இலங்கையில் 4 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பு இன்மையை எதிர்கொள்கின்றார்கள் – கலாநிதி இ.ஈஸ்வரன்
Share
பு.கஜிந்தன்
இலங்கையில் நாங்கள் தற்போது 22 மில்லியன் மக்கள் வசிக்கின்றோம். அந்த மக்களிலே கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் (அண்ணளவாக 17 சதவீதம்) உணவு பாதுகாப்பு இன்மையை எதிர்கொள்கின்றார்கள். இந்த வருடம் மே மாதம் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழகம், அறிவியல் நகர் விவசாய பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி இ.ஈஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.
நேற்றையதினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் நினைவு தினமும் கல்லூரியின் முதல்வர் திரு.லங்கா பிரதிபன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிறுவுனர் நினைவுப் பேருரை ஆற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த மக்களிலே பிரதானமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பெருந்தோட்ட தொழில்துறை மக்கள். அதைத் தவிர உணவு நிவாரணம் பெறுகின்ற மக்கள் அத்துடன் திறனற்ற உழைப்பாளர்கள். ஏனென்றால் அவர்கள் பெறுகின்ற ஊழியம் குறைவானது. அதைத்தவிர பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் மற்றும் கல்வியிலே பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள்.
நாங்கள் பார்க்கின்ற போது இந்த மாவட்டங்களாக இருப்பவை கிளிநொச்சி, நுவரெலியா, மன்னார், மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம். பெரும்பாலும் மலையக மாவட்டங்களும் வடக்கு கிழக்கை சேர்ந்த மாவட்டங்களும் பிரதானமாக இந்த உணவு பாதுகாப்பின்மை எதிர்நோக்கி இருக்கின்றன.
இன்றைக்கு எல்லோருக்கும் தெரியும் இந்த உணவு பாதுகாப்பின்மை இலங்கையில் முன்னரும் இருந்தது. ஆனால் அது குறைந்த சதவீதமாக இருந்தது கோவிட் தொற்றுக்கு பின்னர் எங்களது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அது அதிகரித்தது.
2021 ஆம் ஆண்டில் முன்னை நாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் கொண்டுவந்த ஒரு அரச கொள்கை மாற்றம்தான் இந்த உணவு பாதுகாப்பின்மையை இந்த அளவுக்கு மோசமாகியது என்று சொல்லலாம்.
சேதன விவசாயத்தால் ஏராளமான நன்மைகள் உள்ளன. ஆனால் பசுமை புரட்சி எவ்வாறு உருவானது என்று பார்ப்போமேயானால் 1960, 1970களிலே உலகலாவிய ரீதியிலே மக்களுடைய குடித்தொகை அல்லது சனத்தொகை அதிகமாக அதிகரித்து வந்தது. அதிகரித்து வந்த குடித்தொகைக்கு காரணம் எங்களுடைய அதிகரித்த சுகாதார வளர்ச்சிகள். அந்த மாதிரியான காரணங்களினால் குடித்தொகை அதிகரித்து வந்தபோது உணவு இருக்கவில்லை. இலங்கை போன்ற நாடுகளில் அந்தத் தாக்கம் பெரிதாக இருக்கவில்லை ஆனால் வளர்ச்சி அடைந்த நாடுகளிலே அந்தத் தாக்கம் பெரிதாக உணரப்பட்டது. இதனால் எழுந்த கேள்வி, உணவு இல்லாமல் மக்களை சாக விடுவதா அல்லது நாங்கள் புதிதாக ஏதாவது ஒன்றை செய்வதா என்பது.
பசுமைப் புரட்சிக்கு சமாந்தரமாக கைத்தொழில் புரட்சி உருவானது. அந்த கைத்தொழில் புரட்சியிலே முக்கியமாக கிடைத்த ஒரு நன்மை எவ்வாறு சுவட்டு எரிபொருட்களை பாவிக்கலாம் என்பது. அந்த சுவட்டு எரிபொருட்களை பாவித்து விவசாயத் துறையில் முதலாவது செய்த கைத்தொழில் இரசாயனம் உயர்தரத்தில் இருக்கின்றது. அதாவது அமோனியா யூரியா தயாரிப்பு. அந்த யூரியா தயாரிப்பு தான் கைத்தொழில் புரட்சியினால் உருவாக்கப்பட்டு பசுமை புரட்சிக்கு வந்தது. அந்தப் பசுமை புரட்சிதான் இந்த அளவு நிலைக்கு கொண்டு வந்தது.
இலங்கையில் நெல்லை எடுப்போமேயானால் நெல்லில் இருப்பது 99 சதவீதம் விளைச்சல் அதிகரிக்கப்பட்ட இனங்கள்.
இந்த முரண்பாடான கொள்கை வகுப்பிற்கு முன்னர் இலங்கை நெல் உற்பத்தியில் தன்னிறைவு கண்ட ஒரு நாடாக இருந்தது. ஆனால் 2021க்கு பிறகு சடுதியாக ஏற்பட்ட மாற்றம் காரணமாக எங்களால் அந்த அளவிற்கு நெல்லினை உற்பத்தி செய்ய முடியவில்லை.
2022,2023 இந்த வருடத்தினுடைய சிறு போக விளைச்சலை பார்ப்போமேயானால் விளைச்சல் சரியாக குறைந்தது தெளிவாகத் தெரிகின்றது. எங்களது விவசாயிகளிடம் தற்போது உள்ளது விருத்தி செய்யப்பட்ட பயிரினங்கள்க்ஷ அந்த விருத்தி செய்யப்பட்ட பயிரினங்களுக்கு தேவையான உள்ளீடுகளை சரியாக வழங்காவிட்டால் அவை ஒருபோதும் தேவையான விளைச்சலை தரப்போவதில்லை.
அதனால் தான் நாங்கள் துரதிஷ்டவசமாக நெல்லை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே ஆட்சியில் உள்ளவர்கள் இவ்வாறான முரண்பாடான கொள்கைகளை வகுக்கும்போது விவசாயத்துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்களைவோ அல்லது அது சார்ந்த சிந்திக்க கூடியவர்களயோ அணுகாமல் இவ்வாறான முரண்பாடான கொள்கைகளை கொண்டு வந்ததுதான் இந்த உணவு பாதுகாப்பு என்பதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறினால் அது மிகையாகாது என அவர் மேலும் தெரிவித்தார்.