அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமி பலவீனம் அடைந்து விட்டாரென கூறுகிறார் டிடிவி தினகரன்
Share
எடப்பாடி பழனிசாமிக்கு உண்மையான பலம் கிடையாது. முதல்வர் என்ற பதவியால் அவருக்கு பலம் கிடைத்தது. அவர் அரசியல் ரீதியாக பலவீனம் அடைந்து விட்டார்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதன்பின்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது- அதிமுகவை மீட்டெடுப்பதுதான் எங்கள் நோக்கம். ஜனநாயக முறையில் தேர்தலில் வெற்றி பெற்று கட்சியை மீட்டெடுப்போம். சசிகலாவின் ஆதரவு எங்களுக்கு எப்போதும் உண்டு.
அவர்தான்அதிமுகவின் பொதுச் செயலாளர். என்னுடைய பாதையும், சசிகலாவின் பாதையும் வேறாக இருந்தாலும் இருவரின் இலக்கு ஒன்றுதான். அது அதிமுகவை மீட்டெடுப்பது. இதற்காக சசிகலா சட்ட ரீதியாக போராடி வருகிறார். நான் அமமுக மூலமாக ஜனநாயக ரீதியில் போராடுகிறேன். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் அடைந்த தோல்வி எங்களை பாதிக்கவில்லை. அடுத்துவரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பணியாற்றி வருகிறோம். அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமி பலவீனம் அடைந்து விட்டார். அதனால்தான் அவர் நிதானமின்றி கோபப்பட்டு பேசுகிறார்.
அவரிடம் 4 ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் இருந்தபோது, அரசியல் வல்லுனர்கள் அவரை இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்தார்கள். துரோகத்தையும், நன்றி மறந்ததையும் எடப்பாடியின் ராஜ தந்திரம் என்று சொன்னார்கள். இதுபோன்ற புகழ்ச்சி எல்லாம் பதவி, அதிகாரம் உள்ளவரை தான் இருக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு உண்மையான பலம் கிடையாது. முதல்வர் என்ற பதவியால் அவருக்கு பலம் கிடைத்தது. இது அவருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியும். அந்த வகையில்தான் அவர் அரசியல் ரீதியாக பலவீனம் அடைந்து விட்டார் என்று சொல்கிறேன்.
ஜெயலலிதாக மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன் என்பது தேவையற்றது. இதனை ஏற்படுத்தியன் மூலம் தங்களின் அரசியல் ஆசைக்காக திமுக மக்கள் பணத்தை வீணடிக்கிறது. நோயின் காரணமாக, இயற்கையாக ஜெயலலிதா மறைந்தார் என்று மருத்துவமனையும், சுகாதாரத் துறை செயலரும் அன்றைக்கே தெளிவாக சொல்லி விட்டனர். ஜெயலலிதாவுக்கு குழந்தைகள் கிடையாது. இருந்திருந்தால் எங்களிடம் நிச்சயம் சொல்லியிருப்பார்கள். இதுபோன்று ஜெயலலிதா குறித்து பல பொய் பிரசாரங்கள் பரப்பப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.