கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளுடன் துப்பாக்கி சன்னங்களும் காணப்படுவதாக தெரிவிப்பு
Share
நடராசா லோகதயாளன்
முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இரண்டாவது நாளாகவும் வியாழக்கிழமை (7) அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.
அப்போது மனித எலும்புக்கூடுகளுடன் துப்பாக்கி சன்னங்களும் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
இரண்டாவது நாள் அகழ்வுப் பணி முடிவடைந்த பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே சட்ட வைத்திய அதிகாரி இவ்வாறு தெரிவித்தார்,
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
இரண்டாவது நாளாகவும் வியாழன் (7) கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடைபெற்றிருந்து. இதன்போது மேலதிகமான மனித எலும்கூடுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்றும் அகழ்ந்தெடுக்கப்படும் பணி இடம்பெறவுள்ளது. அகழ்வின்போது வேறு சில முக்கியமான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக துப்பாக்கி சன்னங்கள் என சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. முக்கியமான ஆதாரங்களில் இதுவும் ஒன்று. அது தவிர கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்கள் பகுப்பாய்வின் பிற்பாடே அறியத்தரப்படும் என்றார் அவர்.
மனித எச்சங்கள் முழுவதுமாக இன்னும் எடுக்கப்படவில்லை பகுதியளவிலேயே எடுக்கப்பட்டுள்ளது. உடுப்புக்களில் சில தடயம் இருக்கின்றது இதனை விரிவாக ஆராய்ந்ததன் பின்னர் தான் இது தொடர்பாக கூறமுடியும் என மேலும் தெரிவித்தார்.
அங்கு காணப்படும் மனித எச்சங்கள் தொடர்பில் கூறும் போது, ஒன்று அல்லது இரண்டு தான் என்று நாம் எண்ணிக்கையை சரியாக கூறமுடியாது ஏனெனில் முழுவதுமாக எடுத்ததன் பின்னர் தான் எத்தனை என கூறமுடியும் என்றார்.
மனித புதைகுழிக்குள் இருந்து தான் துப்பாக்கி சன்னம் எடுக்கப்பட்டது. இரண்டு உலோக துண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவை துப்பாக்கி சன்னம் என்றே சந்தேகிக்கப்படுகின்றது. அடையாளங்களும் இருக்கின்றன அது பகுப்பாய்வு செய்ததன் பின்னர் தான் இது தொடர்பான சரியான கருத்து தெரிவிக்க முடியும் என மேலும் தெரிவித்தார்.
குறித்த சம்பவ இடத்தில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவையாளர், தடயவியல் பொலிஸார், விஷேட அதிரடி படையினர் ஆகியோர் முன்னிலையில் அகழ்வு பணி நடைபெற்றிருந்தது.
குறித்த அகழ்வு பணியின் போது முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.