LOADING

Type to search

இலங்கை அரசியல்

தந்தை செல்வநாயகம் – நெஞ்சிருக்கும் வரை நினைவு இருக்கும்!

Share

கனடா நக்கீரன்  

சென்றவாரத் தொடர்ச்சி………….

கொழும்பில்  புகழ் பெற்ற  St. Thomas கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய புதிதில் தந்தை செல்வநாயகம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது தாயார் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோள்  கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டது. இதனால் தனது பதவி விலகல் கடிதத்தை கல்லூரி அதிபரிடம் எழுதிக் கொடுத்து விட்டு யாழ்ப்பாணம் பயணமானார். பின்னர் கொழும்பு திரும்பிய அவர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்து வழக்கறிஞர் (Advocate)  பட்டம் பெற்று வெளியேறினார். அதற்கு முன்னர் 1918 ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தின்  வெளிவாரி  மாணவராகப் படித்து  அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தார்.

தந்தை செல்வநாயகம் நீண்ட காலம் மிகவும் புகழ்வாய்ந்த குடிசார் (civil) வழக்கறிஞர்களில் ஒருவராக விளங்கினார். நீதி மன்றங்களில் வழக்கறிஞர்களுக்கே உரித்தான உருட்டல், மிரட்டல் எதுவுமின்றி தனது கட்சிக்காரர் பக்கம் உள்ள நியாயங்களை சுருக்கமாகவும் அதே நேரத்தில் ஆணித்தரமாகவும் முன் எடுத்துக் காட்டுகளோடும்  வழக்குரைத்து வழக்குகளை எளிதில் வென்றுவிடுவார். இந்த ஆற்றல் அவரிடம் அபரிமிதமாகக் காணப்பட்டது. இதனால் சக வழக்கறிஞர்கள் மட்டும் அல்லாது நீதிபதிகளும் அவரிடம் மிக்க மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். 

தந்தை செல்வநாயகம் அவர்களின் கொள்ளுப்பிட்டி வீட்டில் தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் அடிக்கடி கூடி அரசியல்பற்றி  உரையாடுவோம். சில நேரங்களில் தந்தை செல்வநாயம் அவர்களோடும் பேசுவோம்.  

தமிழ் அரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் (அறுபதுகளில்) நாடாளுமன்றத்துக்கு ஒழுங்காக வராமல் நீதிமன்றங்களில் வழக்குப் பேசுகிறார்கள் என தந்தை செல்வநாயகம் அவர்களிடம் முறைப்பாடு செய்வதுண்டு. அதற்கு அவர் “தலைவர்களை இணக்க முடியாது, கடையில் வாங்க முடியாது, இருக்கிறவர்களை வைத்துக் கொண்டுதான் செயற்பட வேண்டும்”  என்று சொன்ன பதில் இப்போதும் நினைவிருக்கிறது. 

சிங்களம் மட்டும் சட்டத்தின் கீழ் சிங்கள மொழியில் தேர்வு எழுதாத  தமிழ் அரச ஊழியர்கள் வேலையை இழக்கும் நெருக்கடியில் இருந்த காலத்தில் சிலர் கட்சி விரக்தியோடு தந்தை செல்வநாயகம் அவர்களோடு உரையாடுவது உண்டு. அவற்றை எல்லாம் மிகவும் கவனமாகச்  செவிமடிப்பார்.  வேறு யாராவது குறுக்கிட்டுச் “சொன்னது போதும் அய்யாவுக்கு எல்லாம் விளங்கும்” என்று  சொன்னாலும் “இல்லை. அவரைப் பேசவிடுங்கள்” என்று பெருந்தன்மையோடு சொல்லிவிடுவார்.

அப்படியான சமயங்களில் தந்தை செல்வநாயகம் தான் தோன்றி வாதாடிய வழக்குகள் பற்றி அவ்வப்போது சொல்லி எங்களை ஆற்றுப்படுத்துவார். ஒரு வழக்கில் அவரது கட்சிக்காரர் அறம்புறமாக வாக்குமூலம் அளித்துவிட்டார். தந்தை செல்வநாயகத்தின் உதவி சட்டத்தரணி  பி. நவரத்தினராசா  கியூ. சி  தனது தலையைக் குனிந்து கொண்டார்.  சாட்சிக் கூண்டில் இருந்து இறங்கி வந்த வழக்காளி  தந்தை செல்வநாயகம் அவர்களைப் பார்த்து “எப்படி அய்யா எனது சாட்சியம்” என்று கொஞ்சம் பெருமிதத்தோடு கேட்டார்.  தந்தை செல்வநாயகம் “மெத்த நல்லது. நீர் ஒரு கெட்டிக்காரன்” என்று சொல்லி அவரது முதுகில் தட்டிக் கொடுத்தார்.   எந்த நெருக்கடியிலும் தன்னம்பிக்கையை கை விட்டுவிடக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக தந்தை செல்வநாயகம் இந்த நிகழ்வைச் சொன்னார். 

முப்பதுகளில் நடைமுறைக்கு வந்த டொனமூர் அரசியல் யாப்பு அதுவரை காலமும் நடைமுறையில் இருந்து வந்த வகுப்புவாரிப் பிரதிநித்துவ முறையை ஒழித்து அனைவருக்கும் வாக்குரிமை (Universal suffrage) என்ற அடிப்படையில் சட்டசபைக்குத் தேர்தல் மூலம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையை நடைமுறைப் படுத்தியது. அதனை சேர் பொன்னம்பலம் இராமநாதன் கடுமையாக எதிர்த்தார்.  “டொனமூர் என்றால் இனித் தமிழர் இல்லை என்று பொருள்” (Donoughmore means Tamils No More) என்று குரல் எழுப்பினார். புதிய தேர்தல் முறையில் தமிழரின் பிரதிநித்துவப் பலம் பெருமளவு குறைந்தது. அமைச்சரவையிலும் (Board of Ministers) தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டு நூற்றுக்கு நூறு சிங்களவர்களைக் கொண்ட அமைச்சரவை உருவாகியது.  டொனமூர் அரசியல் யாப்பின் பின்னரே பெரும்பான்மைச்  சிங்களவர்கள் தாங்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அரசியல் அதிகாரம் தங்களது கையில் இருக்க வேண்டும் என எண்ணத் தொடங்கினார்கள். இந்த வரலாற்றையும் எம்மிடம் சொன்னவர் தந்தை செல்வநாயகம் அவர்கள்தான். 

தமிழ் அரசுக் கட்சியின் தொடக்க காலத்தில் தந்தை செல்வாநாயகத்தோடு தோளோடு தோள் கொடுத்தவர்கள் பலர் இருந்தாலும் மூன்று  பேரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஒருவர் இரும்பு மனிதர் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட டாக்டர் இஎம்வி நாகநாதன். இரண்டாமவர் கோப்பாய்க் கோமகன்  திரு. கு. வன்னியசிங்கம் அவர்கள்.  மூன்றாமவர் இளம் சட்டத்தரணி வி.நவரத்தினம்.  இந்த மூவரும் தந்தை செல்வநாயகத்தின் வலது இடது கைகளாகச் செயல்பட்டார்கள். 

இவர்களில் திரு வி. நவரத்தினம் மட்டும் 1967 இல் சிறிமாவோ – சாஸ்திரி உடன்பாட்டுச் சட்டம், அடையாள அட்டை அமுலாக்கச் சட்டம் ( டட்லி சேனநாயக்க அரசில்) நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது அவற்றைக் கடுமையாக எதிர்த்துப் பேசி வாக்களித்த காரணத்துக்காக அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். .திரு வன்னியசிங்கம் அவர்கள் செப்தெம்பர் 17, 1959 ஆம் ஆண்டு (அகவை 49) இயற்கை எய்திய போது அவரது  இடத்தை நிரப்பியவர் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் ஆவார். 

அய்ம்பதுகளிலும் அறுபதுகளிலும் தமிழரசுக் கட்சியை வளர்ப்பதற்காக வழக்கறிஞர் தொழிலில் கைநிறையச் சம்பாதித்த பணத்தை தந்தை செல்வநாயகம் தண்ணீராகச் செலவழித்தார். அரசியலில் புகுந்தால் பெயர், புகழ், பணம் சம்பாதிக்கலாம் என்ற நியதி இருந்த காலகட்டத்தில் தந்தை செல்வநாயகம் அரசியலில் ஈடுபட்டுத் தனது வழக்கறிஞர் தொழிலில் உழைத்த பணத்தையும்  இழந்தார். 

கொழும்பில் அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக  வாழ்ந்த அவர் கடைசிவரை ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார் என்ற செய்தி பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. அவர் நினைத்திருந்தால் கொழும்பில் ஒன்றல்ல ஒன்பது வீடுகள் அவரால் வாங்கியிருக்க முடியும். வாடகை வீட்டில் வசிப்பதன் மூலம், கொழும்பு தமிழர்களின் நிரந்தர இருப்பிடமாக  மாறிவிடக் கூடாது என்ற செய்தியை அவர் தெரிவிக்க விரும்பினார். 

தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்ல சுதந்திரன் என்ற வார ஏட்டை 1952 ஆம் ஆண்டு தந்தை செல்வநாயகம் தொடங்கினார். இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் உரிமைக் குரல் ஆக அது வெளிவந்தது. அதனை நடத்த பெரும்தொகைப் பணத்தை செலவழித்தார். தொடக்கம் முதல் இறுதிவரை அது பெரும்பாலும்  நட்டத்தில் நடத்தப்பட்டது. அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி  பத்திரிகைக்குத்  தடை விதித்ததோடு  அலுவகத்தையும்  மாதக் கணக்கில் மூடுவதை  வழக்கமாகக் கொண்டிருந்தது. 

கொழும்பு, தமிழர்களுக்கு உரித்தானது  அல்ல,   வடக்கும் கிழக்குமே தமிழர்களுக்கு உரிய வாழ்விடம்.  இது தந்தை செல்வநாயகம் அவர்களது  அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அவர் கடைசிவரை கொழும்பில் வாடகை வீட்டில் இருந்ததற்கு அதுவே காரணமாகும். தனது பிள்ளைகள் தாங்கள் பிறந்த மண்ணின் மணத்தையும் மண்ணுக்குரிய பண்பாடுகளையும் மறக்கக் கூடாது என்பதற்காக பள்ளி விடுமுறை நாட்களில் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான தெல்லிப்பளைக்கு அவர்களை அனுப்பி வைத்து விடுவார். 

தந்தை செல்வநாயகத்திடம் தான் பெரிய தலைவர் என்ற எண்ணமோ, புகழ் பெற்ற வழக்கறிஞர்  என்ற பெருமையோ எள்ளத்தனையும் இருந்ததில்லை. காட்சிக்கு எளியவர் என்று சொல்வோமே? அதற்குத் தந்தை செல்வநாயகம் இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கினார். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அதில் மெய்ப் பொருள் காண்பது அறிவு, சொல்பவர் உருவுகண்டு எள்ளாமை, சொல்பவரை  இடை மறித்தல் செய்யாது எல்லாவற்றையும் பொறுமையோடு செவி மடுக்கும் பண்புகள்  அவரிடம் இயற்கையாகவே குடிகொண்டிருந்தன. 

சிலர் சரமாரியாகக்  கட்சியில் உள்ள குறைகளை அடுக்கிக் கொண்டு போவார்கள்.  அவர்களைப் பார்த்து தந்தை செல்வநாயகம் கேட்கும் கேள்வி  “சரி நோயைச்  சொல்லி விட்டீர்கள். அதற்குரிய மருந்தையும் சொல்லுங்கள்” என்பார். 

தந்தை செல்வநாயகம் அரசியல் மேடைகளிலும் சரி, நீதிமன்றங்களிலும் சரி அதிகம் பேசுவதில்லை. குறிப்பாக நீதிமன்றங்களில் தேவைக்கு அதிகமாக ஒருவார்த்தைதானும் பேசமாட்டார். “எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறோம் மனிதர் இவ்வளவு சுருக்கமாகப் பேசிவிட்டு உட்கார்ந்து விட்டாரே வழக்கு வென்றமாதிரித்தான்” என்று ஏங்கிய கட்சிக்காரர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். 

தந்தை செல்வநாயகம் அவருக்கு வாலாயமான சில தமிழ்ச்  சொற்றொடர்களை  பேசும்போது அடிக்கடி பயன்படுத்துவார். “அவர்கள் எங்களை அழிக்க நினைப்பது துலாம்பரமாகத் தெரிகிறது.” “எங்கள் போராட்டத்தில் வெற்றிபெறுவது என்பது ஒரு வில்லங்கமான காரியம்.” “சிங்கள மேலாண்மையை நாங்கள் எதிர்த்துப் போராட வேண்டும் இல்லாவிட்டால் அழிந்து போவோம்.” “வாள் எடுத்தவன் வாளால் அழிவான்” என்பன சில   சொற்றொடர்கள்.  

தந்தை செல்வநாயகம் மதத்தால் கிறித்தவராக இருந்தாலும் தமிழ் பண்பாட்டைக் கட்டிக் காப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். கர்நாடக இசை சரி, நாதசுர இசை சரி இரண்டிலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. வெள்ளவத்தைப் பிள்ளையார் கோவில் திருவிழாக் காலங்களில் இடம்பெறும் நாதசுரக் கச்சேரியை மண்டபத்தின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து  கொண்டு ஆடாமல் அசையாமல் மணித்தியாலக் கணக்கில் கேட்டு மகிழ்வார். 

தமிழ்ப் பண்பாடு காப்பதில் அவருக்கு இருந்த ஈடுபாட்டுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு அவரது திருமணம்.  திருமணமாகி  நாலாம் நாள் சடங்கை தடபுடலாக வைக்க அவரது மாமனார் திரு ஆர்.ஆர். பார் – குமாரசிங்க விரும்பினார். ” நல்லது, அதனைத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவாக நடத்த வேண்டும்” என்பது மாப்பிள்ளை போட்ட நிபந்தனை. மாமனாரும் சரி என்று தலையாட்டி விட்டார். மாமனார் வீட்டுக்கு தனது மனைவியோடு சென்ற மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மேற்கத்தைய பாணியில் மேசையில் பீங்கான் கோப்பை, கரண்டி,  முள்ளுக் கரண்டி சகிதம் தனது மாமனார் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அதை விரும்பாது தனது புது மனைவியையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிச் சென்று விட்டார். 

தந்தை செல்வநாயகத்தின் இந்தக் கொள்கைப் பிடிப்பு அரசியலிலும் இருந்தது. சந்தர்ப்பவாதம்,  வளைந்து கொடுத்தல் அவரது அரசியல் அகராதியில் இல்லாத  சொற்கள். முடிவு மட்டுமல்ல அதனை அடையும் வழியும் சரியாக இருக்க வேண்டும் என்பது அவரது கோட்பாடாகும்.  

1972 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஸ்ரீலங்காவின் புதிய ஒற்றையாட்சி யாப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கு முகமாக தந்தை செல்வநாயகம் தனது நாடாளுமன்ற. உறுப்பினர் பதவியை உதறித்தள்ளித் தமிழ்மக்கள் ஆதரவு யார் பக்கம் என்பதை எண்பிக்க இடைத் தேர்தல் நடாத்துமாறு ஆட்சியாளருக்கு அறை கூவல் விடுத்தார். மூன்று ஆண்டுகள் காலத்தைக் கடத்திய பின்னர் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் தன்னோடு எதிர்த்துப் போட்டியிட்ட ஆளும் கட்சி வேட்பாளரை 16,470 அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிவாகை சூடினார். இப்படி இடைத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர் வி. பொன்னம்பலம் சில ஆண்டுகள் கழித்து தமிழீழக் கோரிக்கையை ஏற்று அதனை முற்றாக ஆதரித்தார் என்பது தந்தை செல்வாநாயகத்தின் அரசியல் ஆளுமைக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியாகும். 

 பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த அவரது அரசியல்வாதிகளும் தந்தை செல்வநாயகத்தின் கொள்கை கோட்பாட்டை விரும்பாவிட்டாலும் அவரது நேர்மையில் ஒருபோதும் அய்யப்பட்டது  கிடையாது. தமிழ் மக்கள் அவரை “ஈழத்துக் காந்தி” என்றும்   “தமிழ்த் தேசியத்தின் தந்தை” என்றும்  அன்போடும் உரிமையோடும்  அழைத்தார்கள்.

மலையளவு பொருளைத் தொலைத்து, சிறை சென்று, உடல் நலம் கெட்ட போதும் தமிழ்த் தேசியத்துக்கு நீர் வார்த்து, உரம் இட்டு தமிழ் மக்களை கரடு முரடான  விடுதலைப் பாதையில் அழைத்துச் சென்றவர்  தந்தை செல்வநாயகம் அவர்கள்.  அந்தப் பயணம் இன்றும் தொடர்கிறது. தமிழர்களின் தாயகமான வட – கிழக்கை உள்ளடிக்கிய நிலப்பரப்பில் தமிழர்களுக்கு உரிய தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் கூட்டாச்சி அரசை நிறுவ வேண்டும் என்ற  கோரிக்கை  இன்று தமிழர் தரப்பால் அரசியல் வேறுபாடின்றி ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  

தந்தை செல்வநாயகம் அவர்களது  நினைவு நெஞ்சிருக்கும் வரை நினைவு இருக்கும்!  (முற்றும்)