“இந்தியா அனைத்து படைவீரர்களையும் திரும்பப் பெற்றது” – மாலத்தீவு அரசு தகவல்!
Share
மாலத்தீவில் இருந்து தங்களது அனைத்து படை வீரர்களையும் இந்தியா திரும்பப் பெற்றுவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்று வந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார். மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் முயற்சி இருப்பதாக பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன் வைத்து, மாலத்தீவு அமைச்சர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டனர். மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு சீனாவின் அதிபரை சந்தித்தார். பின்னர் நாடு திரும்பிய அதிபர், மார்ச் 15-ம் தேதிக்குள் இந்திய அரசு மாலத்தீவில் உள்ள தனது ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று அதிபர் கேட்டுக் கொண்டார். இதனிடையே, மாலத்தீவு நாடாளுமன்றத்தில் பிப். 5-ம் தேதி உரையாற்றிய அதிபர் முகமது மூயிஸ், வெளிநாட்டு ராணுவ இருப்பு தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் நாட்டின் இறையாண்மை சார்ந்த விவகாரங்களில் சமரசம் செய்யும்படியான எவ்வித ஒப்பந்தங்களுக்கும் அரசு அனுமதிக்காது என்றும் தெரிவித்தார். முதல்கட்டமாக மார்ச் 10-ம் தேதிக்குள் ஒரு விமான தளத்திலும், மே 10-ம் தேதிக்குள் மீதமுள்ள 2 விமான தளங்களிலும் பணிபுரிகின்ற இந்திய ராணுவ வீரா்கள் வெளியேறுவார்கள் என தெரிவித்தார். அதனடிப்படையில் மார்ச் 12-ம் தேதி 25 வீரர்களைக் கொண்ட முதல் குழுவை இந்தியா திரும்பப் பெற்றது. இந்நிலையில் அந்நாட்டு அதிபர் மாளிகை தலைமை செய்தித் தொடர்பாளர் ஹீனா வலீத், செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நாட்டில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய வீரர்களின் கடைசி பிரிவு வெளியேறிவிட்டது” என தெரிவித்தார். எனினும், மொத்தம் எத்தனை இந்திய வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது குறித்த சரியான எண்ணிக்கையை ஹீனா வலீத் தெரிவிக்கவில்லை. மாலத்தீவில் 89 இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு முன்பு கூறியிருந்தது. மாலத்தீவில் மூன்று ராணுவ தளங்களை இயக்கும் இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெற முகமது முயிஸு வலியுறுத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீர்குலைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.