நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி
Share
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. டி20 தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும், 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசிப் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக சுப்மன் கில் – இஷான் கிஷன் இணை களத்தில் இறங்கியது. 3 பந்தில் 1 ரன் எடுத்திருந்தபோது இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 22 பந்தில் 3 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்ய குமார் யாதவ் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்திய அணி 125 ரன்னுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் இருந்தபோது சுப்மன் கில்லும் – கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இருவரும் 4ஆவது விக்கெட்டிற்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 17 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே சிக்சரும் ஃபோருமாக பறக்கவிட்ட சுப்மன் கில் 63 பந்துகளில் 7 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் எடுத்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 234 ரன்கள் எடுத்தது. 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய நியூசிலாந்து அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஃபின் ஆலன் 3, டெவான் கான்வே 1, மார்க் சாப்மன் 0, கிளின் பிலிப்ஸ் 2, பிரேஸ்வெல் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் மிட்செல் சான்ட்னர் 13 ரன்கள் எடுத்தார். டேரில் மிட்செல் மட்டும் அதிகபட்சமாக 35 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேற நியூசிலாந்து அணி 12.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் மட்டுமே எடுத்து 168 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.