ஹரக் கட்டாவை விடுவிக்க மனைவியிடம் சொகுசு ஹோட்டலில் வைத்து இலஞ்சம்?

Share

3 கொழும்புச் சட்டத்தரணிகளுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான ‘ஹரக் கட்டா’ என்பவரை விடுவிப்பதற்காக, அவரது மனைவியிடமிருந்து பெருந்தொகைப் பணத்தை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் மூன்று சட்டத்தரணிகளுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘புரவெசியா’ அமைப்பின் அழைப்பாளர் ரவீந்திர நிஷங்கவினால் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை நண்பகல் இந்த முறைப்பாடு கையளிக்கப்பட்டதுடன், அதனையடுத்து அவர் ஊடகங்களுக்கும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

திஸ்ஸ வேரகொட, புலஸ்தி ரூபசிங்க மற்றும் சஞ்சய ஆரியதாஸ ஆகிய மூன்று சட்டத்தரணிகளுக்கு எதிராக இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

டுபாய் பயணம் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ரவீந்திர நிஷங்க மேலும் தெரிவிக்கையில்,

“மேற்படி மூன்று சட்டத்தரணிகளும் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி டுபாய் நாட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு ஆகஸ்ட் 15 முதல் 18ஆம் திகதி வரை ஆடம்பர ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்து, ஹரக் கட்டாவின் மனைவியைச் சந்தித்து இந்தக் கொடுக்கல் – வாங்கல் தொடர்பாகப் பெருந்தொகை பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவர்களின் டுபாய் பயணத்துக்கான விமான பயணச்சீட்டுக் கட்டணங்கள் மற்றும் அங்குள்ள ஆடம்பர ஹோட்டல்களில் தங்குவதற்கான கட்டணங்கள் அனைத்தையும் ஹரக் கட்டாவின் மனைவியே முழுமையாகச் செலுத்தியுள்ளார்.

எம்மால் முன்வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டை அந்த சட்டத்தரணிகளால் ஒருபோதும் மறுக்க முடியாது எனச் சவால் விடுக்கின்றேன். அவர்கள் டுபாய் சென்றமைக்கான விமானச்சீட்டுகள் மற்றும் தங்கியிருந்த ஹோட்டல் விவரங்கள் போன்ற உறுதியான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

எனவே, அரசு முன்னெடுத்து வரும் இலஞ், ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் விரைவுபடுத்த வேண்டுமாயின், இந்த விவகாரத்துடன் தொடர்புடைய திஸ்ஸ வேரகொட, புலஸ்தி ரூபசிங்க மற்றும் சஞ்சய ஆரியதாஸ ஆகிய மூன்று சட்டத்தரணிகளையும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு உடனடியாகக் கைது செய்து முறையான விசாரணைகளை நடத்த வேண்டும்.

அவ்வாறு கைது செய்து விசாரிப்பதன் மூலமே, இந்தச் சந்திப்புகளில் என்ன பேசப்பட்டது, யாருக்காக இந்த இலஞ்சப் பணம் கேட்கப்பட்டது மற்றும் எவ்வளவு பணம் பெறப்பட்டது போன்ற அனைத்து உண்மைகளையும் நாட்டுக்கு வெளிப்படுத்த முடியும்.” – என்றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>