”இலங்கை மலையக மக்களுக்கு காணி உரிமை பெற்றுக் கொடுப்பதற்கு அனுமதி பெறப்படும்.” என்கிறார் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான்
Share
கெஞ்சி கேட்டால் அது பிச்சை, துணிந்து கேட்டால் தான் அது உரிமை. எனவே, காணி உரிமையை துணிந்து கேட்டுள்ளோம். அது நிச்சயம் கிடைக்கும்.
(28-07-2023)
“மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை பெற்றுக் கொடுப்பதற்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் காலங்களில் முன்வைக்கப்பட்டு, அதற்கான அனுமதி பெறப்படும்.” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, காணி அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார ஆகியோருடன் இணைந்தே இந்த கூட்டு அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
அத்துடன், இலங்கை வாழ் மக்களுக்காக முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் தவறான கோணத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன, அவை நிறுத்தப்பட வேண்டும், 13 ஆவது திருத்தச்சட்டமென்பது சிறந்த ஜனநாயகக் கருவியாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
” மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் சுமார் 2 லட்சத்து 35 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன. இந்திய அரசால் 14 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசாலும் வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு காலம் எடுக்கலாம். எனவே தான் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளது.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் இது பற்றி வெளிப்படையாக அண்மையில் அறிவித்தார். எனவே, எனது அமைச்சு உட்பட நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களும் கலந்துரையாடி, இவ்விவகாரம் தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைப்பார்கள். அது கூட்டு அமைச்சரவைப் பத்திரமாக அமைச்சரவையில் முன்வைக்கப்படும்.
ரணசிங்க பிரேமதாச ஆட்சி காலத்தில் பெருந்தோட்ட நிறுவனங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இது தொடர்பான குத்தகை ஒப்பந்தம் பலவீனமானது. லயன் வீடுகள் கூட தோட்டக் கம்பனிகளுக்குரிய சொத்துகளாக வழங்கப்பட்டுள்ளன.
கெஞ்சி கேட்டால் அது பிச்சை, துணிந்து கேட்டால் தான் அது உரிமை. எனவே, காணி உரிமையை துணிந்து கேட்டுள்ளோம். அது நிச்சயம் கிடைக்கும்.
அதேவேளை, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது இலங்கையில் 9 மாகாணங்களுக்குரியது. மாறாக அது வடக்கு, கிழக்குக்கு மட்டும் அல்ல. எனவே, 13 கிடைத்து விட்டால் தமிழர்கள் வென்று விடுவார்கள் என்ற கோணத்தில் கருத்துகள் பரப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இது விடயத்தில் ஊடகங்களும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.” என்றார்.