அனைவராலும் பாராட்டப்பெற்ற செல்வன் ஹரிகரன் தர்மசோதி. ஹரிணி தர்மசோதி ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம்
Share
கனடா- கலையருவி நாட்டிய நிறுவன அதிபரும் குருவுமாகிய ஶ்ரீமதி ரேணுகா விக்னேஸ்வரன் அவர்களின் மாணவர்களும் திரு திருமதி தர்மசோதி அவர்களின் புத்திரச் செல்வங்களுமாகிய செல்வன் ஹரிகரன் தர்மசோதி. ஹரிணி தர்மசோதி ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 19-08-2023 சனிக்கிழமையன்று மாலை ஸ்காபுறோ சீனக் கலாச்சார நிலையத்தின் கலா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அன்றைய அரங்கேற்றத்தில் கலந்து சிறப்பித்த பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோராலும் நடன இரசிகர்களாலும் மேற்படி சகோதரக் கலைஞர்களின் அரங்கேற்றம் பாராட்டப்பெற்றது என்றால் மிகையாகாது.
பக்கவாத்தியக் கலைஞர்களாக வாய்ப்பாட்டு- அருண் கோபிநாத், மிருதங்கம்- ரதிரூபன் பரஞ்சோதி, வயலின்- ஏ. ஜெயதேவன் ஆகியோர் மேடையை அலங்கரித்ததோடு மட்டுமல்லாது சகோதரக் கலைஞர்களின் நடன ஆற்றலை மேலும் மெருகூட்டும் வகையில் தங்கள் பக்கவாத்தியப் பங்களிப்பை மிகவும் நேர்த்தியாக வழங்கி அனைவரதும் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டனர்.
இசைச் செல்வர்கள் சாய்ச்சரன் முரளிதரன் மற்றும் சியாம் கருணேஸ்வரன் ஆகியோர் அரங்கேற்ற நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கி சபையோரினதும் பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோரின் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டனர்.
நடன உருப்படிகளை ஒரு சாதாரண பரதநாட்டிய ரசிகன் என்ற வகையில் ரசித்த போது அரங்கேற்றத்தின் நாயகர்களாக விளங்கிய செல்வன் ஹரிகரன் தர்மசோதி. ஹரிணி தர்மசோதி ஆகியோரின் ஆகியோரின் திறமைகள் சபையோர் அனைவருக்கும் நன்கு புரிந்து கொள்ளும் வகையில் அமைந்தன என்றே கூறலாம்.
அவர்களின் குரு மேடையில் மிகுந்த கவனத்தோடும் மிக்க களிப்போடும் அமர்ந்திருந்து தனது பங்களிப்பை ஆற்றியதும் பத்து வருடங்களுக்கு மேலாக தமது மாணவர்களாக அவர்களை ஏற்று அன்று சபையோர் முன்பாக சமர்ப்பித்த அவரது அரங்கேற்றத்தின் நோக்கம் நன்கு நிறைவேறியது என்றும் இந்த சகோதரக் கலைஞர்கள் தமது குருவிற்கு மிகுந்த அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்கள் என்றும் துணிந்து கூறலாம்.
செல்வன் ஹரிகரன் தர்மசோதி. ஹரிணி தர்மசோதி ஆகியோர் தனியாகவும் இணையாகவும் சமர்ப்பித்த நடன உருப்படிகள் அனைத்துமே சபையோரையும் பரத நாட்டியத்தின் பாண்டித்தியம் பெற்ற அனைவராலும் நன்கு இரசிக்கப்பட்டும் பாராட்டப்பட்டும் கரகோசங்களைப் பரிசாகப் பெற்றன.
சத்தியன்-