செந்தில் குமரன் அவர்களின் தாயக மக்களுக்கான “நிவாரணம்” எனும் உயிர்காப்பு இன்னிசை மாலை ” MGR 107″
Share
உறை பனியிலும் “இறைபணியே மேல்” என
மனிதம் காத்திடத் திரண்ட மக்கள் கூட்டம்!
கடந்த 19-01-24 வெள்ளி மாலை Scarborough Metropoliton அரங்கில் நிகழ்ந்தேறிய திரு.செந்தில் குமரன் அவர்களின் தாயக மக்களுக்கான “நிவாரணம்” எனும் உயிர்காப்பு இன்னிசை மாலை ” MGR 107 ” மனிதநேயம் படைத்த மக்கள் வெள்ளம் அலைகடலாக ஆர்ப்பரித்து எழுந்தோடித் தளம்பிய காட்சியாய் விரிந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாய் அமைந்தது.
மனித உணர்வுகளுக்கு உயர்கொடுக்கும் பொன்மனச் செம்மலின் திரைப்படைப்புகள் தந்த மனிதாபிமான வழிகூறும் மெய்யியல் தத்துவப் பாடல்களோடு மனதை மயக்கும் இனிய காதல் பாடல்களுமாய் கூடவே அக்காலதில் புகழ் பெற்ற சிவாஜிகணேசன் திரைகளிலிருத்தும் அன்றாடம் நாம் மனதிற்குள் நினைந்து நினைந்து உருகி இன்புறும் காதல் பாடல்கள் மற்றும் ஏம் இராஜா, சீர்காழி போன்ற இன்குரல் செம்ல்கள் தந்த தித்திக்கும் பாடல்களுமென பொங்கி வழிந்த இசைமழையினில் நனைந்து இன்புற்ற மக்கள் பரவசத்தில் மூழ்கித்திளைத்த அந்த ஐந்து மணிநேரமும் ஐம்புலன்களையும் ஆட்சி செய்த பொன்மாலை வேளையெனில் பிறிதொரு வார்த்தையில்லை என்பேன்.
இவை அனைத்திற்கும் மகுடம் வைத்தாற் போல் திரு செந்தில் குமரன் அவர்கள் சிவாஜி எம்ஜிஆர் சாயலாய் அவர்தம் திரைக்காட்சிகளுக்கு ஏற்ப அப்பப்போ திடீர் உடையலங்கார ஒப்பைகளுடன் மேடையில் தோன்றி மக்களை இன்பவெள்ளத்தில் மூழ்கடித்த கணங்கள் ஒரு திரையரங்கிற்குள் நிற்பது போல் அல்லது அம்மாபெரும் நடிகர்களின் படப்பிடிப்புகளையே நேரே கண்டு களிப்பது போல் உணர்வின் தத்துரூப வெளிப்பாடாய் அவை எமை இன்பத்தில் ஆழ்த்தியது இரட்டிப்பு இனிமை எனலாம்.
அன்றைய இருபத்தி ஐந்து பாகை உறைபனிப் குளிர் நிலையினையும் ஒரு பொருட்டாத எண்ணாத மனிதம் தேடும் மக்கள் கூட்டம் திரள்திரளாய் பார்ப்போர் கூடத்தை நோக்கி அணிதிரண்டு வந்த வண்ணமே இருந்தனர்.
மண்டப வளாக வாகன தரிப்பிடங்களும் அதனை அண்டிய பிற நிறுவனங்களின் தரிப்பிடங்களும் இரசிகர் பட்டாள வாகனங்களால் நிரம்பிய நிலையில் அருகே உள்ள குடிமனைகளின் வீதி வீதியாய் தமது வாகனங்களை நிறுத்தி விட்டு கால்நடையாய் வந்து நிகழ்வை உளப்பூர்வமான பங்களிப்புகளுடன் இறுதிவரை இருந்து கண்டு களித்து
பன்னிரண்டு மணி கடந்து நிகழ்வு நிறைவுற்ற பின்னும் பிரியும் மனமின்றி பெருமகிழ்வுடன் அவர்கள் வீடு சென்றமை நிகழ்வின் தரத்திற்கும் அதன் இலட்சியப் பயணத்திற்கும் மக்கள் வழங்கிய அங்கீகாரமும் ஒத்தாசையும் என்று சொல்வதே சாலப்பொருந்தும் .
மண்டபத்தில் அமைக்கப் பெற்ற இருக்கைகளிற்கு மேலாய் மக்கள் கூட்டம் பெருக்கெடுத்து வழிநெடுக நின்ற நிலையாய் நின்று தத்தளிக்கும் நிலை கண்டு மேலும் பிரத்தியோகமாக நூற்றிற்கும் மேற்பட்ட நாற்காலிகள் அவசரமாக வரவழைக்கப்பெற்றும் அவையும் போதாமையினால் உணர்ச்சிப் பெருக்கில் சுவைஞர் பெருமக்கள் நின்றவாறே கரவொலி கொட்டிக் கொண்டாடிய ஆரவாரத்தில் சுற்றும் முற்றும் சோபித்த விழாக்கோலம் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்திருந்தது.
துன்பங்களின் விளிம்பில் நின்று அல்லாடும் எம் தாய்மண் உடன்பிறப்புகளின் துயர்களை போக்கும் புனிதப் பணியில் அபிமானம் மிக்க இருபாலார் பாடகர் வட்டமும், இதயங்களை வருடும் இசைஞானம் கொண்ட Lathan Brothers இளையதலைமுறை இசை வல்லுனர்களும், இன உணர்வும் சமூகப் பொறுப்பும் ஒருசேர இரசிகர்களை உணர்ச்சிப் பெருக்கிலும் மகிழ்ச்சிக் கடலிலும் களிப்புறும் வகையில் நிகழ்வினை கொண்ட குறிக்கோளுக்கு அமைவாகவும், புத்துணர்வுடனும் பொழுதை கவலைகளை மறந்து களிப்புறும் வகையிலும் மேடையை ஒரு கொண்டாட்டக் களமாகவும், பயன் மிக்க நன்கொடையாளர்களின் சந்நிதியாகவும் நகர்த்திச் சென்ற சமூகப்பற்றும் அதற்கான செயற் திறனும் மிக்க நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகிய திருமதி சாந்தினி சிவா மற்றும் செல்வி ரொசீதா ஆகிய இருவரும் தமது நேரத்தை மக்கள் பணியின் நிமிர்த்தம் முழுநீள நிகழ்ச்சிக்குமாக பங்களிப்புச் செய்தமை
மிகுந்த பாராட்டுதலுக்கும் நன்றிக்குமுரிய ஒன்று என்றே சொல்ல வேண்டும்.
நிவாரணத்தின் நிறுவுனரும் தீரா நோய்களிலிருந்தும், வாழ்வாதாரங்கள் அற்றோராகவும் உயிர்பிழைக்கவென ஏங்கித்தவிக்கும் வகையற்றோர் மீது பரிவுகொண்டவருமாய் தமது இயல்பிற்கும் மீறியவகையில் கடினமாக முயன்று ஒரு தனிமனிதராய் இன்றுவரை பலநூறு மக்களின் அல்லல் போக்கிமீள்வாழ்வு அளித்து வருபவருமாகிய திரு.செந்தில் குமரன் அவர்கள் தமது செயற் திட்டங்களின் பயனாகக் காப்பாற்றப்பட்ட பயனாள உறவுகளின் மகிழ்ச்சியையும், இன்னமும் உயிர்காப்பு வேண்டி காத்திருக்கும் நோயின் பிடியில் சிக்கித் தவிக்கும் இளம் குழந்தைகள் சிறியோர் இளையோர் பருவவயதினர் முதியோர் பொருள் வளமற்றோர் போன்றோரின் கண்ணீர் வேண்டுதல்களையும், மன்றாட்டுக்களையும் மக்கள் முன் விபரித்த போது கண்கலங்கிய மக்கள் தமது பங்களிப்புகளை பெருமனமுடன் வாரி வழங்கி உணர்வெழுச்சியுடன் நிகழ்வினை மகிழ்ச்சிப் பெருக்கோடு அனுபவித்து ஆரவாரித்து இன்பம் மேலிட ஆர்ப்பரித்த கொண்டாடிய விதம், பார்ப்போர் மனங்களை நெகிழ வைத்த நிகழ்வாய் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அரங்கத்தின் இருமருங்கிலும் அமைக்கப்பெற்றிருந்த விளக்கேற்றும் பீடங்களிலும் காட்சிப்படுத்தப் பட்டிருந்த ஐநூறு டொலர் பங்களிப்பிற்கான நூறு விளக்குகளின் வடிவமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தன.
பாடல்களின் போது திரு செந்தில் குமரன் தீபங்களின் மகிமையின் மேல் வலிமையின் மேல் ஆணையாடும் பாடலான “இசைகேட்டால் புவி அசைந்தாடும்” என்ற பாடலை பேரெழுச்சியுடன் ஆரம்பித்ததும் விளக்குகள் அனைத்தையும் மக்கள் துயர்களை மனதில் தாங்கி வந்த கொடையாள மனம்படைத்த மக்கள் தம்வசப்படுத்தி பங்களிப்புகளை தாராள மனதுடன் வாரி வழங்கி நிவாரணத்தாயின் கைகளுக்கு வலிமை சேர்த்து, “இல்லாதோருக்கான பணி இறைபணி” எனும் பெருமைக்கு தம்மை உட்படுத்தியது கண்டு கண்கள் குளமாகின.
நிறைவாக புரட்சித்தலைவர் MGR வரிசையில் மனிதநேயத்திற்கும், இரக்க சுபாவத்திற்கும் கறுப்பு MGR என்று செல்லமாக அழைக்கப்பெற்ற புரட்சிக்கலைஞர் அமரர் “விஜயகாந்த்” அவர்களின் மறைவு தொடர்பான நினைவுகூரல் நிகழ்வொன்றும் இடம்பெற்றது.
அவரது திரைப்படங்களில் மனம்விட்டகலா பாடல்களின் ஒரு தொகுப்பினை அனைத்து பாடகர்களும் உணர்வு பூர்வமாக பாடி அவருக்கு அகவணக்கம் செலுத்திய நிகழ்வானது ஒட்டுமொத்த விழாவின் முத்தாய்ப்பாய் அமைந்தது எனில் மிகையல்ல.
ஏழ்மையைக் கண்டு விலகாமலும், கொடுமையைக் கண்டு அஞ்சாமலும் வாழும் வாழ்வே
இறைநெறிக்கு ஒப்பான வாழ்வாகும். எமது மனிதக்கடனை நாமே இறைவன் காலடியில் சமர்ப்பிக்கும் இவ் அரும்பெரும் வாய்ப்பினை தவறவிட்டோர், இனிவரும் காலங்களில் செந்தில் குமரன்களை இனம் கண்டு தமக்கு இசைவான வழிகளில் மனிதம் காத்திட உறுதி பூண்டு செயலாற்றின் எம்கைகளை எண்ணிக் காத்திருக்கும் மேலும் பல உயிர்களுக்கு வாழ்வளிக்கலாம்.
வாழ்க மனிதம் வாழ்க நிவாரணத்தாய்
வாழ்க செந்தில் குமரன் வாழ்க கொடையாள நெஞ்சங்கள்.
அன்பில்லாதவர் எல்லாமே தமக்கு தமக்கு என்பர்
அன்புள்ளவரோ தமக்கானவற்றையும் கொடுப்பர் பிறருக்கு…!
இனிவரும் எம்ஜிஆர் 108 மேலும் பல உயிர்களின் காப்பரணாக அமையட்டும்.
நன்றி!
க.இராசநாதன்
23-01-24