LOADING

Type to search

இலங்கை அரசியல்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின், சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு ஆரம்பம்

Share

பு.கஜிந்தன்

மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை கிராமங்களுக்கே சென்று ஆராயும் நடவடிக்கையை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் ஆரம்பித்துள்ளார்.

பல கிராமங்களின் மக்களை சனசமூக நிலையங்களூடாக ஒன்றிணைத்து, அவர்களுடன் கௌரவ ஆளுநர் சந்திப்புக்களை நடத்த வடக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய முதலாவது சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு யாழ்ப்பாணம், அரியாலை கிழக்கு, பூம்புகார் பகுதியில் புதன்கிழைமையன்று (31.01.2024 ) நடைபெற்றது.

அரியாலை கிழக்கு, பூம்புகார், நாவலடி, மணியந்தோட்டம், உதயபுரம் ஆகிய கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சனசமூக நிலையங்களின் அங்கத்தவர்களை கௌரவ ஆளுநர் நேற்று மாலை சிநேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார்.

மேற்குறித்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கௌரவ ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில், காணி உறுதி இன்மை, வீட்டுத்திட்டம் கிடைக்காமை, கிணறுகள், சிறு குளங்கள் புனரமைக்கப்படாமை, வீதி சீரின்மை, மைதானம் இன்மை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கிராம மக்கள் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடினார்கள்.

இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் , நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கருத்து தெரிவிக்கப்பட்டது.

தொழில் இன்மை, பொழுதுபோக்கு செயற்பாடுகளுக்கான வசதிகள் இன்மை, போதைபொருள் பாவனைக்கு அடிமையாதல், பாடசாலை இடைவிலகல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர் .

மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் கேட்டறிந்த கௌரவ ஆளுநர், அபிவிருத்தி திட்டங்கள் கிராம மட்டத்தில் உரிய முறையில் முன்னேடுக்கப்படாமை தொடர்பில் கவலை தெரிவித்தார். கிராமங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், அந்ததந்த கிராம மக்கள் விரும்பி , உரிமை கோரும் செயற்திட்டங்களாக அமைய வேண்டும் என கௌரவ ஆளுநர் குறிப்பிட்டார்.

அத்துடன், அரியாலை கிழக்கு, பூம்புகார், நாவலடி, மணியந்தோட்டம், உதயபுரம் ஆகிய கிராமங்களின் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் உள்ளுராட்சி மன்றங்களூடாக மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஆளுநர், அந்த விடயங்கள் தொடர்பில் எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கைகளை சமர்பிக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.