LOADING

Type to search

இலங்கை அரசியல்

கட்சிகளை ஒட்டவைக்க மீண்டும் ஒரு முயற்சி? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

Share

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஒரு குடிமக்கள் சமூகம் ஒரு நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழ் கட்சிகள் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்ற தலைப்பில், சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டியங்கும் டான் டிவி குழுமத்தின் பின்னணியோடு செயல்படும் அச்சிவில் சமூகத்துக்கு பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தலைவராக இருக்கிறார். ஏற்கனவே 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தக் கோரி ஒரு விண்ணப்பத்தை அக்குடிமக்கள் சமூகம்,யாழ். இந்தியத் துணைத் தூதரகத்திடம் கொடுத்திருந்ததை இங்கு நினைவுபடுத்த வேண்டும்.

தமிழ் அரசியல் அரங்கில் உள்ள பெரும்பாலான கட்சிகள் அந்த சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தன. கட்சித் தலைவர்கள், இரண்டாம் மூன்றாம் நிலை தலைவர்கள், அனைவரும் அழைக்கப்பட்டிருந்தார்கள். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். இவற்றுடன் சமய தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.அது அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமான கூட்டம்.

அன்றைக்கு அந்த மண்டபம் குறிப்பிடத்தக்களவு நிறைந்து.ஆனால் சமயத் தலைவர்கள் வந்திருக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஏழு பேர் வந்திருந்தார்கள். கட்சித் தலைவர்களில் எல்லாரும் வந்திருக்கவில்லை. குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் ஒருவரும் வந்திருக்கவில்லை. விக்னேஸ்வரனின் கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கவில்லை. மணிவண்ணனை போன்றவர்களும்கூட வந்திருக்கவில்லை. குத்துவிளக்குக் கூட்டணியைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் ஸ்ரீகாந்தா அணியும் வரவில்லை. மேலும் தமிழ்த் தேசியப் பரப்புக்கு வெளியில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், .பி.ஆர்.எல்.எஃப்பின் சுகு ஆகியோரும் அங்கே வந்திருந்தார்கள்.

நிகழ்ச்சிக்கு பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தலைமை தாங்கினார். அரசியல் விமர்சகர்களான ஜதீந்திரா, நிலாந்தன், பேராசிரியர் கணேசலிங்கன் ஆகியோர் உரை நிகழ்த்துவார்கள் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பேராசிரியர் கணேசலிங்கன் மிகவும் பிந்தியே,அதாவது கூட்டம் முடிந்த பின்னர்தான் அங்கு வந்தார். அவருக்குப் பதிலாக மூத்த ஊடகவியலாளர் தனபாலசிங்கம் உரை நிகழ்த்தினார். அங்கு கூடியிருந்த கட்சித் தலைவர்களுக்கோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

அதை ஒழுங்குபடுத்திய சிவில் சமூகம் தொடர்பாக ஏற்கனவே இருந்த  முற்கற்பிதங்கள் காரணமாக சில ஊடகவியலாளர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் சமூக வலைத்தளங்களில் அச்சந்திப்பைக் குறித்து ஊகங்களை எழுதத் தொடங்கினார்கள்.

அச்சிவில் சமூகம் ஏற்கனவே 13 வலியுறுத்தி இந்தியாவிடம் ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்திருந்த காரணத்தால், அந்தச் சந்திப்பும் 13வது திருத்தத்தை வலியுறுத்தும் நோக்கிலானது என்ற ஊகம் முதலாவது

இரண்டாவது, அது இந்தியாவுக்கு வசதியான ஒரு கூட்டை உருவாக்கும் நோக்கத்தை கொண்ட சந்திப்பு என்ற ஊகம்.

மூன்றாவது, ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அவ்வாறு கட்சிகளை டான் டிவி ஒருங்கிணைத்தது என்ற ஒரு ஊகம்.

இந்த ஊகங்களில் பெரும்பாலானவற்றை நிரூபிக்கும் விதத்தில் உரைகள் அமையவில்லை. உரை நிகழ்த்திய இரண்டு அரசியல் விமர்சகர்களும்13 வது திருத்தத்தைத் தொடவே இல்லை. இனப்பிரச்சனைக்கான தீர்வைக் குறித்தும் ஒன்றும் கதைக்கவில்லை.கட்சிகளை நோக்கி நேரடியாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும் இல்லை. ஐக்கியத்தின் தேவை குறித்தும், எப்படிப்பட்ட ஐக்கியம் அவசியம் என்பது குறித்தும்,ஒற்றுமைப்பட்டபின் எவ்வாறான கட்டமைப்புகள் தேவை என்பதைக் குறித்தும்தான் அங்கே உரையாடப்பட்டது. தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்தும் யாரும் அழுத்திப் பேசவில்லை. அதாவது கட்சிகளை ஒற்றுமைப்படுத்துவதே உரைகளின் பிரதான நோக்கமாயிருந்தது.

கடந்த 14 ஆண்டுகளில் தமிழ் ஐக்கியம் எனப்படுவது ஒரு கற்பனையாக மாறியிருக்கும் துர்ப்பாக்கியமான ஒரு சூழலில், அந்தச் சந்திப்பு இடம் பெற்றது. தமிழ்க் கட்சிகளை கொள்கைகளின் பெயராலும் ஐக்கியப்படுத்த முடியவில்லை. விவகாரங்களை மையப்படுத்தியும் ஐக்கியப்படுத்த முடியவில்லை. கடந்த 14 ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட எல்லா ஐக்கியப்படுத்தும் முயற்சிகளின் போதும் ஏற்பட்ட தற்காலிக ஐக்கியங்கள் பின்னர் சிதைந்து போயின.

கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியை முதலில் முன்னெடுத்தவர், முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் அடிகளார்தான். கூட்டமைப்பிலிருந்து கஜன் அணி வெளியேறியிருந்த ஒரு பின்னணியில், 2013 ஆம் ஆண்டு  மன்னாரில் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. சந்திப்பை ஒழுங்கு படுத்தியது  தமிழ் சிவில் சமூக அமையம்.ஆயர் அந்த சிவில் சமூகத்தின் ஆயுட்காலத் தலைவராக இருந்தார். சந்திப்பின் முடிவில் சம்பந்தர்  ஆயரை பார்த்துச் சொன்னார்பிஷப் நீங்கள் சொல்லுங்கோ.ஆனால் கடைசியா முடிவெடுக்கிறது நாங்கள்தான்என்று. ஒரு  மறை மாவட்ட  ஆயரை  நோக்கி, அதிலும் குறிப்பாக 2009க்குப்பின் மிகத் துணிச்சலாக கதைத்த ஒரு மதத் தலைவரை நோக்கி, ஒரு குடிமக்கள் சமூகத்தின் தலைவரை நோக்கி,ஓர் அரசியல் கட்சித்  தலைவர் சொன்ன பதில் அது

 அதன் பின் மீண்டும் பல ஐக்கியப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இம்முயற்சிகளில் பெரும்பாலானவை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த  சிவில் சமூக செயற்பாட்டாளரான சிவகரனால் முன்னெடுக்கப்படடன. அவர் முன்பு தமிழரசுக் கட்சி இளைஞர் அணித் தலைவராக இருந்து பின்னர்  வெளியேற்றப்பட்டவர். கடந்த 14 ஆண்டுகளில் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளில் அதிகம் ஈடுபட்டவர் அவர்தான். கட்சிகளை ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளுக்கும் மன்னார் மாவட்டத்திற்கும் என்னதான் ஒற்றுமையோ தெரியவில்லை

இடையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு முயற்சியை முன்னெடுத்தார்கள். அது 13 அம்ச கோரிக்கைகளில் வந்து முடிந்தது.அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் முதலில் இணைந்தது. அம் முயற்சி வெற்றிபெற்ற பொழுது ஒரு கட்சித் தலைவர் பின்வருமாறு சொன்னார் “2009 இக்குமுன் படையணிகளை வைத்திருந்த ஒரு இயக்கம் ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளை செய்தது. ஆனால் இப்பொழுது  அவ்வாறு ஓர் ஆயுதங்கூட  இல்லாத மாணவர்களாகிய நீங்கள் இப்படி ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்என்று. அவர் அப்படிச் சொன்னபோது அங்கு அமர்ந்திருந்த கட்சித்தலைவர்கள் அனைவரும் கைதட்டி வரவேற்றார்கள். ஆனால் அந்த 13அம்ச ஆவணமும் பின்னர் தோற்றுப் போய்விட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிலிருந்து வெளியேறியது

இப்பொழுது, குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கட்சிகளை ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளில்  ஈடுபட எந்த ஒரு சிவில் அமைப்பும் முன் வருவதில்லை. சிவகரனும் சோர்ந்து போய்விட்டார். இப்படிப்பட்டதோர்  துர்பாக்கியமான அரசியல் வெற்றிடத்தில்தான் டான் டிவி குழுமம் மேற்படி முயற்சியை  முன்னெடுத்திருக்கின்றது.

 கடந்த 14 ஆண்டுகளில் பெரிய கூட்டமைப்பு உடைந்துடைந்து,சிறிய கூட்டுக்களாக சிதறிப் போய் உள்ளது. இப்பொழுது தமிழ்த் தேசிய அரங்கில் தமிழரசுக்கட்சி, குத்துவிளக்குக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரனின் கட்சி ஆகிய நான்கு பிரதான கட்சிகள் உண்டு

இதில் ஆகப்பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அக்கட்சியின் தலைவர் யார் என்பதை வரும் ஜனவரி மாதம் தீர்மானிக்க வேண்டியிருக்கலாம். மூத்த பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி இதுவரையிலும் தேர்தல்கள் மூலம் தனது தலைவரைத் தெரிவு செய்யவில்லை. ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் இம்முறை அவ்வாறு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைவர் இல்லாத வெற்றிடத்தில், தேர்தலை நடாத்த வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. தேர்தலை வைக்காமல் நிலைமைகளைச் சமாளிக்கலாமா என்று  கட்சியின் மிக மூத்த உறுப்பினர்கள் கவலைப்பட்டாலும், தலைமை பலமிழந்து போனதன் விளைவாகவே இப்படி ஒரு போட்டி தோன்றியிருக்கிறது .

அதாவது ஏற்கனவே நான்கு கட்சிகள் பிரிந்து நிற்கும் ஒரு தமிழ்து தேசியச் சூழலில், உள்ளதில் பெரிய கட்சியும் தலைமைத்துவப் போட்டிக்குள் சிக்கிச் சிதையக்கூடிய ஒரு காலகட்டத்தில், டான் டிவி மேற்படி சந்திப்பை ஒழுங்குப்படுத்தியிருக்கிறது.

கடந்த 14 ஆண்டுகளில் ஒரு கூட்டமைப்பு உடைந்து நான்கு பிரிவுகள் உருவாகியிருக்கின்றன. இந்த நான்கு பிரிவுகளும் தாமாக இணையப் போவதில்லை. அவ்வாறு தாமாக ஐக்கியபடும் அளவுக்கு அந்த நான்கு பிரிவுகளிலும் பரந்த சிந்தனையை கொண்ட பெருந்தலைவர்கள் கிடையாது. கட்சித் தலைவர்கள்தான் உண்டு. இந்த நான்கு பிரிவுகளையும் ஒன்றாக்குவதற்கு பலமான சிவில் சமூகமும் இல்லை. பல கோடி ரூபாய்களை முதலீடு செய்து நாடாளுமன்ற உறுப்பினராக வந்தவர்கள், மோட்டார் சைக்கிளில் வரும் சிவில் சமூகங்களின் சொற்களை மதித்து நடப்பார்கள் என்று எப்படி எடுத்துக் கொள்வது?

சிவில் சமூகங்கள் அரசியல் கட்சிகளின் மீது செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு

பலமாக இல்லை. இந்த வெற்றிடத்தில்தான்  டான் டிவி ஒரு முயற்சியைத் தொடங்கியிருக்கிறது. உள்ளூரில் பலமான ஓர் ஊடகம் அது. அந்த ஊடகத்தில் எல்லா அரசியல்வாதிகளும் முகம் காட்ட விரும்புவார்கள். எனவே அந்த ஊடகம் அழைத்தால் எல்லா அரசியல்வாதிகளும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு தொகுதி அரசியல்வாதிகள் வரவில்லை. சமயப் பெரியார்களும் வரவில்லை. அதுமட்டுமல்ல ஏனைய சகோதர ஊடகங்கள் மத்தியிலும் அந்த சந்திப்பை குறித்து ஆக்கபூர்வமான விமர்சனங்கள் குறைந்தளவுக்கே வெளிவந்தன.

இந்நிலையில், தமிழ் அரசியலில் ஊடக அதிகாரம் எந்தளவுக்கு அரசியலில் தாக்கமுடையதாக இருக்கும் என்பதனை அன்றைய தொடக்கத்தின் பின்னரான அடுத்தடுத்த கட்டங்களே தீர்மானிக்கும்