கோணேஸ்வரர் ஆலயம் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட 400வது ஆண்டு நினைவுகூரல்!
Share
பு.கஜிந்தன்
நேற்று போல் ஒரு தமிழ் புத்தாண்டு தினத்தன்று போர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரம் அழிக்கப்பட்ட 400வது ஆண்டை நினைவுகூரும் வகையில் தென் கையிலை ஆதீனம் அகத்தியர் அடிகளார் தலைமையில் வடக்கு கிழக்கு பகுதி சிவனடியார்கள், கோணேஸ்வரர் ஆலயத்தில், ஞானசம்பந்தர் அருளிய பாடல்களை பாடி நினைவேந்தலை செய்தனர்.
தொடர்ந்து திருக்கையிலை ஆதீனம் தலைமை உரை ஆற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இந்த நினைவு தினத்தை, கோணேஸ்வரர் ஆலயம், இலங்கை பூராகவும் உள்ள சைவ அமைப்புகளை இணைத்து முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா. நந்தகுமார், ஆலயம் அழிக்கப்படுவதற்கு முன்னர் அழிக்கப்பட்ட வரலாற்று செய்திகளையும், இலங்கை மக்களது தலைமை கோவிலாக கோணேஸ்வரம் இருந்ததையும், ஆலயம் அழிவதை தடுப்பதற்கு அந்த காலத்தில் திருகோணமலை வாழ் சைவத் தமிழர்கள் செய்த தியாகத்தையும் கூறினார்.
திருகோணமலையின் சைவ அமைப்புக்கள் சார்பில் கலந்துகொண்ட திரு.சிவசங்கரன் (வைத்தியர்), கோணேஸ்வரர் கோவிலை சூழவுள்ள பகுதிகள் ஊர்களின் பெயர்கள் வருவதற்கு காரணமாகவும், அங்கு உள்ள மக்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்கும் கேந்திர மையமாகவும் கோணேஸ்வரர் ஆலயம் இயங்கியகவும், வெறுமனே ஆலயமாக அன்று தமிழர்களது வாழ்வுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து கலந்துகொண்ட ஆசிரியை, அறநெறி மாணவர்களுக்கு கோணேஸ்வரர் ஆலயத்தின் வரலாறு முழுமையாக கற்பிக்கப்பட வேண்டும் எனவும், அதற்கு அனைத்து சைவ சபைகளும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட சிவனடியார்களின் முக்கிய தீர்மானங்களாக, கோணேஸ்வரர் ஆலயத்தின் வரலாறு குறித்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும், நாடளாவிய ரீதியில் கோணேஸ்வரர் ஆலயத்தின் வரலாறு கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும், இளையோரிடையே ஓவிய – பேச்சு போட்டிகள் நடாத்தப்பட வேண்டும் எனவும், பல்வேறு விதத்தில் இந்த ஆண்டு முழுவதும் நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானித்தனர்.
இத்துடன் கூட்டம் நிறைவுற்றது. இதில் கலந்துகொண்ட சிவன் அடியவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.