ஸ்காபுறோவில்அவரது தமிழ் மொழி சாரந்த நூல் வெளியீட்டு விழாவில் அழுத்தமாகத் தெரிவிக்கப்பெற்ற விடயங்கள்’
“எமது தாயகத்தில் பிறந்து, கல்வி கற்று பின்னர் அரச பதவியொன்றில் இணைந்து பின்னரும் உயர் கல்வி கற்பதில் ஆர்வத்தோடு ஈடுபாடு காட்டி தன்னை பல துறைகளில் வளர்த்துக் கொண்ட இன்றைய ‘விழா நாயகர்’ விக்டர் ராஜலிங்கம் அவர்கள் அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் குடியேறி, அங்கு அரச பதவி ஒன்றில் அமர்ந்தபடி தனது இயல்பான ஆர்வத்தினை கைவிடாமல் இன்றும் ஒரு தமிழ்ப் பற்றாளராக தன்னை அடையாளம் காட்டிய வண்ணம் தன் பயணத்தைத் தொடர்கின்றார். எனவே தான். தமிழ் மொழி சார்ந்த ஆய்வுகளையும் தமிழர்களுக்கான சரியான அரசியல் தலைமையையும் நோக்கிய தீவிர ஆர்வத்துடன் தொடர்ந்து தன் மொழி மீதான பற்றை வெளிக்காட்ட இவ்வாறான நூல்களை படைத்தும் தன் அரசியல் ஈடுபாட்டை காட்டும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற அமைப்புக்களோடும் அனைத்துல தமிழர் பேரவை போன்ற அமைப்புக்களோடும் தன்னை இணைத்துக் கொண்டு செயற்படுகின்றார்”
இவ்வாறு கடந்த 28-06-2026 அன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோ ‘குயின் பெலஸ்’ விழா மண்டபத்தில் நடைபெற்ற ‘உலகின் மூத்த வாழும் மொழி தமிழ்; என்னும் அவரது தமிழ் மொழி சாரந்த நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ;உதயன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் தெரிவித்தார்.
முனைவர் செல்வநாயகி ஶ்ரீதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மேற்படி நூல்வெளியீட்டு விழாவில் நூற்றுக்கணக்கான அன்பர்கள் கலந்து சிறப்பித்தார்கள். அழைக்கப்பெற்ற விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைக்க விழாவின் தொகுப்பாளர் நாகராஜா ஜெயச்சந்திரன் அவர்கள் நேர்த்தியாக விழாவை தொடர்ந்து நகர்த்திச் சென்றார்.
முதலில் நூல் பற்றிய அறிமுக உரையாற்றிய கவிஞர் மா. சித்திவிநாயகம் அவர்கள் தனது இயல்பானதும் ஆழமானதும் கவித்துவமான பாணியில் அழகுற பல விடயங்களை சபையோர் நெகிழும் வகையில் வழங்கிச் சென்றார்.அடுத்து நூல் அறிமுக உரையை மயூரன் சோமநாதன் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து உரையாற்ற அழைக்கப்பெற்ற ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் மேற்குறிப்பிட்ட விடயங்களோடு விக்டர் ராஜலிங்கம் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் தலைமை கிட்ட வேண்டும் என்ற ஆதங்கத்தோடு தன் இளவயதுக் காலம் தொடக்கம் இன்று வரை தேடலை நடத்தியவராக அதற்கான அமைப்புக்களோடு தன்னை இணைத்த வண்ணம் ஆர்வத்தோடு இயங்கிவருகின்றார் என்றார்
உரைகளுக்கு இடையில் பாடல்கள் மற்றும் நடனங்கள் இடம்பெற்றமை பார்வையாளர்களுக்கும் உரையாளர்களுக்கும் இதமான விடயங்களாகத் அமைந்தன.
தொடர்ந்து தலைமை உரையாற்றிய முனைவர் செல்வநாயகி ஶ்ரீதாஸ் அவர்கள் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட போது தமிழ் மொழி சார்ந்த ஆய்வு நூல்கள் ஆயிரக்கணக்கில் வெளிவந்து கொண்டிருந்தாலும் அதன் தொடர்ச்சி வரவேற்கத்தக்கது என்றும் இந்த பணியில் தன்னை ஈடுபடுத்தியவண்ணம் மொழி சார்ந்த ஆய்வாளர்களையும் தன் பயணத்தில் இணைத்துக் கொண்டு விக்டர் ராஜலிங்கம் அவர்கள் ஆற்றும் சேவையானது, தமிழுக்கு அவர் செய்யும் கொடைபோன்ற ஒரு அர்ப்பணிப்புள்ள விடயமாகும் என்று தெரிவித்து தமிழ் மொழியின் தொன்மை பற்றிய சிறபபுக்களையும் எடுத்துரைத்து தலைமையுரைக் கேற்ப தன்பணியை நிறைவேற்றினார்.
அடுத்து ‘படிமுறைத் தமிழ் கற்பித்தல் திட்டத்தின்’ நிறுவனர் சுப்பிரமணியம் ராஜரட்ணம் தனது வாழ்த்துரையில் தமிழ் மொழியைக் கற்றல் மற்றும் கற்பித்தல் துறையில் எமது இனத்தின் பின்னடைவைச் சுட்டிக்காட்டி தனது ஆதங்கத்தை வெளியிட்ட அவர் நூலாசிரியர் விக்டர் ராஜலிங்கம் அவர்களின் மொழி சார்ந்த மற்றும் அரசியல் சார்ந்த பங்களிப்பையும் போற்றினார்.
தொடர்ந்து நூலுக்கான ஆய்வுரை ஆற்ற அழைக்கப்பெற்ற பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்கள் விக்டர் ராஜலிங்கம் அவர்களின் நூல்வெளியீட்டுப் பணியில் தானும் நீண்ட காலம் பங்களித்து வருவதாகவும் அவரது முன்னைய நூலுக்கும் இந்த நூலுக்கும் அணிந்துரை எழுதும் பணியை தனக்கு அவர் அளித்ததாகவும் எனவே அவருடைய நல்ல நோக்கம். தேடிக் கற்கும் ஆற்றல் போன்றவற்றால் தான் கவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து நூலாசிரியரை வாழ்த்திச் சென்றார்.
தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் பட்டதாரியும் தமிழ் மொழி சார்ந்த ஆய்வுகளோடும் கற்றலோடும் கற்பித்தலோடும் தமிழ்ப் பணியாற்றும் சுகந்தன் வல்லிபுரம் அவர்கள் சிறப்பாக தன் ஆய்வுரையை நிகழ்த்தினார்.தொடர்ந்து நன்றியுரையை பிரபல எழுத்தாளர் ரா. சம்பந்தன் அவர்கள் அனைவரினதும் இதயங்களை தொட்டுச்செல்லும் வகையில் ஆற்றி அமர்ந்தார்.
இறுதி உரையாக நூலாசிரியர் விக்டர் ராஜலிங்கம் தனது உரையில் தனது அரசியல் மற்றும் தமிழ் மொழிசார்ந்த பணிகள் மற்றும் தேடல் ஆகியவற்றில் தன்னுடன் ஒத்துழைத்து வரும் நூற்றுக்கணக்கானவர்கள் கனடாவில் வாழ்ந்து வருவதால் தனது நூல்வெளியீட்டு விழாக்களை கனடாவிலேயே நடத்த விரும்புவதாகவும் தனது துணைவியாரும் தன் செயற்பாடுகளில் ஒத்துழைப்பதாகவும் தெரிவித்து தன்னோடு தொடர்புகளைப் பேணி வரும் உறவினர்கள் மற்றும் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் போன்றவர்களின் அன்பும் ஆசியும் என்றும் தனக்கு கிடைக்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்து தனக்கு இன்றை வெளியீட்டு விழா நம்பிக்கைகளை விதைத்துள்ளது என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து நூலின் பிரதிகளை அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் மற்றும் சக இயக்குனர் சபை உறுப்பினர் உட்பட பலரும் பெற்றுச் சென்றனர்.