10 கோடி பார்வைகளை கடந்த ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல்
Share
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல் வலையொளியில் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. ‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான தனுஷ், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தனது 50-வது படமான ‘ராயன்’ படத்தை தானே இயக்கி நடித்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ராயன் படத்தைத் தொடர்ந்து, தனுஷின் இயக்கத்தில் உருவாகி வரும் மூன்றாவது திரைப்படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தில் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன் மற்றும் பவிஷ் என மலையாள நடிகர்கள் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் வெளியாகி டிரெண்ட்டிங் ஆனது. இப்பாடலுக்கு நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார். இணையத்தில் கவனத்தை ஈர்த்த இப்பாடல் தற்போதுவரை வலையொளியில் 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.