பருத்தித்துறை நகரசபை விவகாரத்தில் ஆளுநரின் விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Share

அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் ஆளுகையில் உள்ள பருத்தித்துறை- சாவகச்சேரி நகரசபைகளை இலக்குவைக்கும் முயற்சிகளுக்கு ‘ஆப்பு’!.

பு.கஜிந்தன்

வடக்கு மாகாண ஆளுநரால் பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண மேல் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் டக்ளஸ் டி போல் மற்றும் நகரசபை உறுப்பினர் சிவலிங்கம் பொன்னம்பலம் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று (2026 ஏப்ரல் 27) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பின்னரே நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது.

பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட மரக்கறிச் சந்தையைப் பழைய இடத்திற்கு மாற்றுவதற்குச் சபை மேற்கொண்ட தீர்மானம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக விசாரணை நடத்த முன்னாள் மாவட்ட நீதிபதி க. அரியநாயகம் தலைமையில் விசாரணைக் குழு ஒன்று கடந்த 2026 மார்ச் 12 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமிக்கப்பட்டிருந்தது. இந்த விசாரணைக் குழுவின் முன்னிலையில் 2026 ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மனுதாரர்கள் மேல் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.

மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றத்தில் முக்கிய வாதங்களை முன்வைத்தார். நகரசபையின் சனநாயக ரீதியான தீர்மானங்கள் குறித்து விசாரணை நடத்த முடியாது என்றும், இது நகரசபைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்றும் அவர் வாதிட்டார்.

மேலும், 2026 ஏப்ரல் 08 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி என்பவர் குறித்த வர்த்தமானி அறிவித்தல் உத்தியோகபூர்வமாக வெளியாவதற்கு முன்னரே அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கருத்துத் தெரிவித்திருந்தமையைச் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, இந்த விசாரணை நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், தவிசாளரைப் பதவியிலிருந்து நீக்கும் முயற்சியாகும் என்றும் வாதிட்டார்.

குறிப்பாக, அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகரசபைகளை இலக்கு வைத்து இவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

சட்டத்தரணியின் வாதங்களை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ் ராஜா, மனுதாரர்களின் வாதங்களில் முகாந்திரம் இருப்பதாகக் கருதி, இந்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கக் கூடாதென இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான பெனார்சி பிரதீபன் மற்றும் சி. அபினாஸ் ஆகியோரின் அனுசரணையுடன் கலாநிதி கு. குருபரன் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>