பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் பதவி – ஜனாதிபதியிடம் முறையிட நடவடிக்கை
Share
வடமாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் செயலாளராக கடமையாற்றும் திருவாகரனுக்கு சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் பதவி வழங்க வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
வடமாகாண பொது சேவை ஆணைக்குழு வட மாகாண அமைச்சுகளின் இடமாற்றம் மற்றும் பதவி வெற்றிடங்கள் தொடர்பில் சுயாதீனமாக முடிவெடுக்கும் ஒரு ஆணைக்குழுவாக செயற்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொதுச் சேவை ஆணை குழுவின் செயலாளராக பதவி வகிக்கின்ற முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளரான திருவாகரனை மேலதிகமாக வட மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக வடமாகாண ஆளுநர் நியமிக்கவுள்ளார்.
குறித்த நியமனமானது சுயாதீனமாக இயங்குகின்ற வடக்கு பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தேவையற்ற தலையீடுகளை ஏற்படுத்தும்.
இந்நிலையில் குறித்த நியமனம் தொடர்பில் வடமாண தாதியர் சங்கம் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அதன் முதற்கட்டமாக இலங்கை தாதியர் சங்கங்களின் தாய் சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொழிற்சங்கங்களின் ஆலோசகராகவும் செயல்படுகின்ற சமன் ரட்ணப் பிரியாவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் வர நாட்களில் எழுத்து மூலமாக முறைப்பாடு ஒன்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வட மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக நாளை திங்கட்கிழமை திருவாகரன் பதவியை ஏற்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.