யாழ்ப்பாணத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட சர்வதேச தாதியர் தின நிகழ்வு!
Share
பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர் நலன்புரி சங்கத்தின் எற்பாட்டில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு 12-05-2024 அன்று, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாநிதி த.சத்திய மூர்த்தி கலந்து கொண்டார்.
இதன் போது யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் முதல் தாதியர் சேவையினை ஆற்றிய அமரரின் திருவுருவ சிலைக்கான முதன்மை சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. பின்னர் இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது
இதன் போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாநிதி த.சத்தியமூர்த்தி கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் இப்போது 45 ஆயிரம் தாதியர்கள் கடமையில் இருக்கின்றார்கள். உலக வங்கியின் கணிப்பின்படி இலங்கையில் ஒரு லட்சம் பொதுமக்களுக்கு 240 தாதியர்கள் கடமையாற்றுகின்றார்
கள். இதனை நாம் ஏனைய நாடுகளோடு ஒப்பீடு செய்தால் ஒரு லட்சம் பொது மக்களுக்கு அமெரிக்காவில் 1250 தாதியர்களும், அவுஸ்திரேலியாவில் 1080 தாதியர்களும் ஐக்கிய ராஜ்யத்தில் 920 தாதிர்களும், சிங்கப்பூரில் 620 தாதியர்களும் கடமையாற்றுகின்றார்கள்.
வளர்ந்து வரும் நாடுகளிலும் இலங்கை போன்று தாதியர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. குறைவான தாதியர் எண்ணிக்கையில் பூரண சேவையை வழங்குவதில் இலங்கை பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது.
இலங்கையின் சுகாதார சேவை வளர்ச்சி அடைந்த (Developed Countries) நாடுகளின் சுகாதார சேவையை நோக்கி பயணிக்கின்றது. இருப்பினும் சுகாதார சேவைக்கான நிதி ஒதுக்கீடு, மனிதவளம் என்பன குறைவாகவே காணப்படு கின்றது. எதிர்காலத்தில் தாதியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு அவர்களுக்கு குறிப்பிட்ட அளவு கடமைகளும் ஓய்வும் வழங்கப்பட வேண்டும்.
தற்போதைய நிலையில் பல வைத்திய சாலைகளில் அவர்களுக்கான விடுப்பு வழங்கப்படாமல் கட்டாய கடமைக்கு அமர்த்த படுகின்றார்கள். அர்ப்பணிப் போடு செய்யப்பட்ட பல சம்பவங்கள் ஏதும் ஊடகங்களில் கிரமமாக வெளிவர வில்லை. ஏதாவது ஒரு சம்பவத்துக்கு பின்னர் ஒட்டுமொத்த தாதியர்களும் எதிரான கருத்துகளும் பொதுமக்களின் மனநிலையும் அவர்களுக்கு நிச்சயம் மனச்சோர்வை ஏற்படுத்தி இருக்கும்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை பொறுத்தவரையில் 680 தாதியர்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.1350 படுக்கைகளை கொண்ட இந்த வைத்தியசாலையில் தினசரி அனுமதிக்கப்படுகின்ற நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கும், பல்வேறு கிளினிக் பிரிவுககளில் சிகிச்சை பெறும் 2500 மேற்பட்ட நோயாளிகள், மற்றும் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கும் என சேவைகளை வழங்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றோம்.
அண்மைய காலங்களில் வைத்தியசாலைகளில் காணப் படுகின்ற குறைபாடுகள் மற்றும் மற்றும் பிரச்சனைகள் ஊடகங்களின் ஊடாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இலங்கையில் சுகாதார சேவை மேலும் வலுவடைய அதிகளவு நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்ட ஆளணியும் போதிய பயிற்சியும் முக்கியமானது ஏன்றார்.
இதில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் , பணி நிலை குழாமினர், பதவி நிலை உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.