இந்திய படகுகள் வடக்கு கடல் பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதியளிக்கும் எந்த திட்டமும் கடந்த காலங்களில் தம்மிடம் இருந்திருக்கவில்லை – டக்ளஸ் தேவானந்தா!
Share
இந்திய இழுவைமடி படகுகள் இலங்கையின் வடக்கு கடல் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுதற்கு அனுமதியளிக்கும் எந்தவகையான திட்டமும் கடந்த காலங்களில் தம்மிடம் இருந்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போதைய பலவீனங்களை மறைக்கும் வகையில் கடற்றொழிலாளர்களை திசை திருப்ப முயற்சிக்கப்படுகின்றதா என்ற சந்தேகத்தினையும் வெளிப்படுத்தியுள்ளாார்.
வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளை அண்மையில் சந்தித்த தற்போதைய கடற்றொழில் அமைச்சர், இந்திய இழுவைப் படகுகளுக்கு அனுமதி வழங்கும் முன்னைய அரசாங்கத்தின் சிந்தனையை தற்போதைய அரசாங்கம் கைவிட்டு விட்டதாக கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
எமது வளங்களை அழிக்கின்ற இழுவைமடி தொழில் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே 90 ஆம் ஆண்டுகளில் இருந்து தன்னுடைய உறுதியான நிலைப்பாடாக இருந்து வருவதாகவும், கடற்றொழில் அமைச்சராக தான் செயற்பட்ட காலப்பகுதியில் கடற்றொழில் அமைச்சின் நிலைப்பாடும் அவ்வாறே இருந்தது எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் வெளியிடப்படுவதானது, ஆழமான சந்தேகத்தினை ஏற்படுத்துவதாகவும், இதுதொடர்பாக கடற்றொழிலாளர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று கூறியதுடன்,
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தபோதும், இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பில் தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தமையையும் சுட்டிக்காட்டினார்.