ஆறாத வலி | புலம் பெயர்ந்த தேசம் ஒன்றிலிருந்து மிதியா கானவி
Share
இறுதிக்கட்டப் போரின்போது ஒவ்வொரு இடமாக மக்களுடன் சேர்ந்து மருத்துவ மனைகளும் இடம் பெயர்ந்தன. அந்த இடப்பெயர்வின் இறுதி இடம் தான் முள்ளிவாய்க்கால்.
பல இடப்பெயர்வுகளைச் சந்தித்து அனேக மருத்த உபகரணங்களையும் இழந்து வன்னிப் போரின் இறுதி நாட்களிலும் முள்ளிவாய்க்கால் கனிஸ்ர உயர்தர பாடசாலையில் இயங்கிக்கொண்டிருந்த மருத்துவமனை அது.
அங்கு மண் போட்டால் மண் விழாத அளவிற்கு நோயாளிகள் நிறைந்து வழிந்தனர்.
ஆனாலும் அதனை சமாளிக்கும் அளவிற்கு மருத்துவ ஊழியர்களோ, வைத்தியர்களோ. மருந்துகளோ இருக்கவில்லை பீரங்கி வாயினில் புறா கூண்டினைக் கட்டி குடிபுகுந்து வாழ்வதைப் போலவே மருத்துவமனையின் சூழலும் இருந்தது.
மருத்துவமனையின் அமைதி காணாமல் போயிருந்தது மக்களின் அலறல் ஒலிகள் காதைப் பிய்த்துக் கொண்டிருந்தன. அந்த சோகத் தணல் பீரங்கி வேட்டுக்களை விட மோசமாக மனதைத் தாக்கியது.
அன்றும் நோயாளிகளை அனுமதிக்கும் பகுதியில் அதிக மக்கள் காயமடைந்து கொண்டு வரப்பட்டுள்ளார்கள் . சத்திர சிகிச்சை அறையை விட்டு வெளியில் வருகிருகின்றோம் தறப்பாளினால் போடப்பட்டும், சன்னங்களால் சல்லடையாக்கப்பட்டும் .கிடந்த நோயாளர்களை அனுமதிக்கும் பகுதியில் வயது வேறுபாடின்றி கூக்குரல் இடுகின்றனர்கள் .”இங்க வாங்க அம்மாவை பாருங்க ,என்ர தம்பியை பாருங்க“இப்படி பல குரல்கள் நடுத்தர வயது மதிக்கத்தக்க தாயொருவர் வயிற்றில் காயத்துடன் குடல்கள் வெளியில் தெரிய போடப்பட்டிருந்தாள் ;.காயமடைந்த பலரையும் தாண்டி அந்த தாயின் நிலமை மோசமாக இருக்கும் என எண்ணியவாறு அங்காங்கே கிடந்த இறந்தவர்களின் உடலையும் தாண்டி அருகில் செல்கின்றோம் . இறந்தவர்களின் உடலைக் கூட அகற்ற முடியாத சூழல்.வெடியோசைகள் இடைவெளியற்று தொடர்ந்து கொண்டிருந்தன.யாரின் உயிரிற்கும் உத்தரவாதம் இருக்கவில்லை.
காயமடைந்திருந்த அம்மா ‘என்ர பிள்ளை பிள்ளை’என்றே முனகிக்கொண்டிருந்தாள். குருதி அதிகளவு வெளியேறி உடம்பு கண்டி சிவந்திருந்தது.கை கால் குளிர்ந்து நடுங்கியது.மார்பை மறைக்க ஓர் கிழிந்த சட்டையும் உட்பாவாடையும் அணிந்திருந்தாள்.கைகளில் மட்டும் ஒரு சிறிய படம் வைத்து இறுகப்பற்றியிருந்தாள். அதை என்னிடம் காட்டி ஏதோ சொல்ல துடித்தாள். முடியவில்லை. உடல் பலம் இழந்திருந்தது. எவ்வளவோ கத்த முயற்சித்தும் குரல் வெளியே ஒலிக்கவில்லை.
அந்த அம்மாவின் குருதியை இரத்த வங்கிக்கு பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு வேகமானோம். மாமரக் கொப்பொன்றில் சேலைன் பொத்தலைக் தொங்க விட்டு நாளத்திரவங்களை( IV fluid ) வேகமாக ஏற்றி கொண்டிருக்க.மெல்ல மெல்ல அம்மாவும் மீண்டும் உயிர் பெறத் தொடங்கினாள்.. முனகிக்கொண்டிருந்த அம்மாவிற்கு சற்று உடலில் தென்பு வர ‘தங்கச்சி எனக்கு பக்கத்தில் முத்த பிள்ளையின் உடல் சிதறிட்டு என்ர மூன்று வயது பிள்ளையைக்காணவில்லை நான் காயப்பட்டவுடன் ஆரோ என்னை இங்கு கொண்டு வந்திட்டாங்கள்’ என அம்மா பல முறை கூறினாள். ஆனாலும் அவளிற்கு ஆறுதல் கூற அங்கு யாரும் இருக்கவில்லை . எல்லோருமே அந்த நிலைமை தான். நின்று கதைக்க முடியவில்லை உயிருக்கு போராடும் மற்றவர்களை காப்பாற்ற வேண்டியிருந்தது. எல்லா இடங்களிலும் இதே ஓலம் தான்.
அம்மாவை சத்திர சிகிச்சை கூடத்திற்கு கொண்டு செல்ல முனைந்த போது அம்மா வர மறுத்தாள். ஏன்ர பிள்ளை வந்தால் தான் நான் வருவேன் என்று அம்மா கெஞ்சினாள்.
அப்போது சூரியன் உச்சத்தை தொட்டிருக்கவேண்டும் வெட்பம் எம்மை அனுகவேயில்லை பல நூறு மக்களின் கண்ணீராலும்,செங்குருதியாலும் மருத்துவமனை இயங்கிய இடம் நனைந்துகொண்டிருந்தது.
படார் என்ற சத்தத்துடன் விழுந்த எறிகணையால் அந்த இடமே புகை மண்டலமாகியது கண்களை மூடிக்கொண்டு விழுந்து படுக்கவும் அவகாசம் கிடைக்கவில்லை . இந்த சத்ததுடன் எம்முடன் ஒன்றாக மருத்துவமனையில் வேலை செய்து கொண்டிருந்த சிலர் காயமடைந்தும் நோயாளிகள் பலரும் மீண்டும் காயமடைந்தார்கள்
நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு மனம் சின்னாபின்னமாகியிருந்தது. வேதனை கோபம் உணர்ச்சிகள் ததும்ப கண்களில் வழிந்த நீரை துடைத்து கொண்டு மீண்டும் எம் கடமைக்குத்தயாரானோம்
அம்மாவின் சேலைன் போத்தலில் இருந்த சேலைனும் நிலத்தில் ஊற்றியது. நிமிர்ந்து பார்த்த போது தான் தெரிந்தது சேலைன் போத்தலும் காயப்பட்டிருந்தது.
நள்ளிரவைத்தாண்டியும் சத்திர சிகிச்சைக்கூடம் இயங்கிக் கொண்டுதான் இருந்தது. இரவைப் பகலாக்கி உறக்கத்தை தொலைத்து உணவு கூட இன்றி அங்கு நின்ற மருத்துவ ஊழியர்கள் மனித நேயத்துடன் தங்களால் இயன்ற வரை உழைத்ததை யாராலும் மறுக்க முடியாது .
ஒரு சிறிது நேர அமைதியின் பின் மீண்டும் மருத்துவமனையில் ஆரவாரம் மரண ஓலங்கள் தொடர்ந்தன.;அய்யா அய்யா அது என்ன அநியாயம் ஓர் பெண் விகாரமாய் தலையிலே கைகளை வைத்தபடி அழுதாள். அவள் அருகில் சிறு காயத்துடன் மருத்துவமனை வந்த சிறுவன் அசைவற்று கிடந்தான். . இன்னொருவர் இறந்து போன தன் பச்சிளம் பாலகனை மடியில் வைத்து கதறினார். இன்னும் சிலர் சடலங்களிற்கும் காயப்பட்டவர்களிற்கும் இடையில் தமது உறவுகளை தேடினார்கள்.
அம்மாவிற்கு குடலில் ஈரலில் சிறுநீரகத்தில் பாரிய காயங்கள் இருந்தமையால் சத்திர சிகிச்சையின் பின் அவசர சிகிச்சை விடுதிக்கு அனுப்பப்பட்டாள்
.இரவோடு இரவாக வந்த செய்தியால் கும் இருட்டிலும் மனம் வெளித்தது கொடூரமான அந்த வேளையிருலும் எங்களிற்கு அந்தச் செய்தி தேனாய் இனித்தது “ஜ.சி.ஆர்.சி. யின் கப்பல் வருகுதாம்” ‘ ஏத்தனையோ நாட்களாக நோயாளரை ஏற்ற வருவதாக சொல்லி இலகு காத்த கிளி போல ஏமாந்த நாட்களைப் போல்தான் ‘நாளை வருமோ’ என்று மனம் அங்கலாத்தது.மருத்துவமனையில் கூட காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த போதே மீண்டும் காயமடைந்து இறந்த பரிதாப நிலை எத்தனை கண் முன்னே நடந்தேறியது. அதைவிட மருந்துகளும் முடிவடைந்திருந்தன.
நேரம் அதிகாலை மூன்று மணி மக்கள் சந்தோசமாக வாழ்ந்த அழகிய கிராமத்தில் தான் அந்த மருத்துவமனையிருந்தது ஆனாலும் விடியலை கூற சேவல்கள் இருக்கவில்லை.மாறாக வெடியோசைகள் தான் நித்திய பூசையாக முழங்கியது
கப்பல் வருகின்றது என்ற செய்தி பரவலடைய நான் முந்தி நீ முந்தி என்று அனுமதியைப்பெறுவதற்கு முண்டியடித்தார்கள்.ஆனாலும் மூன்றுமாத கால இடைவெளியில் வரும் கப்பலில் அவசர நோயாளர்களை அனுப்புவதற்கே இடம் போதவில்லை மற்றவர்களை எவ்வாறு…………
“அம்மா வயிற்றின் உள்ளுறுப்புக்களில் பாரிய காயம் கட்டாயம் மேலதிக சிசிச்சைக்காக கப்பலில் போக வேண்டும்’
”என்றோம் முறைத்துப்பார்த்த அம்மா இயலாத காயத்துடனும் கட்டிலை விட்டு எழுந்து என்ர பிள்ளை இல்லாம நான் போகமாட்டன் செத்தா பரவாயில்லை’ என்றாள் திடமாக.
அம்மாவின் முகத்தைப்பார்க்க உள்ளம் நடுங்கியது.பட்டென நெஞ்சில் வலித்தது பக்கத்தில் இருந்த நோயாளி காலைப்பிடித்து ‘”என் பிள்ளைக்கு இரண்டு காலிலும் முறிவு அந்த அம்மாவின் இடத்திற்கு என்னை அனுப்புங்கோ’“ என கெஞ்சினார்.
உண்மையிலேயே அந்த நோயாளிக்கும் மேலதிக சிகிச்சை தேவைதான். அதைவிட உயிருக்காக போராடும் பலர் இருக்கிறார்கள்.அவர்களிற்கே கப்பலில் இடம் போதாமல் இருந்தமையால் மனங்களைக்கல்லாக்கி ஆறுதல் கூற கூட காலமின்றி அவர்களைக் கடந்து அடுத்த நோயாளியைப்பார்க்கச் செல்கின்றோம். மருத்துவர்களின் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு உயிர்கள் வாழ்ந்துகொண்டிருந்த காலமது.
ஏறிகணைகள், சன்னங்கள் வெடித்துக்கொண்டே இருந்தன. அதற்கு பயந்து பயந்து, பதிந்து, நிமிர்ந்து படுத்த நாட்களெல்லாம் கடந்து போய் இறுதி நாட்களில் விதியிருந்தால் நடக்கும் என்று அந்த சூழலில் இருந்த பெரும்பாலானவர்களின் மனங்களில் பதிந்திருந்த உண்மையாகியது.
நேரம் காலை ஒன்பது ஆகியது.மருத்துவமனை மேலும் பரபரப்பானது. முள்ளிவாய்க்கால் மருத்துவமனையிருந்த இடத்திலிருந்து அம்புலன்ஸ் வண்டியில் கடற்கரை வரையும் நோயாளர்களை ஏற்றச் சென்று பின்னர் சிறிய படகு ஒன்றில் i.cr.cயின் பெரிய கப்பலில் நோயாளர்களை ஏற்றினார்கள்.இதற்குள் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய நோயாளர்கள் படும் வேதனை சொல்லமுடியாது.
முதலில் படுக்கையாளர்களை ஏற்றினார்கள்.
கப்பல் வந்தது என்று தெரிந்தவுடன் இடைவிடாது தொடர்ந்து கடற்கரையை குறிவைத்து ஷெல் தாக்குதல் நடந்தப்பட்டுக் கொண்டேயிருந்தது.
கப்பலில் குறைந்த எண்ணிக்கையான நோயாளர்களை அனுப்பிவைக்க அதைவிட பல மடங்கு காயமடைந்தவர்கள் கொண்டுவரப்பட்டனர்.
மருத்துவமனை நோக்கி தொடர்சியாக இராணுவத்தின் எறிகணைத் தாக்குதல்கள்
நடைபெற்றுக்கொண்டிருந்தன
2009 ஏப்பிரல் 29 திகதி மாலை சிறிலாங்கவின் கடற்படை மற்றும் தரைப்படையின் கொடூரத்தாக்குதல்கள் முள்ளிவாய்க்கால் கனிஸ்ட உயர்தர வித்தியாலத்தில் தற்காலிகமாக இயங்கிய மருத்துவமனை மீது நடத்தப்பட்டது. பாடசாலை பிரதான கட்டடத்தின் ICU விடுதியாக இயங்கிய மையப்பகுதியிலும் ஒரு எறிகைண விழுந்தது .
இதில் காயமடைந்து மருத்துவ மனையில் இருந்து பல காயமடைந்த மக்கள் மீண்டும் படுகொலை செய்யப்பட்டதுடன். காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மக்கள் மீண்டும் காயமடைந்தனர்.
இந்த கொடூர தாக்குதலில் இன்னும் பலர் தொகையாக கொல்லப்பட்டு இருப்பார்கள்
ஆனால் அன்று காலை ICU விடுதியில் இல் இருந்த பல நோயாளர்கள் நீண்ட நாள் பின்னர் வந்த ICRC கப்பல் மூலம் மேலதிக சிகிச்சைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
அதனால் தான் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரளவு குறைவாகவிருந்தது .
அன்று காலை ICRC பிரதிநிதிகள் மூலம் இங்கு மருத்துவ மனை இயங்குகின்றது என்பதை சிறிலாங்க அரசிற்கு தெரியப்படுத்திய பின்னர் இத்தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது
அதன் பின் உயிர்தப்பிய நோயாளர்களுடனும் எஞ்சியிருந்த மருத்துவ உபகரணங்களுடனும் முள்ளிவாய்க்கால் அ.த.க.பாடசாலையிலை இருந்த இடத்திற்கு இடம்மாறுகின்றோம் அங்கே ஒரு ஒற்றைக்கட்டிடம் நாம் அங்கு செல்வதற்கு முன்பே காயமடைந்தவர்களை கொண்டுவரத் தொடங்கியிருந்தார்கள். அங்கேயும் எறிகணை வெடிப்பு பூமி இருளாக இருந்தாலும் சீறிவரும் சின்னங்களும் சிதறி வெடிக்கும் குண்டுகளின் தீப்பிளம்புகளும் பூமியின் இருளை விழுங்கி அச்சமூட்டும்
மே 14 15’16 இந்த நாட்கள் இதயத்தின் இறுதி நாளமும் அறுக்கப்பட்டதாய் அந்தரித்துப் போனோம் .
காயமடைந்தவர்கள் ஒரு புறம் இறந்தவர்களின் உடல்கள் என வேறு பாடற்று மருத்துவமனை இயங்கிய பாடசாலைவளாகம் முழுவதும் நிறைந்து கிடந்தது
இறந்தவர்களின் உடல்கள் அகற்றப்படாமல் ஈக்கள் மொய்த்து துர்நாற்றம் வீசத்தொடங்கியது
படுகாயமடைந்தமக்களையும் பிரிந்து எடுக்க முடியாமல் உயிரற்ர உடலின் அருகில் கிடந்தே முனகினார்கள்.
.நிமிடத்திற்கு நிமிடம் இறப்புகள் கண்முன்னே நடந்து கொண்டிருந்தன.எம் மால் எதுவும் செய்யமுடியவில்லை ஒரளவு எழுந்து நடக்ககூடியவர்கள் இவ்விடத்தை விட்டுப்போனார்கள்.
முள்ளிவாய்க்கால் அ.த.க பாடசாலையில் இறுதியாக இயங்கிக் கொண்டிருந்த மருத்துவமனையை அண்டிய பகுதிக்கு இராணுவம் வந்து விட உடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது . உயிரிருந்தும் பிணமாகவே நடந்தோம் நாமும்
படு காயமடைந்த உறவுகளை தூக்கிக் கொண்டு போகவும் முடியாமல் அந்த இடத்தில் வீட்டிற்று தாங்கள் மட்டும் போகவும் முடியாமல் இரத்த உறவுகள் கதறித் துடித்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கு நடைபெற்ற துயரச்சம்பவங்கள் எண்ணற்றவை .மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தன. இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டிருந்தது. அதுவும் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கூட உலகம் கண்டிக்கவில்லை.