யாழ்ப்பாணத்திலிருந்து ‘நிலாந்தன்’ எழுதுகின்றார்!
தமிழ்மக்கள் கொண்டாட்ட மனோ நிலையோடு இருக்கிறார்கள்.கொண்டாடக் கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் கொண்டாடித் தீர்க்க ஆசைப்படுகிறார்கள். அது உணவு விழாவாக இருக்கட்டும், ஊர்க் கோவில் திருவிழாவாக இருக்கட்டும்,பெருங்கோவில் திருவிழாக்களாக இருக்கட்டும், அல்லது பெருங் கடைகளின் திறப்பு விழாக்களாக இருக்கட்டும், எதுவானாலும் அங்கே மக்கள் ஆயிரக்கணக்கில் திரள்கிறார்கள். ஆனால் அதை வைத்துக்கொண்டு ரீச்சாவுக்குப் போன மக்கள் ஏன் தையிட்டிக்கு வரவில்லை ? நோலிமிட்டுக்குப் போன மக்கள் ஏன் பலாலிக்கோ மயிலிட்டிக்கோ போராட வரவில்லை? என்று கேட்டு மக்களைக் குறை கூறுவது தோல்வியுறும் ஒரு சமூகத்தின் இயல்புதான். மாறாக ரீச்சாவுக்கும் நல்லூருக்கும் திரளும் மக்களை எப்படி தையட்டிக்குக் கொண்டு வருவது என்று சிந்தித்து உழைப்பதுதான் பெருந்திரள் அரசியலை முன்னெடுக்க விரும்பும் வெற்றி பெற்ற சமூகம் ஒன்றின் இயல்பாக இருக்கவேண்டும். முதலாளிகள் தங்களுடைய வணிக இலக்குகளை நோக்கி விடாது உழைக்கலாம் என்றால் அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் இலக்குகளை நோக்கி உழைக்கத்தானே வேண்டும்? சிவப்பு மஞ்சள் கொடிகளை அசைத்தால் மக்கள் பின்னுக்கு வருவார்கள் என்று ரீல்ஸ்களின் காலத்திலும் நம்பிக்கொண்டிருக்கலாமா?
யாழ்ப்பாணத்தில் நடந்த ஒப்பபீட்டளவில் பெரிய உணவுப் பெருவிழா சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. இயக்கச்சிப் பகுதியில் அமைந்திருக்கும் “ரீச்சா” நிறுவனம் ஒழுங்கு செய்த உணவுப் பெருவிழா திட்டமிடப்பட்டபடி மூன்று நாட்கள் நடக்கவில்லை முதலாவது நாளிலேயே இடைநிறுத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தின் நவீன வரலாற்றில் சிறிய அளவில் உணவு பெரு விழாக்கள் ஆங்காங்கே நடந்திருக்கின்றன. ஆனால் ரீச்சாவின் உணவுப் பெருவிழா ஒப்பிட்டுளவில் பிரமாண்டமானது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து எழுபதுக்கும் குறையாத சமையல் கலை வல்லுனர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான வகை உணவுகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. முன்பதிவுகளின் அடிப்படையில் 5000 பேர் வரை வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் முன்பதிவு இல்லாமலேயே மொத்தம் 15000த்துக்கு அதிகமானவர்கள் அந்த இடத்தில் குவிந்திருக்கிறார்கள். நிலைமையை ரீச்சா நிறுவனத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதைத்தான் பின்வந்த செய்திகள் நிரூபித்தன.
தமிழ் பகுதிகளில் நடந்த முதலாவது பெரிய உணவுப் பெருவிழா ஏன் முதலாவது நாளுடன் நிறுத்தப்பட்டது? அதற்கு இரண்டு பிரதான காரணங்களை கூறலாம். முதலாவது காரணம், ரீச்சா நிறுவனத்தின் முகமைத்துவக் கொள்ளளவில் காணப்பட்ட போதாமைகள். இரண்டாவது காரணம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் தலைமைத்துவ வெற்றிடமும் அதன் விளைவுகளும்.
முதலாவது காரணத்தை சிறிது விரிவாகப் பார்க்கலாம். எதிர்பார்த்ததைவிட அதிக தொகையினர் வந்தபோது அவர்களைக் கையாள்வதற்கு ரீச்சாவிடம் பொருத்தமான ஏற்பாடுகள் இருக்கவில்லை. அதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைத் தடுப்பதற்காக மூன்று நாள் விழாவை முதலாவது நாளுடன் நிறுத்த வேண்டியதாயிற்று. அங்கே அவ்வளவு தொகை மக்கள் கூடியதை தமிழ் கூட்டு உளவியலின் ஒரு குறிகாட்டி என்று எடுத்துக் கொள்ளலாமா?
தமிழ்மக்கள் கொண்டாட்ட மனோ நிலையோடு இருக்கிறார்கள். கொண்டாடக் கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் கொண்டாடித் தீர்க்க ஆசைப்படுகிறார்கள். அது உணவு விழாவாக இருக்கட்டும், ஊர்க் கோவில் திருவிழாவாக இருக்கட்டும்,பெருங்கோவில் திருவிழாக்களாக இருக்கட்டும், அல்லது பெருங் கடைகளின் திறப்பு விழாக்களாக இருக்கட்டும், எதுவானாலும் அங்கே மக்கள் ஆயிரக்கணக்கில் திரள்கிறார்கள்.
ஆனால் அதை வைத்துக்கொண்டு ரீச்சாவுக்குப் போன மக்கள் ஏன் தையிட்டிக்கு வரவில்லை ? நோலிமிட்டுக்குப் போன மக்கள் ஏன் பலாலிக்கோ மயிலிட்டிக்கோ போராட வரவில்லை? என்று கேட்டு மக்களைக் குறை கூறுவது தோல்வியுறும் ஒரு சமூகத்தின் இயல்புதான். மாறாக ரீச்சாவுக்கும் நல்லூருக்கும் திரளும் மக்களை எப்படி தையட்டிக்குக் கொண்டு வருவது என்று சிந்தித்து உழைப்பதுதான் பெருந்திரள் அரசியலை முன்னெடுக்க விரும்பும் வெற்றி பெற்ற சமூகம் ஒன்றின் இயல்பாக இருக்கவேண்டும். முதலாளிகள் தங்களுடைய வணிக இலக்குகளை நோக்கி விடாது உழைக்கலாம் என்றால் அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் இலக்குகளை நோக்கி உழைக்கத்தானே வேண்டும்? சிவப்பு மஞ்சள் கொடிகளை அசைத்தால் மக்கள் பின்னுக்கு வருவார்கள் என்று ரீல்ஸ்களின் காலத்திலும் நம்பிக்கொண்டிருக்கலாமா?
தமிழ் மக்கள் தமது தேசிய அரசியலின் மீது உணர்திறன் குறைந்தவர்களாக மாறி வருகிறார்களா? ஒரு பகுதியினர் அரசியல் நீக்கம் செய்யப்படுகிறார்கள். ஒரு தலைமுறையின் கைபேசி செயலிகளுக்குள், அவர்கள் விரும்பிப் பார்க்கும் ரீல்ஸ்களுக்குள் தமிழ்த்தேசிய உரையாடல் இல்லை.ஒடுக்குமுறையும் ஆக்கிரமிப்பும் நேரடியானதாக இல்லாமல் மறைமுகமானதாக திணைக்களங்களின் வழி முன்னெடுக்கப்படுவதாகக் காணப்படும் ஓர் அரசியல் சூழலில், தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அரசியலின் மீது தமிழ் மக்களை உணர்திறன் மிக்கவர்களாக மாற்ற வேண்டிய பொறுப்பு யாருடையது? தமிழ்மக்கள் அரசியல் நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று சொன்னால் அது தமிழ் அரசியல்வாதிகளின் தோல்விதான்.
கொண்டாட்ட மனோநிலையோடு இருக்கும் மக்கள் உணவு விழாவை நோக்கி குவிந்தார்கள். அவர்களைக் கட்டுப்படுத்த ரீச்சாவால் முடியவில்லை. ஆனாலும் ரிச்சா முதலாளி பாஸ்கரன் அதற்காக பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். முன்பதிவு செய்தும் உணவு கிடைக்காதவர்களுக்கு பணம் மீள அளிக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளார்.
இரண்டாவது காரணம்,தமிழ்த் தேசிய அரசியலில் காணப்படும் தலைமைத்துவ வெற்றிடம். அதனால் தமிழ்மக்கள் ஒருபுறம் அரசியல்நீக்கம் செய்யப்படுகிறார்கள். இன்னொருபுறம் ஒரு சமூகமாக, ஒரு தேசமாக,ஒரு கிராமமாக,ஏன் சில சமயங்களில் ஒரு குடும்பமாகக்கூட திரள முடியாத நிலைமைகள் வளர்ந்து வருகின்றன.
தமிழ் மக்கள் யாரையும் நம்பாத மக்களாக;எல்லாரையும் எல்லாவற்றையும் சந்தேகிக்கும் மக்களாக;மற்றவர்கள் மீது பிழை கண்டுபிடிக்கின்ற எரிச்சலுற்ற குறைகூறிகளாக; வெறுப்பர்களை விடுப்புணர்வோடு ரசிக்கின்ற மக்களாக, சமூகஊடக வலைத்தளங்களில் நோய்க்கூறான, நஞ்சான விவாதங்களில் ஈடுபடும் மக்களாக மாறிவருகிறார்கள். ஒருவர் மற்றவரை நம்பாமை என்பது அதன் வளர்ச்சிக் கட்டத்தில் தன்னைத்தானே நம்பாமையில் வந்து முடிகிறது. தமிழ்ச் சமூகம் ஏறக்குறைய அப்படி ஒரு நிலையை நோக்கித்தான் செல்கிறதா?
சில தினங்களுக்கு முன் ஆளுநர் செயலகத்தில் நடந்த ஒரு கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று மாதங்களுக்குள் 80 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். நாடு முழுவதிலும் ஒரு லட்சம் பேருக்கு 15 பேர் என்ற விகிதத்துடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சம் பேருக்கு 30பேர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்திருக்கிறார்கள்.
இந்தப் புள்ளி விபரங்கள் மட்டுமல்ல இதைவிட ஆபத்தான புள்ளி விபரங்கள் உண்டு. மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தண்ணீர்ப் போத்தல்களோடும் ஜம்பர்களோடும் வித்தியாசமான காலணிகளோடும் உள்ளூர் வீதிகளில் நடந்த திரியும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இளையவர்களுக்கு முன்னுதாரணமாக மாறுகிறார்கள். முதலாவது பட்டப்படிப்பை முடித்த பலரும் இரண்டாவது பட்டப்படிப்பை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி புலம்பெயர விரும்புகிறார்கள். மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை இளையவர்களை அள்ளிக்கொண்டு போய்விடுமா? ஒருபுறம் கோவில்களில் சுவாமி தூக்க இளையோர் இல்லை. இன்னொருபுறம் அதே கோவில்களில் பின்னிரவில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் மேடையின் முன் வரிசையில் நின்று ஆடும் இளையவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?
தேசியவாத அரசியல் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தை தேசமாக திரட்டுவது தான். ஆனால் நமது தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் மக்களை மட்டுமல்ல தமது சொந்தக் கட்சிகளையே திரட்ட முடியாதவர்களாகக் காணப்படுகிறார்.
தமிழ் மக்களின் அரசியல்,சமூகப் பொருளாதார,பண்பாட்டு விடயங்களில் யார் சொல்வதை தமிழ்மக்கள் கேட்பார்கள்? யாரை தமது முன் உதாரணமாகப் பார்க்கிறார்கள்? இந்தத் தலைமைத்துவ வெற்றிடம் காரணமாக தமிழ் மக்களின் அரசியல்,சமூகப்பொருளாதார வாழ்வைத் தீர்மானிக்கும் விவகாரங்களில் தமிழ்மக்கள் முடிவெடுக்க முடியாத மக்களாகவும் சமூக ஊடக வலைத்தளங்களின் பெருமளவுக்கு பொழுதுபோக்கான, நஞ்சான விவாதங்களால் திசைதிருப்பப்படும் மக்களாக,யாரையும் நம்பாத மக்களாக, ஒரு கட்டத்தில் தங்களைத் தாங்களே நம்பாத மக்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
ரீச்சா ஒரு வணிக வளாகம்.அதற்கென்று வணிக இலக்குகள் உண்டு. வணிகர்கள் வணிக இலக்குகளை முன்வைத்து உழைப்பார்கள். ஆனால் அரசற்ற தமிழ் மக்கள் தமது தேசிய முதலாளிகளை எப்படி அணுக வேண்டும்? தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது என்ற நோக்குநிலையில் இருந்துதான் அணுக வேண்டும்.
ரிச்சா முதலாளி மாகாண சபைத் தேர்தலில் இறங்கக்கூடும் என்ற ஊகம் கடந்த சில மாதங்களாக சமூக ஊடக வலைத்தளச் சூழலில் பலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ரீச்சா முதலாளிக்குச் சொந்தமான ஊடகங்கள் ஒரு பகுதி அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்துக்களை குவிமையப்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டும் உண்டு. இதனால் ரீச்சாவின் உணவுப் பெரு விழாவின் மீதான விமர்சனங்களில் ஒரு பகுதிக்கு அரசியல் பரிமாணம் உண்டு.
ரீச்சா முதலாளி ஒரு முகநூல் வாசிதான்.அடிக்கடி நேரலையில் வருபவர்தான். அடிக்கடி கண்முன் தோன்றி கொண்டேயிருப்பார். அது அவருடைய பாணி. அவருடைய விருப்பம். ஆனால் அடிக்கடி கண்முன் தோன்றும்போது, அது அவர் மீது எரிச்சல் கொண்டவர்களை அடிக்கடி கோபப்படுத்தும்; அடிக்கடி சினக்கச் செய்யும்; அவர்கள் அடிக்கடி எழுதிக் கொண்டேயிருப்பார்கள். எனினும் தன் மீது கொட்டப்படும் விமர்சனங்களையும் வெறுப்பையும் செமித்துக்கொண்டு அவர் தொடர்ந்து நேரலையில் வருகிறார்.
அவர் ஒரு நேரலைவாசி, எதிர்காலத்தில் தேர்தல் அரசியலில் குதிக்கக்கூடும் போன்ற எல்லாவற்றிற்கும் அப்பால், முதலாவதாகவும் முக்கியமானதாகவும் தமிழ்த்தேசிய நோக்குநிலையில் அவர் ஒரு தேசிய முதலாளி; தமிழ்த்தேசிய முதலாளி.
எல்லாத் தேசிய முதலாளிகளும் தேச நிர்மாணத்தின் பிரிக்கப்படவியலாத பங்காளிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதைத்தான் வரலாறு நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. தேசத்தைக் கட்டியெழுப்புவது என்பது தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும்தான். அதை நடைமுறை வார்த்தைகளில் சொன்னால், தேசிய முதலாளிகளை,நிறுவன உருவாக்கிகளைக் கட்டியெழுப்புவதும் தான்.
தமிழ்மக்கள் தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக்கொள்ள வேண்டும் என்ற தாகத்தோடு சிந்திப்பார்களாக இருந்தால் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் நிறுவனங்களை உருவாக்கும் கெட்டிக்காரர்களை எப்படித் தேச நிர்மானத்தின் பிரிக்கப்படவியலாத பகுதிகளாக மாற்றலாம் என்றுதான் சிந்திப்பார்கள். ஒரு சமூகத்துக்குள் உருவாகும் நிறுவன உருவாக்கிகள் எல்லாருமே தேசிய பண்பு மிக்கவர்களாக அல்லது தேசிய விழிப்பைக் கொண்டவர்களாக அல்லது தெளிவான விளக்கமான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றில்லை. அவர்கள் தங்கள் துறைசார்ந்து கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். அந்தத் தேசிய ஆற்றலை எப்படி ஒரு தேசிய வளமாக மாற்றலாம், தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ளலாம் என்று சிந்திப்பதுதான் அரசற்ற தமிழ் மக்களுக்குப் புத்திசாலித்தனமானது நீண்டகால நோக்கு நிலையில் தீர்க்கதரிசனமானது.
ஆனால் இதுதொடர்பில் தேசத்தைத் திரட்டும் நோக்குநிலையில் இருந்து முதலாளிகளையும் நிறுவன உருவாக்கிகளையும் அணுகுவதற்கு மையமான ஒரு பொதுவான கட்டமைப்பு தமிழ்மக்கள் மத்தியில் இல்லை.இதுதான் பிரச்சினை.தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு?
யாரும் பொறுப்பில்லை. அதனால்தான் முதலாளிகளும் பிரபல ஓய்வூதியர்களும் அரசியலுக்கு வர எத்தனிக்கிறார்கள். தமிழ்மக்கள் தங்களுடைய அரசியல் சமூகப் பொருளாதார, கலை பண்பாட்டு விவகாரங்களை எந்த நோக்கு நிலையில் இருந்து அணுகவேண்டும்? தமிழ்மக்களை எப்படி ஒரு தேசமாகத் திரட்டுவது? என்ற அரசியல் தரிசனம்;சமூக பண்பாட்டுத் தரிசனம்; பொருளாதாரத் தரிசனம்; கலை பண்பாட்டுத் தரிசனம் கொண்ட ஒரு பொது அமைப்பு அல்லது மையமான அமைப்பு தமிழ்மக்கள் மத்தியில் இல்லை.
இந்த வெற்றிடத்தில் புலம்பெயர்ந்து உழைத்து, தாம் திரட்டிய செல்வத்தை தாயகத்தில் முதலீடு செய்யவேண்டும் என்று தாகத்தோடு வரும் முதலாளிகளை வரவேற்று அவர்களை எப்படித் தேச நிர்மாணத்தின் தவிர்க்கப்படவியலாத பங்காளிகளாக மாற்றலாம் என்று சிந்திக்கும் அரசியல் தலைவர்கள் சமூகத் தலைவர்கள் முன்னுக்கு வர வேண்டும். யாரையும் நம்பாமல்; தன்னைத்தானே நம்பாமல்; வெறுப்பர்களை விடுப்புணர்வோடு பார்க்கும் ஒரு சமூகத்தை; அதன் கொந்தளிப்பான கூட்டு உளவியலை; இலட்சியப் பாங்கானதாகக் கட்டியெழுப்பவல்ல தலைவர்கள் முன் வர வேண்டும்.
தேசிய பண்புமிக்க பெரு முதலாளிகளை எப்படித் தேசிய பொருளாதாரத்தின் அங்கமாக மாற்றலாம் என்று சிந்திக்கும் தீர்க்கதரிசனம்மிக்க தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தில்; சமூகத்தை ஒரு பொதுக் கருத்தை நோக்கி; பொதுவான நியாயங்களை நோக்கி; பொதுவான சமூகப்பொருளாதார, கலை பண்பாட்டு இலட்சியங்களை நோக்கி வழிநடத்தவல்ல தலைவர்களோ அமைப்புக்களும் இல்லாத ஒரு வெற்றிடத்தில், தமிழ்மக்கள் தங்களுக்குள் தாங்களே மோதிக்கொண்டு; தங்களைத் தாங்களே திட்டிக்கொண்டு; தங்களைத் தாங்களே நம்பாமல்; தங்களைத் தாங்களே தோற்கடித்துக் கொண்டிருக்கிறார்களா?