நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரும் பரிந்துரைப்பு மனு ஐ.நா அலுவலகத்தில் கையளிப்பு
Share
நடராசா லோகதயாளன்
இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்த ஐ நா பொதுச்செயலர் தலையிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரும் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மூலம் இந்த முன்னெடுப்பு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தனக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக கூறி பதவியிலிருந்து விலகி நாட்டைவிட்டு வெளியேறிய சம்பவம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைத்தீவில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறிச்சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட கௌரவ நீதிவான் ரி.சரவணராஜா அவர்களுக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் , கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகளின் பங்கேற்போடு 2023.10.02 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றிருந்தது.
இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மாண்புமிகு அன்ரனியோ குட்ரெஸ் அவர்களுக்கு அனுப்பிவைப்பதற்கு ஏதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் கையளிக்கப்பட்ட கோரிக்கை மனு, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிரான்ச் அவர்களிடம் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, புதன்கிழமை (04) நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் கையளிக்கப்பட்டது.
நாட்டில் ஒரு தமிழ் நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண தமிழ் மக்களின் பாதுகாப்பு என்னாவாகும் என்று தமிழர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
குருந்தூர்மலை தொடர்பில் நீதிபதி சரவணராஜா அளித்த தீர்ப்பை இனவாதிகள் என்று அறியப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரத் வீரசேகர, உதய கம்மன்பில ஆகியோர் கடுமையாக விமர்சித்து, அவரை நாடாளுமன்றத்திற்குள்ளேய அவருக்கு எதிராக இனவாத கருத்துக்களை வெளியிட்டனர்.
”அந்த தமிழ் நீதிபதி ஒரு சிங்கள பௌத்த நாட்டில் வசிக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.