யாழ்ப்பாண சட்ட மாநாடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 27ம் திகதி சனியன்று ஆரம்பமானது
Share
பு.கஜிந்தன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத் துறையானது 2005 ஆம் ஆண்டிலிருந்து சடடமாணிப் பட்டத்தை வழங்குகின்ற ஒரு உயர் கல்வி நிறுவனமாக இயங்கி வருகின்றது.
அதன் கல்விப்பணியின் பிறிதொரு மைல்கல்லாக யாழ்ப்பாணத்தில் சட்ட மாநாடு ஒன்றை நடாத்த விரும்பியது. அதற்கமைய இந்தியாவின் புகழ் பெற்ற சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர்கள் நிறுவனத்துடன் இணைந்து 27. 28 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கத்தில் யாழ்ப்பாண சட்ட மாநாடு என்னும் பெயரிலான மாநாட்டினை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்தன. அந்தவகையில் 27ம் திகதி சனிக்கிழமை நிகழ்வானது ஆரம்பமாகியது.
யாழ்ப்பாண சட்ட மாநாடானது நெருக்கடிகளுக்கூடான வழிகள் என்னும் தொனிப்பொருளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டின் நோக்கங்களாக சட்டப் பரப்பில் அதிகம் பேசப்படாத விடயங்ளைப் பேசுதல், பன்மைத்துவ ஆய்வை ஊக்குவித்தல், அவ்வகை ஆய்வு முயற்சிகளை கலந்துரையாடுவதற்கான களமொன்றை அமைத்தல், சட்டப் புலமையாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரையும் அவர்களின் ஆய்வுச் சிந்தனைகளையும் ஒன்றிணைத்தல், எழுத்திலுள்ள சட்டத்திற்கும் அதன் செயற்பாட்டிற்குமான இடைவெளியைக் குறைத்தல், சட்ட மாணவர்களுக்கு சடடத்துறை சார் ஆய்வுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் துறைசார் நிபுணர்களுடனான வலையமைப்பை ஏற்படுத்தல் ஆகிய பல்வேறு நோக்கங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் மாண்புமிகு சட்டமா அதிபர் திரு சஞ்சய் ராஜரட்ணம் அவர்களும் கௌரவ விருந்தினராக ஐக்கிய நாடுகளின் முன்னாள் நேருதவிச் செயலாளரும் சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடு தொடர்பான செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியுமான கலாநிதி ராதிகா குமாரசுவாமி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
முதல் நாள் நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக இலங்கையின் புகழ்பூத்த ஜனாதிபதி சடடத்தரணி கலாநிதி கனகீஸ்வரன் அவர்களினதும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் சொர்ணராஜா அவர்களினதும் சிறப்புரைகள் இடம்பெற்றது.
இலங்கையில் பகிரங்க சட்டத்தின் எதிர்காலம்: நெருக்கடிகளும் சவால்களும் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்வொன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.