வெள்ள உதவிகள் வழங்கினாலும் தமிழ் ஆர்வலர்களுக்கு இலங்கை அரசின் ‘புலனாய்வுத்துறை அச்சுறுத்தல்’
Share
அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்கும் உள்ளூர் வெகுஜன அமைப்புக்களை அரச புலனாய்வுப் பிரிவினர் அச்சுறுத்துவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டறியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தலைவி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் வடக்கிலும் கிழக்கிலும் பெய்த கடும் மழையினால் பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களுக்கு உதவிகளை வழங்கும் போது தமிழ்த் தாய்மார்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளானதை மிக அண்மைய உதாரணமாக, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி சுட்டிக்காட்டுகின்றார்.
“நான்கு நாட்களுக்கு முன்னர் வெள்ள அழிவில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு எவ்வித உதவிகளும் கிடைக்காத நிலையில் நாங்கள் சிறு சிறு உதவிகளை வெளிநாட்டவர்களிடம் பெற்று அவர்களுக்கு அந்த பொதிகளை கொடுக்க செல்லும் போது, என்னெ்ன பொருட்கள் தந்தார்கள்? யார் இதைத் தந்தது? என புலனாய்வுப் பிரிவினர் கேள்வி எழுப்புகின்றனர். இது கடும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.”
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதை படமெடுக்கும் அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது என யாழ்ப்பாண ஊடக மையத்தில் அண்மையில் (டிசம்பர் 8) நடைபெற்ற ஊடக சந்திப்பில் மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் ஆராயுமாறு அந்த அதிகாரிகளுக்கு அரசாங்கம் சொல்லியிருக்கலாம், ஆனால் அதனை செய்யாமல் நாங்கள் அந்த பொருட்களை கொண்டுபோய் கொடுக்கையில் புகைப்படமெடுப்பதால் இந்த அரசாங்கம் எங்களுக்கு எவ்வாறான நீதியை பெற்றுத்தருமென்பதை சிந்தித்து பாருங்கள்.”
“அவர் எம்மை அழிக்கப்போவதாக சொல்லாவிட்டாலும் அவருடைய புலனாய்வு பிரிவு மிகவும் அச்சுறுத்தலான முறையில் செயல்படுகிறது. மாவட்ட ரீதியாக தொடர்ச்சியாக கடந்த மூன்று மாதங்களாக அவர்கள் எங்கள் மேல் கை வைக்கும் அளவுக்கு அச்சுறுத்துகின்றார்கள்.”