புதிய யானை வழித்தட திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்’’ – பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை!
Share
மக்களின் கருத்தை பெறாமல் அவசர கதியில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய யானை வழித்தட திட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
யானைகளின் பழைய வழித்தடங்களை மாற்றி, புதிய வழித்தடங்களை ஏற்படுத்துவதாக வனத்துறை தெரிவித்துள்ள கருத்துக்கு விவசாய சங்கங்கள், மலைகிராம மக்கள் என பொதுமக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மனித – யானை மோதலை தடுக்கும் நடவடிக்கை எனக்கூறி தமிழக அரசின் வனத்துறை புதிதாக 21 யானை வழித்தடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய யானை வழித்தட அறிவிப்பு நீலகிரி மாவட்டம் கூடலூர் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம், இந்த அறிவிப்பால் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் சுமார் 46 கிராமங்கள் (ஓவேலி உட்பட) மற்றும் 37,856 வீடுகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. கிட்டத்தட்ட கூடலூர் தொகுதியின் 80 சதவீத பகுதி யானை வழித்தடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மீது பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்து மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்க குறுகிய கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டது. மேலும் இந்த திட்டம் குறித்த அறிவிப்பு முழுவதுமாக ஆங்கிலத்தில் இருந்ததால், சாதாரண பொது மக்கள் புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளது. ஆகவே, மக்களின் கருத்தை பெறாமல் அவசர கதியில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தை தமிழக அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். வனத்துறையின் அறிவிப்பு கூடலூர் பகுதி மக்களை முழுவதுமாக வாழ்வாதாரத்தை இழக்க செய்யும் செயலாக உள்ளது. எனவே தமிழக அரசு இதில் உரிய கவனம் செலுத்தி திட்டத்தில் உள்ள சாதக பாதகங்களை ஆய்வு செய்து புதிய யானை வழித்தட திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.