கேரளாவை மிரட்டும் ‘நைல்’ காய்ச்சல்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
Share
கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேரும், மலப்புரம் மாவட்டத்தில் 6 பேரும் என மொத்தம் 10 பேர் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பின்னர் 9 பேர் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இருப்பினும், காய்ச்சல் குணமாகவில்லை. கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவரின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து 10 பேரின் மாதிரி சேகரிக்கப்பட்டு, எந்த வகை காய்ச்சல் என்பதை கண்டறிய கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி நுண்ணுயிர் பிரிவு ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் முடிவில் 10 பேருக்கு ‘நைல் காய்ச்சல்’ பாதித்து உள்ளது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து சேகரித்த மாதிரி பரிசோதனைக்காக புனேயில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் நைல் காய்ச்சல்’ பாதித்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த காய்ச்சல் பாதித்தவர்களுக்கு கடுமையான காய்ச்சல், தலைவலி, வலிப்பு, கை, கால் தளர்ச்சி போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலருக்கு மூளைச்சாவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைத்தொடர்ந்து காய்ச்சல் பாதித்தவர்களுக்கு மூளை பாதிப்பு ஏற்படாமல் இருக்க கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் 79 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கேரள மாநில அரசு மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தீவிர தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கும் பணிகளை துரிதப்படுத்தி உள்ளது. குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:- கேரளாவில் மிரட்டும் வகையில் வேகமாக பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சலில் 100 இல் 80 பேருக்கு அறிகுறி தெரியாது. கியூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவும் நைல் காய்ச்சலை தடுக்கும் வகையில் கொசு உற்பத்தியாகும் பகுதிகளை கண்டறித்து அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு கொசுக்கடியில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையினர் மூலம் துப்பரவு பணிகளை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.