LOADING

Type to search

கனடா அரசியல்

யுத்த காலத்தில் அழிந்த நிலையில் காணப்பட்ட கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பி மகா கும்பாபிஷேகம் செய்த வெற்றியாளர் மறைந்த நகுலேஸ்வரக் குருக்கள் ஆவார்.

Share

கனடாவில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் புகழாரம்

”இலங்கையின் வடபகுதியில் நிலவிய யுத்த காலத்தில் முற்றாக அழிந்த நிலையில் காணப்பட்ட கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பி மகா கும்பாபிஷேகம் செய்த வெற்றியாளர் மறைந்த நகுலேஸ்வரக் குருக்கள் ஆவார். அந்த ஆலயம் சிதைந்து போயிருந்ததை முதன் முதலாகக் கண்டு கண்ணீர் விட்டு அழுத பெருமகன் இன்று எம்மோடு இல்லை. அவரது மறைவு எமது சைவ உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்”

இவ்வாறு கடந்த சனிக்கிழமையன்று கனடாவில் றிச்மண்ட்ஹில் இந்து ஆலய கலா மண்டபத்தில் நடைபெற்ற மறைந்த கீரிமலை நகுலேஸ்வரக் குருக்கள் அவர்களின் மறைவு குறித்த அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றிய சிவஶ்ரீ சோமஸ்க் கந்தக்குருக்கள் அவர்கள் புகழாரம் சூட்டினார்.
மேற்படி அஞ்சலிக் கூட்டம் றிச்மண்ட் இந்து ஆலய நிர்வாக சபை மற்றும் தொண்டர்கள், கனடா வாழ் இந்து குருமார்கள் மற்றும் மறைந்த நகுலேஸ்வரக் குருக்கள் அவர்கள் குடும்பம் சார்ந்த உறவினர் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது.

மிகவும் உருக்கம் நிறைந்ததாகவும் பக்தி சார்ந்ததாகவும் இடம்பெற்ற மேற்படி அஞ்சலிக் கூட்டத்தில் சிவஶ்ரீ ஶ்ரீதரக்கு குருக்கள், சிவஶ்ரீ சிவசங்கரக் குருக்கள். சிவஶ்ரீ கேதீஸ்வரக்குருக்கள் ஆகியோர் உட்பட பலர் அஞ்சலி உரையாற்றினார்கள்.

தற்போதைய கனடா அரசின் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் அஞ்சலிச் செய்தியை திருமதி ஜனனி சிவலிங்கம் அவர்கள் அஞ்சலிக் கூட்டத்தை ஏற்பாடு செய்த குழுவினரிடம் வழங்கினார்.

தனது 98வது வயதில் அண்மையில் சிவபதம் அடைந்த சிவஶ்ரீ நகுலேஸ்வரக் குருக்களின் மறைவு தொடர்பாக உலகெங்கும் பல நாடுகளிலும் மற்றும் இலங்கையின் அனைத்து நகரங்களிலும் தொடர்ச்சியாக அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப்பெற்றுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது

— செய்தி;- சத்தியன்- கனடா