LOADING

Type to search

இலங்கை அரசியல்

இந்தியா செல்ல உண்டியல் குலுக்கி நிதி சேகரிக்கும்படி டக்ளஸ் அறிவுரை

Share

நடராசா லோகதயாளன்

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களது அத்துமீறலை தடுத்து நிறுத்தும் வகையில் இந்தியாவிற்கு செல்லும் பேச்சுவார்த்தை குழுவின் பயணச் செலவிற்காக உண்டியல் குலுக்கி நிதி சேகரிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியதற்கமைய பருத்தித்துறை பகுதியில் வீதிகளில் உண்டியல மூலம் நிதி சேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களது எல்லைதாண்டிய அத்துமீறல் காரமாக வடபகுதி மீனவர்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் எவையும் வெற்றிபெறாத நிலையில் வடக்கு கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்தியாவிற்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த பேச்சுவார்த்தை குழுவின் பயணச் செலவிற்காக உண்டியல் குலுக்கி நிதி சேகரிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார்.

இதற்கமைய தற்போது பருத்தித்துறை முனை பகுதியில் உண்டியல் மூலம் நிதி சேகரிக்கும்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி வடக்கு பகுதியில் உள்ள சில மீனவர் சங்கங்களின் பிரதிநிகள் ஒன்று சேர்ந்து குறித்த நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். “இந்திய இழுவைப் படகுகள், எல்லை தாண்டி, சட்டவிரோதமாக எமது கடற்பரப்பிற்குள் நுழைந்து தொழில் செய்வதை தடுப்பதற்காக இந்தியா சென்று தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முதலமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், கடற்றொழில் வளம் சம்பந்தப்பட்ட பிரமுகர்கள், கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த வடக்கு கடற்றொழில் சம்மேளனம், சமாசங்கள் தீர்மானித்துள்ளன. அதற்கான பயணச் செலவுக்காக நிதி சேகரிக்கின்றோம்.

இதற்கு தங்களினால் ஆன உதவிகளை வழங்கி உதவுமாறு கோருகின்றோம்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட உண்டியலினை ஏந்தி குறித்த நிதி சேகரிப்பை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.