இலங்கையின் மிகவும் உயரமான மனிதனாம் குணசிங்கம் கஜேந்திரன்
Share
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – கைவேலி பகுதியில் இலங்கையின் மிகவும் உயரமான மனிதனாம் குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார். இவர் யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்டவர்.
இவர் 7 அடி 2 அங்குலம் உயரத்தினை கொண்டிருப்பதனாலேயே இலங்கையில் தற்போது உயரமான மனிதனாக இடம் பிடித்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான 45 வயதுடைய இவர் முச்சக்கர வண்டி ஓட்டுநராக இருக்கின்றார். இவர் அதிக உயரமாக இருப்பதனால் முச்சக்கரவண்டிக்குள் அமர்ந்திருப்பது கூட கடினமானதாகும்.
தனது அசாதாரண உயரத்தால் எண்ணற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவதாகவும், இலங்கையில் தனது கால்களின் நீளத்திற்கு ஏற்ற பாதணிகளை எடுக்க முடியவில்லை எனவும், அவற்றை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
இவர் ஒரு முன்னாள் போராளி ஆவார். இவருக்கு தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உயரிய கௌரவம் வழங்கி சிறப்பாக கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர் இலங்கையின் உயர்ந்த மனிதனாக இருந்தாலும் இவருக்கு வழங்கவேண்டிய அங்கீகாரத்தையும் செலுத்த வேண்டிய அக்கறையையும் பேணுவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது. இவரது குடும்பம் தற்போது மிகவும் வறிய நிலையில் காணப்படுகிறது. அத்துடன் இவருக்கு காலில் ஒருவிதமான நோய் ஏற்பட்டு பல தடவைகள் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது காலில் ஏற்பட்ட நோய் தாக்கம் இதுவரை குணமடையவில்லை
இவர் ஒரு தமிழர், அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினராக இருந்தமையால் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையா என மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.
இவ்வாறானவர்களுக்கு ஏனைய நாடுகள் உயரிய கௌரவத்தை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.