மாணவர்கள்மீதான தாக்குதல்கள் இலங்கை அரசின் கோரமுகத்தை அம்பலப்படுத்துகின்றது
Share
நாடு கடந்த தமிழீழ அரசின் கனடா உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி கண்டனம்
பெப்ரவரி 4, 2024
இலங்கையிதன் சுதந்திரதினத்தன்று கிளிநொச்சியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்மீது இலங்கை அரசின் காவல்துறை மேற்கொண்ட அராஜகமான தாக்குதல் இலங்கை அரசின் கோரமுகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. என கனடாவிலிருந்து நாடு கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்தேசமாக கண்டனம் ஸ்ரீலங்காவின் சுதந்திரதினத்தை புறக்கணிக்கும் விதமாகவும் அந் நாளை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் அமைதி வழியில் பேரணி சென்ற அரசியல் தலைவர்கள், மாணவர்கள், மக்கள்மீது மிகவும் கொடூரமான முறையில் ஸ்ரீலங்கா காவல்துறையினர் தாக்குதல் நடாத்தியுள்ளமை கண்டு புலம்பெயர் தேசமாக கடும் கண்டங்களை வெளியிடுகின்றோம்.
ஸ்ரீலங்கா அரசு ஒரு ஜனநாயக அரசென்றால், ஸ்ரீலங்கா நாடு ஒரு ஜனநாயக நாடென்றால் இப்படியான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிராது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்மீது கண்ணீர் குண்டு பிரயோகம் மேற்கொண்டு, நீர்தாரை தாக்குதலையும் தொடுத்திருந்ததுடன், அவர்கள்மீது கடுமையான தாக்குதல்களையும் ஸ்ரீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
மக்கள் பிரதிநிதிகள்மீதும் அராஜகம்
இதேவேளை இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்மீதும் தாக்குதல்கள் நடந்துள்ளன. அத்துடன் மதிப்புக்குரியவர்களானபாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மக்கள்மீதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீதும் தாக்கி, தனது கோர முகத்தை இலங்கை அரசு வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் சுதந்திரதினத்தின்போது தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதையும் அவர்கள்மீது அடக்குமுறையும் ஒடுக்குமுறையையும் மேற்கொண்டதன் வாயிலாகவும் இந் நாளை கரிநாள் ஆக்கியுள்ளது ஸ்ரீலங்கா அரசு. இதனை பன்னாட்டு சமூகம் கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதி குறித்தும் சிந்திக்க வேண்டும்.
பொருளாதாரத்தடை வேண்டும்
இதேவேளை, ஸ்ரீலங்கா காவல்துறையினர் பெருமளவில் கிளிநொச்சியில் குவிக்கப்பட்டு, பாரிய அடக்குமுறை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுவே பாரிய பொருளாதார நெருக்கடியில் உள்ள ஸ்ரீலங்கா தமிழர்களை ஒடுக்குவதில் பாரிய மனித, பொருளாதார செலவுகளை செய்வதற்கும் இத்தாக்குதல் சிறந்த எடுத்துக்காட்டு.
எனவே ஸ்ரீலங்காவுக்கு பொருளாதார நன்மைகள் செய்யும் சர்வதேச நிறுவனங்களும் அரசுகளும் இதனைக் கருத்தில் கொண்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நிற்கின்றேன்.
தமிழரின் தலைவிதி தமிழர் கையில்.
நிமால் விநாயகமூர்த்தி
நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர், கனடா