இலங்கை மீன் இறக்குமதி செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு தேசிய மீன்பிடிக் தினக் கொண்டாட்டம்??
Share
நடராசா லோகதயாளன்.
இலங்கையின் மொத்தக் கடற்பரப்பு 1,760 கி.மீ. நீளமாக காணப்படும் நிலமையில் இன்றும் கடல் உணவு குறிப்பிட்டளவு இறக்குமதி செய்யும் நாடாகவே இலங்கை இருக்கும் அதே நேரம் இலங்கையின் கடற்பரப்பைவிட சிறிய நாடுகள் பல மொத்த தேவையினையும் பூர்த்தி செய்து ஏற்றுமதி நாடாகவும் உள்ளனர்.
இலங்கையின் மொத்த மீன்பிடியில் 33 வீத உற்பத்தி செய்த யாழ்ப்பாணம் மாவட்டம் இன்று முதல் மூன்று இடங்களிற்குள்ளும் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
இலங்கையில் காணப்படும் 15 கடல் மாவட்டங்களில் அதிக கடல் உணவு உற்பத்தி செய்யும் முதலாவது மாவட்டமாக புத்தளம் மாவட்டம் காணப்படுகின்றது. புத்தளம் மாவட்டம் முதலாவது மாவட்டமாக திகழ்வதற்கு இங்கே நீண்ட நாள் விசைப்படகுகள் அதிகமாக காணப்படுவதே காரணமாக விளங்கும் அதே நேரம் புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பகுதி அதிக பங்களிப்பினை வழங்குகின்றது.
இரண்டாவது மாவட்டமாக கம்பகா மாவட்டத்தின்
நீர்கொழும்பு பிரதேசம் காணப்படுகின்றது. கம்பகா இரண்டாவது இடத்தை பிடிக்க மாவட்டத்தின் நிக்கோவிட்ட இறங்குதறையே முக்கிய காரணம் எனக் கூறப்படுகின்றது. இங்கே அதிக படகுகள் வருவதே இதற்கு காரணம். 1983 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதியை யாழ்ப்பாணக் குடாநாடு மட்டும் உற்பத்தி செய்துள்ளதனை நீரியல் வளத் திணைக்கள தரவுகள் உறுதி செய்கின்றன.
இலங்கையின் மூன்றில் ஒரு பகுதிக் கடல் வடக்கில் உள்ளது. இதில் யாழ்ப்பாணம் மாவட்டம் மட்டும் 33.5 வீத உற்பத்தியை எட்டிய நிலமை காணப்பட்டது. இந்த உற்பத்தி வீழ்ச்சி கண்டதற்கு
யுத்தம், தொடராக ஒரு இடத்தில் மீன்பிடித்தமையால் இனப்பெருக்க இடம் அழிவு.
காலநிலை மாற்றம். மீன்பிடி அறிவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியமை போன்றவை காரணமாக இருந்தாலும் மிக முக்கிய காரணமாக இருப்பது அதிக கடல் கலங்கள் அழிக்கப்பட்டதும் பிரதான காரணமாகின்றது.
1983 ஆம் ஆண்டு ஆரம்பமான கடற் கலங்கள் அழிப்பு இறுதி யுத்த காலமான 2009 ஆம் ஆண்டு வரை நீண்டு அதிக கடற்கலங்கள் போரின் காரணமாக அழிக்கப்பட்டன.
1983ஆம் ஆண்டு கொக்குளாய், கொக்குத்தொடுவாய் முதல் மன்னார் வரையிலும் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் காலத்தில் வல்வெட்டித்துறை, திருகோணமலை வரைக்கும் படகுகள் தீயிட்டு கொழுத்தப்பட்டன. அதன் பின்பு 2ஆம் ஈழப்போரின் போது 1990 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, முல்லைத்தீவு, மன்னார், கிளாலி என எங்குமே கடற்கலங்களை அழிக்கும் இந்த அவலம் இடம்பெற்றதோடு 1995 மற்றும் 1996களில் ஒட்டு மொத்த யாழ்ப்பாண இடப்பெயர்வின்போதும் இதே நிலமையே காணப்பட்டது.
இதற்கும் அப்பால் தமது உயிரைக்காக்க இந்தியாவிற்கு தப்பிச் சென்ற மக்கள் பயணித்த படகுகள் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டது. அவை இன்றுவரை மீள ஒப்படைக்கப்படவில்லை. கிளாலிப் போக்குவரத்தில் அழிக்கப்பட்ட கடற்கலங்கள் நூற்றுக் கணக்கானவை.
இத்தனையும் தாண்டி
2020 ஆம் ஆண்டு இலங்கையின் கடல் உற்பத்தியின் மொத்த ஏற்றுமதியானது 21 ஆயிரத்து 298 மெற்றிக் தொன்னாக காணப்படும் அதே நேரம் இதன் பெறுமதியானது 39 ஆயிரத்து 874 மில்லியன் ரூபாவாக அதாவது 215 மில்லியன் டொலராக காணப்படுகின்றது. இதேநேரம் 2019ஆம் ஆண்டு 28 ஆயிரத்து 771 மெற்றிக் தொன்னும் 2018ஆம் ஆண்டு 27 ஆயிரத்து 998 மெற்றிக் தொன்னாகவும் காணப்பட்ட அதே நேரம் 2017 ஆம் ஆண்டில் 17 ஆயிரத்து 593 மெற்றிக் தொன்னாக மட்டுமே காணப்பட்டது.
ஏற்றுமதிகள் இந்த அளவில் என்பதனால் கணல் உற்பத்தியில் தன்னிறைவு எனக் கொள்ளக்கூடாது. ஏனெனில் 2020ஆம் ஆண்டின் இறக்குமதியானது 85 ஆயிரத்து 809 மெற்றிக் தொன்னாகவும் இதன் பெறுமதி 35 ஆயிரத்து 504 மில்லியன் ரூபா அதாவது 191 மில்லியன் டொலராகவும் காணப்படுகின்றது. அதாவது நல்லின மீன், இறால், நண்டு, கடலட்டை போன்றவை ஏற்றுமதி செய்யப்படும் அதே காலம் அடைக்கப்பட்ட ரின் மீன் மற்றும் நெத்தலிக் கருவாடு போன்றன இறக்குமதி செய்யப்படுகின்றது.
இலங்கையின் வருடாந்த கடல் உற்பத்தியானது 62 கோடியே 50 லட்சம் கிலோ எனப்படுகின்றது. ( 5 லட்சத்து 25 ஆயிரம் தொன்.) இருப்பினும் இந்த அளவில் சிறு சந்தேகமும் உள்ளது.
இலங்கையில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்வது
கடலட்டை, அறக்குலா, பாரை, இறால், நண்டு ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அதி உச்ச பசளை வீதியில் வீசப்படுகின்றது.
அன்றாட உணவிற்காக பெறப்படும் இறாலின் கோதானது அதி உச்ச பயனைத் தரும் மிகப்பெரும் பசளையாகும். இந்தியாவில் இறால் கோது தென்னைச் செய்கைக்காக நிலத்தின் கீழ் பயன்படுத்துவது மட்டுமன்றி தென்னை வட்டுக்குள்ளும் வீசப்படுகின்றது. எமது பிரதேசத்தில் கல்வி அறிவு உடையவர்கள்கூட அதனை வீதியில் வீசிவிட்டு இரசாயன உரத்தை வாங்கியே பயன்படுத்தவே முனைகின்றனர்.
ஆயிரம் கிலோ இறாலிற்கு 120 கிலோ ஓடு என்ற அடிப்படையில் ஒரு மாதம் 20 ஆயிரம் தொன் இறால் ஏற்றுமதியில் . கடந்த ஆண்டு பண்ணைகளில் இருந்து 8 ஆயிரம் தொன் இறால் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதாவது 80 லட்சம் கிலோ இறால் இதில் 8 லட்சம் கிலோ கோது வரும் . இதனை வெளியில் எடுத்தால் அதிக பசளை. இதில் புத்தளம் பகுதி விவசாயிகள் இதனை நன்கு பயன்படுத்துகின்றனர். வடக்கில் பசளையை அநியாயமாக கை விடப்படுகின்றது.
வடக்கு கடல் பண்ணைகள் என்னும் பெயரில் பங்கிடப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 292 கி.மீற்றர் நீள கடல் உள்ளதோடு, மன்னாரில் 163 கி.மீ. நீளம் கடல் உள்ளதோடு , கிளிநொச்சியில் 125 கி.மீற்றரும், முல்லைத்தீவில் 76 கி.மீற்றருமாகவே வடக்கு மாகாணத்தில் 656 கி.மீற்றர் நீள கடல் உள்ளது. இதன் கரையோரங்களில் அதிக பண்ணைகளை அமைக்க தற்போதைய அரசு திட்டமிடுகின்றது. இதனால் ஏனைய நீண்டகால பாரம்பரிய தொரில்கள் எந்தளவிற்கு பாதுகாக்கப்படும் என்பது ஒரு கேள்விக் குறியாகவும. உள்ளது.
இவற்றில் அதிகமாக தற்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகள் கடலட்டை, இறால்ப் பண்ணை, பாசி வளர்ப்புத் திட்டம் போன்ற திட்டங்களின் பெயரில் பல ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கப்படவுள்ளது மட்டுமன்றி கடலும் வழங்கப்படவுள்ளது. இதில்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வேலணையில் 2 ஆயிரத்து 150 ஏக்கரும், ஊர்காவற்றுறையில் 2 ஆயிரத்து 15 ஏக்கரும், நல்லூரில் 445 ஏக்கரும் வழங்கப்படவுள்ளதோடு கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் 260 ஏக்கர் பிரதேசம் வழங்கப்படவுள்ளது.
தரைக்கு அப்பால் கடலிலும் இடம் வழங்கப்படவுள்ளது.
நான்கு பிரதேச செயலாளர் பிரிவில் தரையில் இடம் வழங்கினாலும் 5வது பிரதேச செயலாளர் பிரிவான நெடுந்தீவுப் பிரதேசத்தில் கடலில் 400 ஏக்கர் பிரதேசம் பாசி வளர்ப்பிற்கு வழங்கக்படுகின்றது. இதன் அடிப்படையில் இரு இடங்களில் 200 மற்றும் 200 ஏக்கர் இடமாக கடலில் இரு இடங்கள் ஒதுக்கப்பட்டு வழங்கப்படுகின்றது. அவ்வாறு கடலில் வழங்கப்படும் இரு பிரதேசமும் தரையில் இருந்து 500 மீற்றருக்கும் அப்பால் நடுக் கடலிலேயே இந்த இரு திட்டமும் இடம்பெறவுள்ளது.
50 பில்லியன் வருமானம் கிடைக்கும்.
5 ஆயிரம் ஏக்கருக்கு பண்ணைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படுகின்றது. வருமானம் மாகாண சபைக்கு கிட்டும்.
மன்னாரில் தற்போது 56 ஏக்கர் பாமில் ஒரு வருடத்திற்கு 1 பில்லியன் வருவதனால் 60 வீத செலவீனம் வரும். மிகுதி இலபம். கரை வலை பாதிக்காது. கலங்கட்டிக்கு 300 மீற்றர் இடைவெளியிருக்க வேண்டும். அது போதுமானது. பாசி வளர்ப்பை நாடி பெரிய இன மீன் தேடி வரும். மீனவர்களை ஏமாற்றி வாங்கும் தரகர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவர்.
யாழ் . குடாநாட்டில் 1983ல் 48677 மெற்றிக் தொன்னாக இருந்த மொத்த மீனின் உற்பத்தி 2014ல் யுத்தம் நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்தும் 31767 மெற்றிக் தொன்னைத் தான்ட முடியவில்லை என்பதனை மாவட்ட புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
இலங்கையில் யுத்தம் வலுப்பெற்ற காலமான 1983ஆம் ஆண்டுயாழ் . குடாநாட்டில் அப்போது இருந்த வளங்களை உபயோகித்து 48677 மெற்றக் தொன் மீன் உற்பத்தியை பெற்ற மீனவக் குடும்பங்கள் 2014 ம் ஆண்டில் வெறும் 31767 மெற்றிக் தொன் உற்பத்தியை மட்டுமே பெற்றுள்ளனர் என்பதனை யாழ். மாவட்டத்தின் 2016ம் ஆண்டிற்கான திட்டமிடல் கையேட்டின் புள்ளிவிபரம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதே வேளை யாழ்.குடாநாட்டில் மட்டும் 298 கிலோ மீற்றர் நீளமுடைய கடல்ல கரை நீளமும் , 21,117 மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த 22,119 மீனவர்கள் செயல்படுகின்றனர். குடாநாட்டில் தற்போது 14 மீன் பிடி பரிசோதகர் பிரிவுகள் இயங்கும் அதேவேளையில் 110 மீனவக் கிராமங்கள் உள்ளன. இங்கு 93 மீன்பிடி கிராமிய அமைப்புக்களும் , 117 மீனவர் சங்கங்களும் இயங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு இயங்கும் மீனவர்களிடம் மொத்தம் 8010 படகுகளும், இப் படகுகள் மூலம் தொழில் செய்வதற்கு 06 துறைமுகங்கள் உள்ளன. இதேவேளை குடாநாட்டில்7 ஐஸ் உற்பத்தி நிலையங்களும் , 3 மீன் பதப் படுத்தும் நிலையங்களும் செயற்படுகின்ற போதிலும் குடா நாட்டின் 83 ஆம் ஆண்டின் உற்பத்தியை நெருக்க முடியாத்தாகவே உள்ளமை இப்புள்ளி விபரத்தின் பிரகாரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து சீனா மற்றும் மலேசியாவிற்கு அதக கடல் உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்பட்டாலும் சீனா, தாய்வான் நாடுகளல் இருந்து அதிக இறக்குமதியும் இடம்பெறுகின்றது.
இவை அனைத்திற்கும் அப்பால் தற்போது சீனாவில் இருந்து மீன் இறக்குமதிக்கும் ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளதாக மீனவ அமைப்பின் பிரதிநிதிகளில் ஒருவரான அன்னராசா குற்றம் சாட்டுவது தொடர்பில் கடற்றொரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கையில. பிடிபடாத மீன்வகைகள் இறக்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றது என்கின்றார். அதேநேரம் இலங்கையில் உள்ள சீனத் தூதுவரோ இலங்கைக்கு சீனாவில் இருந்து எந்தவிதமான கடல் உற்பத்தியும் இறக்குமதி இல்லை என்கின்றார் இதில் எது உண்மை என்பதும் இவர்களிற்கு மட்டுமே தெரியும் உண்மையாகவுள்ள சூழலிலேயே 2023 ஆம் ஆண்டின் சர்வதேச மீன்பிடி தினத்தை இலங்கை அனுஸ்டிக்கின்றது.
இதேநேரம் இலங்கையின் வடக்கு மீனவர்கள் அனுபவிக்கும் மீன்பிடி நெருக்கடியில் ஒன்று இந்திய மீனவரின் அத்துமீறல் இதனை தொடர்ந்தும் மீனவர்கள் சுட்டிக்காட்டிவருகின்றனர். இதனை வலியுறுத்தவோ என்னவோ 2023 ஆம் ஆண்டின் மீன்பிடித் தினக் கொண்டாட்டம் யாழில் உள்ள இந்திய அரசால் கட்டப்பட்ட கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.