வடக்கு மாசிடோனியாவில் அன்னை தெரசா நினைவிடத்தை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பார்வையிட்டார். அதிபர் திரவுபதி முர்மு மூன்று நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 20-ந்தேதி மால்டோவா நாட்டிற்கு சென்ற அவர், அந்நாட்டின் அதிபர் மயா சந்துவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மால்டோவா பயணத்தை நிறைவு செய்த பின்னர், வடக்கு மாசிடோனியா அதிபர் கோர்டானா சில்ஜனோவ்ஸ்கா-டாவ்கோவா அழைப்பின் பேரில் அதிபர் திரவுபதி முர்மு நேற்று வடக்கு மாசிடோனியாவிற்கு சென்றார். இந்திய அதிபர் ஒருவர் மால்டோவா மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும். வடக்கு மாசிடோனியாவில் திரவுபதி முர்மு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அங்குள்ள ஸ்கோப்ஜே நகரில் அமைந்திருக்கும் அன்னை தெரசா அருங்காட்சியகத்திற்கு திரவுபதி முர்மு சென்றார். இது தொடர்பாக இந்திய அதிபர் மாளிகையின் ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “அதிபர் திரௌபதி முர்மு, வடக்கு மாசிடோனியாவின் அதிபர் கோர்டானா சில்ஜனோவ்ஸ்கா-டாவ்கோவாவுடன் இணைந்து ஸ்கோப்ஜேவில் உள்ள அன்னை தெரசா நினைவிடத்தைப் பார்வையிட்டார். அன்னை தெரசா ஸ்கோப்ஜேவில் பிறந்தார். அவர் 1928-ஆம் ஆண்டு வரை அங்கு வசித்து வந்தார்” என்று பதிவிடப்பட்டுள்ளது.