‘முதலீடுகளையும், வேலைவாய்ப்பையும் கெடுக்க வேண்டாம்’ என இபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை
Share
தமிழகத்திற்கு வரும் முதலீடுகளையும், தமிழக இளைஞர்களுக்கு உருவாகும் புதிய வேலை வாய்ப்புகளையும் பொய்ப் பிரச்சாரம் மூலம் கெடுத்திடும் முயற்சியில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஈடுபட வேண்டாம் என தமிழக தொழில்துறை அமைச்சர்தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனம்’ சார்பில் தமிழ்நாட்டில் செய்யவிருந்த முதலீடு ஏதோ மகாராஷ்டிர மாநிலத்திற்குச் சென்று விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாத அறியாமையில் அறிக்கை விடுவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். வேதாந்தா நிறுவனத்தைப் பொறுத்த வரையில், சுற்றுச்சூழல் பாதிப்புக் காரணங்களுக்காக மாசுக் கட்டுப்பாடு வாரியம், இயக்குவதற்கான இசைவினை வழங்க மறுத்துள்ளது.
இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்ற அடிப்படை விவரம் கூட – அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியாமல் போனதில் வியப்பில்லை. என்றாலும், பாக்ஸ்கான் நிறுவனத்துடனான தமிழ்நாடு அரசின் தொழில் முதலீடு தொடர்பான உறவு 2006-ஆம் ஆண்டு துவங்கி இன்றுவரை சிறப்பாக தொடர்ந்து வருகிறது. பாக்ஸ்கான் நிறுவனம் பல்வேறு தொழில் திட்டங்களை தமிழ்நாட்டில் நிறுவி உள்ளதே அதற்குச் சாட்சியமாக திகழ்கிறது. இத்திட்டங்களால் பெருமளவில் முதலீடுகளும், பல்லாயிரக் கணக்கானோருக்கு, குறிப்பாக பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்மையில், பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் இந்தியப் பயணம் மேற்கொண்டபோதும், அவருடன் தமிழ்நாடு அரசின் சார்பில், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் புதுடெல்லியில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, பாக்ஸ்கான் நிறுவனம், மின்வாகனம் மற்றும் செமி கண்டக்டர் ஆகிய துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ள உள்ளதைச் சுட்டிக்காட்டி, அத்திட்டங்களை தமிழ்நாட்டில் நிறுவிடுவதற்கு அழைப்பு விடுத்தார்கள். அதனைத் தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் என்கிற முறையில், நானும் பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு இதுதொடர்பாகக் கடிதம் எழுதினேன். இதற்கு பதிலளிக்கும் வகையில் ‘மின்வாகன உற்பத்தி மற்றும் செமி கண்டக்டர் புனரமைப்பு உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் நிறுவிடப் பரிசீலிப்பதாக’ பாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆகவே, பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் அதே செமி கண்டக்டர் திட்டங்களை தனியாகச் செயல்படுத்திட பரிசீலித்து வருகிறது என்பதும்- அதற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதுமே உண்மை. இது மட்டுமல்ல கடந்த ஒரு வருடத்தில் செமி கண்டெக்டர் மற்றும் மின்வாகனத் துறைகளில் பல முதலீடுகளை மாநில அரசு ஈர்த்துள்ளது என்பதற்கு பல்வேறு உதாரணங்களை பட்டியலிட முடியும். சமீபத்தில், IGSSV நிறுவனம், புராஜக்ட் சூரியா (Project Suria) என்ற ஒரு செமி கண்டக்டர் புனரமைப்பு (Semiconductor Fab) உயர் தொழில்நுட்பப் பூங்காவை 300 ஏக்கர் பரப்பளவில் அமைத்திட, தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இத்திட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள முதலீடு 25,600 கோடி ரூபாய் மற்றும் 1500 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். அது மட்டுமின்றி, இப்பூங்காவில் அமைக்கப்படும் பல்வேறு திட்டங்கள் மூலமாக 25,000 நபர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைத்திடவும் வாய்ப்புள்ளது. மேலும் இவ்வாறான பல செமி கண்டக்டர் மற்றும் மின்வாகன உற்பத்தி நிறுவனங்களுடன் அரசு பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு வருகிறது. கூடிய விரைவில் இத்துறைகளில் பெரும் முதலீடுகள் தமிழ்நாட்டில் நிச்சயம் ஏற்படவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் முதலமைச்சர் அவர்களின் தலைமையில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த ஓராண்டு காலத்திலேயே, 2,02,220 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 192 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2020-21ஆம் ஆண்டை போல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அத்திட்டங்கள், செயல்படுத்தப்பட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிய அறிவுறுத்தலுக்கேற்ப, தொழில்துறை மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்காக, அனைத்து சேவைகளையும், முதலீட்டாளர்களுக்குக் கழக அரசு அளித்து வருகிறது. இதன் பொருட்டு, பல திட்டங்கள் தற்போது துவக்கி வைக்கப்பட்டும், அடிக்கல் நாட்டப்பட்டும் வருகின்றன.
தொழில் தொடங்க வருவோரிடம் அ.தி.மு.க. ஆட்சியில்- அதுவும் எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சராக இருந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அப்போதிருந்த ‘கலாச்சாரத்தை’ மனதில் வைத்துக் கொண்டு எங்கள் முதலமைச்சரின் நேர்மையான ஆட்சி மீது கல்லெறிய வேண்டாம். தொழில் வளர்ச்சிக்காக தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் இந்த அரசின் நோக்கத்திற்கு எதிராக ‘பொய் பிரச்சாரத்தில்’ ஈடுபட்டு- தமிழகத்திற்கு வரும் முதலீடுகளையும், தமிழக இளைஞர்களுக்கு உருவாகும் புதிய வேலைவாய்ப்புகளையும் கெடுக்க வேண்டாம் என்று பழனிச்சாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.