வடமாகாணக் கல்வி அழிக்கப்படுவது தொடர்பாக பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி!

Share

அவர் ஆற்றிய உரையில் அடங்கியுள்ள ஆணித்தரமான விடயங்கள்!

வடமாகாணத்தில் சேவையின் தேவை கருதி இடம்மாற்றம் என்ற பெயரில் கல்வியை மோசமாகப் பாதிக்கும் வகையில் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

இடமாற்றங்கள் பின்வரும் சந்தற்பங்களிலேயே மேற்கொள்ள முடியும்

1. வருடாந்த இடமாற்றம்
2. சேவையின் அவசிய தேவை (Exigencies of service)
3. ஒழுக்காற்று நடவடிக்கை

ஆகிய தருணங்களிலேயே இடமாற்றம் மேற்கொள்ள முடியும்.

சேவையின் அவசிய தேவை (Exigencies of service) கருதிய இடமாற்றம் கீழ்வரும் மூன்று சந்தர்பங்களிலேயே மேற்கொள்ளப்பட முடியும்.

• ஒரு ஆசிரியரது தேவை மிக அவசரமாகத் தேவையடுமிடத்தில்
• குறித்த ஆசிரியரது சேவையே குறித்த பாடசாலைக்குத் தேவைப்படுமிடத்து
• ஓரு ஆசிரியரை குறித்த நிலையத்தில் வைத்திருப்பதால் அவரால் பிரச்சினை வளர்கிறது.
என்னும் நிலை

இம் மூன்று காரணம் இருந்தால் மட்டுமே மேற்கொள்ள முடியும்.

ஆனாலும் வடக்கு மாகாண கல்வி அதிகாரிகளால் ஆசிரியர் தொழிற் சங்கங்களுடனான கலந்துரையாடலோ, அச்சங்கங்களின் பங்களிப்புகளோ இன்றி, பெருந்தொகை ஆசிரியர்களுக்கு வடமாகாண கல்வி அதிகாரிகளால் ‘சேவையின் தேவை கருதிய இடமாற்றம்’ என்ற அடிப்படையில் 193 ஆசிரியர்களுக்கு ஜனநாயக விரோதமானதும், சர்வாதிகாரமான முறையிலும் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவ்வாறு பாராளுமன்றத்தில் உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில்

“இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தாபன விதிக்கோவையின் அத்தியாயம் IIi பிரிவு 3.3 இன் பிரகாரம் “இடமாற்றத்தக்க 25 அல்லது அதனிலும் கூடிய தொகையினரைக் கொண்ட பணியாளர்கள் உள்ள ஒவ்வொரு திணைக்களத்திலும் இடமாற்றச்சபை ஒன்றோ அதற்கு மேற்பட்டனவோ நிறுவப்படவேண்டும்” என்று 2013.07.03ம் திகதிய 1817/30 ம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட வடக்கு மாகாண அரச சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங்கு விதிக்கோவையின் 188 வது பிரிவில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் – இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2310/29 ம் இலக்க 2022.12.14 ம் திகதிய அதிவிசேட வர்த்தமானியின் பிரிவு 259 இல் “அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் சேவையின் அவசர தேவைகளின் பெயரில் இடமாற்றம் செய்யப்படும் முன்னர் தத்துவங்கள் கையளிக்கப்பெற்ற அதிகாரி அல்லது நியமிப்பு செய்யும் அதிகாரி அத்தகைய தேவையொன்று பிரிவு 258 இல் குறிப்பிட்டுள்ளதற்கிணங்க, உண்மையிலேயே எழுந்துள்ளது எனவும், அந்த இடமாற்றம் அடுத்த வருடாந்த இடமாற்றங்கள் செய்யப்படும் வரையில் பிற்போடமுடியாதெனவும் தனிப்பட்ட முறையில் திருப்தியுறுதல் வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.

இலங்கை சனநாயக குடியரசின் 1817/30 இலக்க 2013.07.03 ம் திகதிய அதிவிசேட வர்த்தமானியின் வடக்குமாகாண அரச சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங்கு விதிக்கோவையின் பிரிவு 208 இலும் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பிரிவு 185 ல் குறிப்பிட்டுள்ள வகைப்படுத்தப்பட்டுள்ள இடமாற்ற வகை (i) இல் குறிப்பிட்டவாறு ‘வருடாந்தம் செய்யப்படும் இடமாற்றங்கள்’ என்ற வகைக்குள்ளேயே குறித்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

2025 ஆம் ஆண்டு வடமாகாண ஆளுநரால் 25 ற்கும் மேற்பட்ட இடமாற்றங்கள் இடமாற்ற சபையின் தீர்மானத்தை மீறி தன்னிச்சையாக நிறுத்தப்பட்டிருந்தன.

ஏற்கனவே வெளிமாவட்ட சேவைக்கு ஒத்த தீவகம், வடமாராட்சி கிழக்கு போன்ற பகுதிகளில் பணியாற்றியோருக்கு இடமாற்றச் சபை கூட்டப்படாமல் சட்டவிரோதமான 2026 இல் தன்னிச்சையாக இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்ட பல ஆசிரியர்களை குறித்த பாடசாலைகளிலிருந்து வடமாகாண கல்வி அதிகாரிகள் இன்னும் விடுவிக்கவில்லை.

சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் மேன்முறையீடுகளின் பரிசீலனையும் அரசியல்தலையீடு, பாரபட்சங்கள், பழிவாங்கல் எண்ணம் கொண்ட வகையிலேயே வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்ட பல ஆசிரியர்களின் அடிப்படை உரிமைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, ஆசிரியர்களினதும், அவர்களை தங்கிவாழ்வோரதும் வாழும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் முறையற்ற மேன்முறையீட்டு செயற்பாடுகளாவன :
1. வடமாகாண இடமாற்ற கொள்கையின் பிரிவு 4.4 ஐ மீறி ஆசிரியர்களை பழிவாங்கியமை

2. 2025 ஆம் ஆண்டு வரை வெளிமாவட்டத்துக்கு ஒத்த சேவையாக தீவகம், வடமராட்சி கிழக்கு, வெளிமாகாண சேவைக்காலம் என்பன இடமாற்ற சபை தீர்மானமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ள போதும், வெளிமாவட்ட சேவைக்கொத்த சேவையாற்றிய ஆசிரியர்கள் சிலர் மட்டும் பழிவாங்கப்பட்டுள்ளமை.

3. புாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வெளிமாவட்ட சேவைக்கொத்த சேவைகளை 6 வருடங்களுக்கும் அதிகமாக பூர்த்தி செய்துள்ளதோடு, பலரால் மருத்துவ ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும், ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமைக்காக பழிவாங்கப்பட்டுள்ளமை.

4. ஆங்கில மொழி மூல பாடங்களை கற்பிக்கும் சேவையின் தேவை இடமாற்றம் வழங்கப்பட்ட மாவட்ட பாடசாலைகளுக்கு தேவையற்றுள்ள நிலையில், தற்போதைய நிலையங்களில் ஆங்கில மொழி மூலம் கற்பித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை சேவையின் தேவை இடமாற்றம் என்ற போர்வையில் பழிவாங்கியுள்ளமை. (இதன் மூலம் குறித்த ஆசிரியர்களிடம் கற்கும் மாணவர்களின் உரிமையும் பாதிக்கப்பட்டுள்ளது.

5. வெளிமாவட்ட சேவைக்கொத்த சேவையாக கருதப்பட்டு வந்த தீவக வலயத்தில் 6 வருடங்களுக்கு அதிகமாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளபோதும், ஒருபோதும் வெளிமாவட்ட சேவையோ அல்லது வெளிமாவட்டத்துக்கு ஒத்த சேவையோ ஆற்றியராதவர்களுக்கு தீவக வலயத்துக்கு இடமாற்றம் வழங்கியுள்ளமை பாரபட்சமானதாகும்.

வடமாகாண கல்வி அதிகாரிகள், வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடமாகாண ஆளுநர் உள்ளிட்டோரின் சட்டவிரோத செயற்பாடுகளால் ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாது அவர்களை தங்கி வாழ்வோருக்கும் ஏற்படுத்தப்பட்டுவரும் / ஏற்படப்போகும் மிக மோசமான அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில் மிக அவசரமாக தலையீடு செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும்” எனவும் அவர் அநுர குமாரவின் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>