியர் படிப்பை மேற்கொள்ளாமல் வெறுக்கும் நிலைக்கு வந்துள்ளது.

ஆனால் உண்மை நிலை வேறு. இன்றைய மருத்துவ அமைப்பில், பல முக்கிய பணிகளை தாதியர்களே செய்கிறார்கள். நோயாளிகளுக்கான மருந்தளிப்பு, உடல் நிலை கண்காணிப்பு, அளவீடுகள், பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை முதல் உயர் நிலை பணிகள் வரை தாதியர்களின் பொறுப்பில் உள்ளது. பல சந்தர்ப்பங்களில் வைத்தியர் வந்து குறிப்பெழுதி செல்லும் அளவிற்கு மட்டுமே இருப்பதாகவும், நேரடி பராமரிப்பு முழுவதும் தாதியர்களால் மேற்கொள்ளப்படுவதாகவும் காணப்படுகிறது. இதற்கு தாதியர் கல்வியில் அவர்கள் பெறும் உயர்ந்த பயிற்சியே காரணம். எனவே தாதியர் தொழிலுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்.

தாதியர் பயிற்சி துறைகளுக்கு வடக்கு மாணவர்கள் பலர் விரும்பாததன் காரணமாக இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை முதல் மாவட்ட மற்றும் பிரதேச வைத்தியசாலைகள் வரை ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழ் சமூக தாதியர்களின் எண்ணிக்கை குறைந்து, அவர்களுக்குப் பதிலாக சிங்கள தாதியர்கள் பெருமளவில் சேவையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இன்முகத்தோடு நோயாளிகளை வரவேற்று, நல்ல சேவையையும் பராமரிப்பையும் வழங்கி வருகின்றனர்.

வவுனியாவின் தாதியர் பாடசாலைகளிலும், யாழ்ப்பாணத்தின் தாதியர் பாடசாலைகளிலும் மாணவர் சேர்க்கை விகிதங்களைப் பார்த்தால் பெரும்பாலானோர் சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்கள் என்பதும், தமிழ்மாணவர்களின் பங்கேற்பு மிகக் குறைவாக இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் தாதியர் கல்வியை முழுமையாகப் பயின்று, உத்தியோகம் செய்து, விடுதிகளில் தங்கி பின்னர் குடும்பங்களை கொண்டு வந்து இங்கேயே நிரந்தரமாக வாழும் நிலையும் உருவாகியுள்ளது. வீடு, காணி, பள்ளிக்கூடம், விகாரைகள் போன்ற அமைப்புகள் உருவாகி, அந்த சமூகங்கள் இயல்பாகவே வேரூன்றி வளர்ந்து வருகின்றன.

இதன் பின்னர் சிலர் கொடி பிடித்து, ‘விகாரை கட்டக்கூடாது’, ‘பள்ளிக்கூடம் வரக்கூடாது’ என போராடுவதில் அர்த்தமில்லை. இவ்வாறு போராடுவதற்குப் பதிலாக, இந்த விடயங்களைப் பற்றி பாராளுமன்றத்தில் பேச வேண்டியவர்கள், புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், சமூக தலைவர்கள் என்ன செய்தனர் என்ற கேள்வி எழுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கவும், தாதியர் போன்ற அவசியமான துறைகளில் சேரவும் தமிழ் மாணவர்களை ஊக்குவிக்கும் புத்திசார்ந்த பதிவுகளோ, முயற்சிகளோ மேற்கொள்ளப்படவில்லை.

இன்றைய நிலையில், ‘மலையக மக்கள் வடக்கு வர வேண்டும், அவர்கள் இங்கு வேலை செய்ய வேண்டும்’ என்ற பேச்சுகள் அதிகரிக்கின்றன. ஆனால் அதே நேரத்தில், உள்ளூர் இளைஞர்கள் வேலைக்கு செல்ல விருப்பமில்லாமல், டிக்டாக்(Tiktok) சமூக ஊடகங்கள் (Social Media’s) போன்றவற்றில் நேரத்தை கழிக்கும் நிலையும் காணப்படுகிறது. வேலை வாய்ப்புகள் இருந்தும், அதை பயன்படுத்தாமல் இருப்பதே இந்த பிரச்சினையின் மையம்.

இதன் விளைவாக, ஒரு இனப்பரம்பல் மாற்றம் மெதுவாக துரிதமாக வடக்கில் கிழக்கில் நடைபெறுகிறது. இந்த நிலையைப் பார்த்தால், தமிழினத்தை திட்டமிட்டு அழிப்பது சிங்களவர்கள் மட்டும் அல்ல; நமது தவறான பார்வை, அலட்சியம் , தொலைநோக்கு பார்வையற்ற நிலை மற்றும் செயல் இன்றிய நிலை மூலமாக நாமே நம்மை அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே கடுமையான உண்மை.

இறுதியாக துரித கதியில்’இனத்தை திட்டமிட்டு அழிப்பது தமிழர்கள் ஆகிய நாங்களே’ இந்த உண்மையை முதலில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று ஈழத் தமிழினம் எதிர்கொள்கின்ற மிகப்பெரிய அபாயம், வெளியில் இருந்து வரும் நேரடி ஒடுக்குமுறை அல்ல; தமிழர்களை தமிழர்களே மெதுவாக அழித்துக் கொண்டிருக்கும் நவீன சுய இன அழிப்பு செயற்பாடே.

மற்றவர்களை விரல் நீட்டி குற்றம் சாட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இன உரிமைக்காக, இன அடையாளத்திற்காக போராடிய ஒரு இனம் இன்று இனப்பற்றுமில்லாமல், தன் தலைமுறையின் எதிர்காலம் குறித்து சிந்திக்காத, தொலைநோக்கு பார்வையற்ற இனமாக உலக வரைபடத்தில் மாறி நிற்கிறது. அதுதான் ஈழத் தமிழ் இனம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய வீழ்ச்சி.

இந்த நிலைக்கு அரசியல்வாதிகளும் பொறுப்பானவர்கள். எந்த நீண்டகாலத் திட்டமும் இல்லை, எந்த தலைமுறை கொள்கைகளும் இல்லை. அரசியல் என்பது சுயநல அரசியலாக மட்டுமே மாறி, இனத்தின் எதிர்காலம் பற்றிய சிந்தனை எங்கும் காணப்படவில்லை. அதேபோல் சில மதஜீவிகள் மற்றும் புத்திஜீவிகளும் தனிப்பட்ட மேடைகளில் மட்டுமே தங்களை வெளிப்படுத்திக் கொண்டு, உண்மையான வழிகாட்டுதலையும் சமூக பொறுப்பையும் தவிர்த்து வருகிறார்கள்.

‘என் உழைப்பை காப்பாற்றினால் போதும்’ என்ற சிந்தனையோடு வாழும் இந்த தலைமுறை, பிள்ளைகளுக்கு எத்தகைய கொள்கைகளை எடுத்துச் செல்ல வேண்டும், எந்த துறைகளில் படிக்க வேண்டும், சமூகத்திற்கு என்ன தேவை என்பதைக் குறித்து யாரும் சிந்திப்பதில்லை. இதன் விளைவாக உருவாகும் நிலையை விளக்கும் ஒரு சிறிய எடுத்துக்காட்டே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர் இனப்பரம்பல்.

‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு’ என்பதுபோல், இந்த புள்ளி விபரம் முழு சமூக நிலையை வெளிப்படுத்துகிறது. இது மாணவர்களுடன் மட்டும் நிற்கவில்லை. அதேபோல் ஊழியர் நியமனங்களிலும் தேசிய கொள்கை என்ற பெயரில் சமநிலை குறித்து பேச இயலாத நிலை உருவாகியுள்ளது. சிங்கள ஊழியர்கள் அதிகரித்து, அவர்கள் குடும்பங்களுடன் வந்து குடியேறுகிறார்கள்; பிள்ளைகள் பிறக்கிறார்கள்; பள்ளிக்கூடங்கள் உருவாகின்றன; சமூக அமைப்புகள் வேரூன்றி வளர்கின்றன. இதைத் தடுக்க இயலாத நிலையே இன்றைய உண்மை.

ஈழத்தின் வரைபடம் ஏற்கனவே மாறிவிட்டது. இந்த மாற்றம் 2025–2035 காலப்பகுதியில் எவ்வாறு வேகமாக மாறும் என்பதை, வேறு பதிவுகளில் விரிவாக சந்திப்போம்.

இன்றைக்கு சொல்ல வேண்டிய ஒரே செய்தி: தமிழினத்தை அதிக வேகத்தில் அழிப்பது பிறர் அல்ல — தமிழர்கள் ஆகிய நாங்களே. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாமல், எந்த அரசியல் தீர்வும், எந்த சமூக மாற்றமும் சாத்தியமில்லை.

கு.மதுசுதன்
B.Sc(Hons),M.Sc
அரசியல் ஆய்வாளர்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>