LOADING

Type to search

இந்திய அரசியல்

மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

Share

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மாநிலங்களவை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

     துணை அதிபர் ஜெகதீப் தன்கர், நாடாளுமன்ற மாநிலங்களவையின் அவைத்தலைவராகவும் இருக்கிறார். நடப்பு கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கும், தன்கருக்கும் இடையே தினமும் மோதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அதானி முறைகேட்டை அவையில் எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கும் அவர், நேற்று அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்த குற்றச்சாட்டை எழுப்ப ஆளுங்கட்சியினருக்கு அனுமதி அளித்தார். இது எதிர்க்கட்சிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே துணை ஜனாதிபதி பதவியில் இருந்து அவரை நீக்க எதிர்க்கட்சிகள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அவையில் தன்கரின் நடவடிக்கைகள் ஏற்க முடியாத வகையில் இருப்பதாகவும், பா.ஜ.க. செய்தி தொடர்பாளரை விட அந்த கட்சிக்கு ஜெகதீப் தன்கர் அதிக விசுவாசமாக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சித்தலைவர் ஒருவர் தெரிவித்தார். இதனிடையே நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கான நோட்டீஸ் அளிக்கும் காங்கிரசின் யோசனையை திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளும் ஏற்றுக்கொண்டன. இதன்படி, இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மாநிலங்களவை சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் தோல்வி அடையும் என்றாலும், மாநிலங்களையில் பேச தங்களுக்கு அவைத் தலைவர் வாய்ப்பளிக்கவில்லை என்பதை நிரூபிக்கவே இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.