LOADING

Type to search

இலங்கை அரசியல்

எதிர்கால உலகை வெல்ல, பாடசாலைகளின் கல்விப் புலம் புதிய பரிமாணம் பெறவேண்டும் – சிறீதரன் எம்.பி

Share

நடராசா லோகதயாளன்

பேரிடர் காலங்களையும், உலக ஒழுங்கையும் இலகுவில் எதிர்கொள்ளக் கூடிய எதிர்கால சமூகத்தின் உருவாக்கம் ஒன்றிற்காக, மாணவர்களை முதலீடாகக் கொண்ட உற்பத்தியாளர்களான ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விப்புலம் சார்ந்தோர், கல்விக் கொள்கைகளிலும் சிந்தனைகளிலும் புதிய அணுகுமுறைகளைகளைக் கைக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில், கிளிநொச்சி-தர்மபுரம் இல.01 அ.த.க பாடசாலையில் நடைபெற்ற 65ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவரது உரையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாவது;

மாணவர்களின் ஆரம்பக் கல்விப் பருவத்திலேயே, அவர்களது ஆளுமை விருத்திக்கான அத்தனை களங்களும் திறக்கப்பட வேண்டும் என்பதற்கு இன்றைய இந்த நிகழ்வு மிகச் சிறந்த உதாரணம். உயர்தர மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் இந்த ஆரம்பப்பாடசாலையின் நிகழ்வு மிகநேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் தரம் உயர்ந்து நிற்பதற்கு பாடசாலை அதிபரின் ஆளுமையும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கூட்டிணைவும் தான் காரணம். இத்தகைய புறச்சூழலில் வளரும் குழந்தைகள்தான் ஆளுமையும் தலைமைத்துவமும் மிகுந்த குழந்தைகளாக உருவாகுவார்கள்.

உலகியல் அறிவோ, கூருணர்வுப் பார்வையோ, எதிர்காலம் பற்றிய தெளிவோ இல்லாது புத்தகப்பூச்சிகளாக வளர்க்கப்படும் பிள்ளைகள், உரிய வழிகாட்டல்கள் இன்மையால், பல்கலைக்கழக கற்கைநெறிகளைத் தெரிவுசெய்வதில்கூட தவறிழைக்கிறார்கள்.

குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களிலும், கிளிநொச்சி மற்றும் திருகோணமலை வளாகங்களிலும் ஒவ்வொரு துறைகளிலும் பல்வேறு கற்கைநெறித் தெரிவுகள் உள்ளபோதும், வட, கிழக்கிலுள்ள தமிழ் மாணவர்கள் தத்தம் துறைசார்ந்த முதன்மைக் கற்கைநெறிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்கின்றனர். இதனால் ஏனைய கற்கைநெறிகளைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் தவறவிடப்படுகின்றன.

இது தொடர்பிலான தெளிவையும், வழிகாட்டலையும் எமது மாணவர்களுக்கு வழங்க வேண்டிய தேவை உள்ளது. சமநேரத்தில் க.பொ.த.சாதாரண தரத்தில் ஆங்கிலபாடத்தில் ஆகக்குறைந்தது திறமைச் சித்தியையேனும் பெற்றுக்கொள்ள மாணவர்களும், அவர்களை வழிப்படுத்துகின்ற ஆசிரியர்களும் முயற்சிக்க வேண்டும். இதன்மூலம் பல்கலைக்கழக வாய்ப்பைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் – என்றார்.

பாடசாலை அதிபர் பரமநாதன் தவநேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக உயிரியல் மருத்துவ விஞ்ஞானி திருமதி.துர்க்கா ஜெயரட்ணம் அவர்களும், கெளரவ விருந்தினர்களாக கரைச்சிப் பிரதேச நிருவாக கிராம அலுவலர் சண்முகம் சந்திரன், ஓய்வுநிலை கிராம அலுவலர் சி.பரமதாஸ் ஆகியோர் உட்பட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.