லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு, திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கதாநாயகன் லெஜெண்ட் சரவணன் பேசுகையில், “லெஜெண்ட் படத்திற்குப் பிறகு என்னுடைய இரண்டாவது படம் ‘லீடர்’. இப்படம் வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும் பிள்ளையும், மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் ஒன்று நுழைகிறது, அதற்கு பிறகு நடக்கும் விஷயங்களை இயக்குநர் துரை செந்தில்குமார் இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் நேர்த்தியாகவும், அழகாகவும் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அவர் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார். எவர் ஒருவர் வேலையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு வேலை செய்கிறார்களோ அந்த வேலை அற்புதமாக அமையும், இந்த படமும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது. இந்த படத்தில் குத்துப் பாடல்கள் கிடையாது. ஆனால் இந்த படத்தில் கதையுடன் பயணப்படுவது போல் பாடல்கள் இருக்கின்றன, அதற்கான வரிகளும் இருக்கின்றன. இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகப் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படபிடிப்பு தளத்தில் அறந்தாங்கி நிஷா, பேபி இயல், ஜார்ஜ் மரியன், பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், ஷாம், லால், அமிர்தா ஐயர், ஐஸ்வர்யா லட்சுமி, ஆண்ட்ரியா, பாயல் ராஜ்புத் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. இந்தப் படத்தை பார்த்த தனுஷ், வெற்றிமாறன் போன்றோர் படம் பிரம்மாண்டமானதாக இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்தார்கள். இந்தத் திரைப்படம் ‘ஜெயிலர்’ போன்றோ அல்லது ‘விக்ரம்’ போன்றோ, ‘லியோ’ போன்ற மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, ஏனெனில் அதற்குண்டான தகுதி அனைத்தும் ‘லீடர்’ படத்தில் இருக்கிறது. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். வரும் குட் ஃப்ரைடே அன்று இப்படம் வெளியீடு ஆகிறது, குடும்பத்துடன் அனைவரும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள், உங்களுக்கு 100% இந்த திரைப்படம் திருப்தி அளிக்கும். இந்த படத்தின் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்பது எங்களுடைய நம்பிக்கை. கோடைகால விடுமுறையை ‘லீடர்’ உடன் கொண்டாடுங்கள். ‘கடவுள் எந்த உதவியையும் நேரடியாக செய்வது இல்லை, எல்லா நல்லதும் நல்ல மனிதர்கள் மூலமாக தான் நடக்கும். நாம அவங்கள தான் நம்பணும். நீங்க என்னை நம்புங்க’ என இந்தப் படத்தில் ஒரு வசனம் இடம் பிடித்திருக்கிறது, அது எனக்கு மிகவும் பிடித்த வசனம். இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்,” என்றார்.